வால்ட் விட்மனும்… பாரதியும்…

கவிதை உலகில் உலகம் முழுவதும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை பலருக்கு உண்டு என்று சொன்னாலும் அமெரிக்காவில் பிலடெல்பியா மாநிலத்தில் பிறந்த வால்ட் விட்மனுக்கு முக்கியப் பங்குண்டு என்று உலக இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். கவிதைகளின் வடிவத்தில் இல்லை அதன் உயிர், உட்பொருளில்தான் இருக்கிறது என்று அதுவரை கவிதை வடிவத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை மாற்றி உள்ளடக்கத்துக்கும் வரலாம் என்று சொன்னவர்தான் வால்ட் விட்மன்.
தமிழகத்திலே எட்டயபுரத்திலே பிறந்த மகாகவி பாரதி தான் கற்ற ஆங்கிலக் கல்வியின் பயனாக ஜோன் கீட்ஸ், ெஷல்லி, பைரன் போன்ற கவிஞர்ளோடு வால்ட் விட்மனையும் கற்று மகிழ்ந்தார். தன்னுடைய பெயரைக்கூட ெஷல்லிதாசன் என்று அழைத்துக்கொண்டார் பாரதி. வால்ட் விட்மனின் ‘புல்லின் இதழ்கள்’ என்னும் புதுக்கவிதை வடிவமே உலகெங்கும் உள்ள மக்களால் விரும்பி படிக்கப்பட்டது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியத்துறை (Comparative Literature) தொடங்கியபிறகு, பலர் தங்களுடைய முனைவர்ப் பட்ட ஆய்வுக்கு வால்ட் விட்மன் போன்ற மேல்நாட்டுப் படைப்பாளர்களின் படைப்புகளை எடுத்து ஆய்வுசெய்து பட்டம் பெற்றனர்.
2003ஆம் ஆண்டு பெட்னா அமைப்பின் மூலம் நான் முதன்முதலில் அமெரிக்கா சென்றபோது நியூஜெர்சியில் தங்கியிருந்தேன். அப்போது பிலடெல்பியா தமிழ்ச்சங்கத்தில் என்னைப் பேச அழைத்தார்கள். பிலடெல்பியா சென்ற நான், வால்ட் விட்மன் வாழ்ந்த வீட்டைப்பற்றி அங்கிருந்த தமிழ்ச்சங்கத்தாரிடம் கேட்டேன். அவர்களும் வரைபடங்களில் தேடி எடுத்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
ஊரின் கடைசிப்பகுதியில் கறுப்பின மக்கள் அதிகம் வாழுகின்ற இடத்தில் அவருடைய வீடு இருந்தது. ஆனாலும் கூட, அமெரிக்க அரசாங்கம் அந்த வீட்டைச் சிறப்பாக இன்றைக்கும் பாதுகாத்து வருகிறது. எப்படி என்றால், அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது வால்ட் விட்மன் வாழ்ந்தபோது அந்த வீடு எப்படி இருக்குமோ அப்படியே உயிரோட்டத்தோடு வைத்திருந்தார்கள். அவர் எழுதிக்கொண்டிருந்த பேனா, சாய்வு நாற்காலி, அக்கால ஓவியங்கள் (1819 – 1892) ஆகியவற்றைப் பார்த்த நான் பிரமித்துப் போனேன். அத்தோடு அவருடைய சமாதிக்கும் நான் சென்று வந்தேன். அதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அவர் கல்லறை இருந்த தோட்டம் முழுவதும் விட்மன் குடும்பத்தாருக்குச் சொந்தமானதாக இருந்தது. அங்கு அவருடைய தாத்தா தொடங்கி அத்தனை பெயருடைய பேரும் விட்மன் என்று முடிவதால் வால்ட் விட்மனின் கல்லறையைக் கண்டுபிடிக்க நான் பெரும்பாடு படவேண்டியதாயிற்று.
மேல்நாடுகளில் கல்லறைகளைக் கலைநுட்பத்துடன் வைத்திருப்பார்கள். பளிங்குக் கற்கள், நீருற்றுக்கள், பூமரங்கள், பறவைகள், அணில் போன்ற சிறு விலங்குகள் எங்கு நோக்கினும் பூந்தோட்டம் என்று நம்மை மயக்கும். என் கூட வந்த நண்பர்கூட சொன்னார், ‘செத்தாலும் இங்க சாகணும் சார்’ என்றார். பிறகு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வந்தபோது நாம் முக்கியமாகப் பார்க்கவேண்டிய ஒன்று பிலடெல்பியாவில் டெலவேர் ஆற்றின் (Delaware River) மீது அமைக்கப்பட்டுள்ள பாலம் என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு போனார்கள். அந்த அழகிய பாலத்தின் பெயர் விட்மன் பிரிட்ஜ். அந்த ஊருக்குப் பெருமை சேர்ப்பதாக அந்த ஊரில் பிறந்த கவிஞருக்குப் பெருமை சேர்ப்பதாக பாலம் அமைந்திருந்தது.
மீண்டும் 2012ஆம் ஆண்டு ஒருமுறை நானும் என் துணைவியாரும் பிலடெல்பியா சென்றபோது, அப்போதும் இந்த அழகிய காட்சிகளையெல்லாம் பார்த்து வந்தோம். வால்ட்விட்மனின் கவிதைகளும் அவர் பயன்படுத்திய நூல்களும் அங்குள்ள பழைய நூலகத்தில் இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டு வருவது அனைவரும் காணவேண்டிய ஒன்று. விட்மனின் கவிதைகள் குறித்தும், அவருடைய வாழ்க்கை குறித்தும் மேலும் சில செய்திகளைக் காண்போம்…
வால்ட் விட்மன் (Walt Whitman) ஒரு அமெரிக்கக் கவிஞர், இதழாளர் மற்றும் கட்டுரையாளர். கடந்தநிலைவாதம் (transcendentalism), மற்றும் யதார்த்தவாதம் (realism) ஆகிய இரு இலக்கிய இயக்கங்களின் கூறுகளையும் இவரது படைப்புகளில் காணலாம். விட்மன் அமெரிக்கக் கவிதையுலகின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர். அமெரிக்கப் புதுக்கவிதையின் முன்னோடியாகக் கருதப்படுபவர்.
அமெரிக்காவின் உன்னதக் கவிஞர்களுள் ஒருவரான வால்ட் விட்மன் நியூயார்க் மாநிலத்திலுள்ள, வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலேண்டில் (long island) 1819ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி பிறந்தார். தமது 12ஆவது வயதுவரை புரூக்லினில் வசித்து வந்த அவர், தமது 11ஆவது வயதின்போது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார். ஆகவே அவர் சிறுவயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டியதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ்களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். வால்ட் விட்மன் தமது 17ஆவது வயதில் பள்ளி ஆசிரியராகச் சிலகாலம் வேலைசெய்தார். 27ஆவது வயதில் புரூக்லினின் தின இதழின் ஆசிரியரானார்.
இவரது கவிதைகள் அனைத்தும் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு, வசனநடையாக எழுதப்பட்