வா! வா! முருகா! வடிவேல் அழகா!

தமிழர்கள் வாழ்வில் தேரும் திருவிழாவும் பிரிக்கமுடியாத ஒன்று. அதிலும் குறிப்பாகச், சித்திரை தொடங்கி பங்குனி வரையிலும் உள்ள நிலாக் காலம் முழுவதும் விழாக்காலங்கள்தான்.
பங்குனி உத்திரத் திருநாளில் முருகப்பெருமானைக் காண்பதற்கு ஆறுபடை வீடுகளையும் நோக்கி, பக்தர்கள் படையெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தப் பங்குனி உத்திரத் திருநாளில்தான் முருகப்பெருமான்; சூரபத்மனையும் அவன் தம்பியரையும் வதம் செய்து அந்த வெற்றியின் பரிசாகத் தெய்வானையை மணக்கின்றார். இத்திருநாளை நாம் பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகின்றோம் என்று நான் எழுதிக்கொண்டிருக்கும்போது நண்பர் பரமசாமி என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்.
‘வாங்க! வாங்க! பங்குனி உத்திரத்தன்று பரமசாமியைப் பார்ப்பதில் பரமதிருப்தி’ என்றேன் நான் மகிழ்ச்சியோடு. அவரும் மிக மகிழ்ந்து எல்லா நல்ல நாட்களுக்கும் வாழ்த்துச் சொல்லுவதுபோல, ‘உங்களுக்குப் பங்குனி உத்திரத் திருநாள் வாழ்த்துகள்’ என்று ஆனந்தம் பொங்கக் கூறினார். பின்னர் என்னைப் பார்த்து,
‘ஐயா! நாம் தைப்பூசத்திற்குப் பழனி சென்றோமே, அதை இன்னொருதரம் எனக்குச் சொல்லுங்களேன், முருகப்பெருமானின் பெருமையை எப்போது கேட்டாலும் எப்படிக் கேட்டாலும் மகிழ்ச்சிதானே!’ என்றார். பின்னர் நான் அவருக்குச் சொல்லத் தொடங்கினேன்… நீங்களும் கேளுங்களேன்…
‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ எனும் முழக்கம் அந்த நள்ளிரவிலும் பழனி செல்லும் பாதையில் வழிநெடுகிலும் கேட்டுக்கொண்டே இருந்தது.
‘ஐயா! இந்த அழகான பின்னிரவில் வெண்ணிலவு வெளிச்சத்தில் கொஞ்சதூரம் இந்த பக்தர்களோடு நடந்துபோவோம்’ என்று சொல்லிக்கொண்டே பரமசாமி காரை நிறுத்தச் சொல்லி இறங்க, நானும் இறங்கிக்கொண்டு வண்டியை மெதுவாக முன்னே ஓட்டிச் செல்லுமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்டோம்.
ஆறுபடை வீடுகளில் ஒன்றாகிய ‘திருஆவினன்குடி’ என்றழைக்கப்படுகின்ற ‘பழனியம்பதி’யிலே ‘துள்ளிவருகுது வேல்’ எனும் தலைப்பில் மறுநாள் பேசுவதற்காக பழனியை நோக்கி நாங்கள் சென்றபோதுதான் திடீர் பாதயாத்திரையைப் பரமசாமி தொடங்கி வைத்தார்.
ஆச்சரியத்தப் பார்த்தீங்களாய்யா! ஆறுவயது பையனும் நடக்கிறான்…. அறுபத்தஞ்சு வயது பாட்டியும் நடக்குது!’ என்று வியப்போடு சொன்னார் பரமசாமி.
நானும் உடனே, ‘நீங்கள் சொல்லுவது உண்மைதான். குழந்தைகளுக்கு பாலமுருகனாய், இளைஞர்களுக்கு வீரமருகனாய், முதியோர்களுக்கு ஞானமுருகனாய், வேலன், வேடன், விருந்தனாகத் தோற்றமளிப்பவன் தமிழரின் பழமைக் கடவுளாகிய முருகப்பெருமான்’ என்றேன்.
‘இந்த ஊருக்குப் பழைய பெயரே பழனிதானா?’ என்று பரமசாமி கேட்க, ‘இல்லை… இல்லை…. சங்ககாலத்தில் ‘பொதினி’ என்ற பெயரில் இவ்வூர் இருந்ததாகவும், கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய, மயிலுக்கும் போர்வை தந்த ‘வையாவிக் கோப்பெரும்பேகன்’ எனும் குறுநிலமன்னன் இப்பகுதியை ஆண்டதாகவும் அறிகிறோம்’ என்று நான் சொல்லிக்கொண்டு வரும்போதே, நூற்றுக்கும் மேற்பட்டோர் தோள்களில் காவடியை ஏந்தி எங்களைக் கடந்துசென்று சாலையோரத்தில் இருந்த ஒரு வட்டப் பாறையில் முருகனின் பெயரைச் சொல்லி ஆடத் தொடங்கினார்கள்.
“கருணை முருகனைப் போற்றித் – தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றிக் – கொழும்
கனல் ஏறிய மெழுகாய்வரு பவர்எவரும், இகமேகதி
காண்பார்; இன்பம் பூண்பார்”
எனும் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து பாட்டுக்கேற்ப தோளில் காவடியோடு வட்டமாகச் சுழன்று பக்தர்கள் ஆட, அந்த இடம் தெய்வலோகமாகக் காட்சியளித்தது.
‘பார்த்தீர்களா…. இன்னிசையும், தமிழும், ஆன்மீகமும், ஆட்டக் கலைகளும் எளிய மக்களிடத்தில் இறைபக்தியாக உயிரோடு கலந்திருக்கிறது. இந்தப் பாடலையும் ஆடலையும் கேட்டு முருகப்பெருமானே சொக்கி இறங்கி வரமாட்டாரா?’ என்று நான் பரமசாமியைக் கேட்க,
‘நிச்சயம் வருவார், அதுமட்டுமில்லை… இந்தப் பக்தகோடிகளுக்கு ஆடும்போதும் பாடும்போதும் களைப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, அதோ பார்த்தீர்களா, அந்த வேனில் இருந்து நெய்வழியும் சர்க்கரைப் பொங்கலையும் அனுப்பியிருக்கிறார்’ என்று அகமும் முகமும் மலரச் சொன்னார்.
அவர் சொன்னது உண்மைதான். செல்வம் நிறைந்த பலர் கார், வேன், லாரிகளில் வந்து சுவை மிகுந்த உணவுகளையும், வலிபோக்கும் மருந்துகளையும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கிச் செல்வர், அவரே செல்வர்.
‘தைப்பூச நாளுக்கு எப்படி இத்தனை பெருமை வந்தது?’ என்று சர்க்கரைப் பொங்கலைச் சுவைத்தபடியே கேட்டார் பரமு.
‘திருஞானசம்பந்தர் பெருமான் திருமயிலைப் பதிகத்தில் பூம்பாவை குறித்துப் பாடும்போது,
“மைப்பூசும் ஒண்கண்…”எனத் தொடங்கும் பாடலில்
“தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய்”
எனத் தைப்பூச நன்னாளைப் பாராட்டிப் பாடுகின்றார். கடலூரில் வாழ்ந்த வள்ளலாராகிய இராமலிங்க அடிகள் இத்தைப்பூச நாளில்தான் ஜோதியில் கலந்தார். மதுரையை ஆண்ட திருமலை மன்னரின் திருநட்சத்திரம் தைப்பூசம்.இந்நாளில்தான் அவர் உருவாக்கிய வண்டியூர் தெப்பக்குளத்தில் ஆலவாய் அண்ணலும் அங்கயற்கண்ணியாகிய மீனாட்சியும் முழுநிலவு நாளில் தெப்பத்தில் உலாவருவார்கள்’ என்று நான் சொல்ல, அந்தப் பக்தர்கள் கூட்டத்திலிருந்த ஒரு சிறுவன் வந்து எனக்கும் பரமசாமிக்கும் நெற்றியில் திருநீறு பூச, பழனி பாலமுருகனே நேரில் வந்ததாக நாங்கள் ஆனந்தப்பட்டோம்.
“வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா! வா! வா! முருகா வடிவேல் அழகா!” என்னும் பக்தர்களின் கலகலப்பான ஓசையோடு பயணம் தொடங்கியது என்று நான் சொல்லி முடித்தவுடன்,
‘ஐயா! பங்குனி உத்திரத்தை அடுத்து…’ என்று பரமசாமி இழுக்க, ‘சித்திரைதான்’ என்றேன் நான் சிரிப்போடு.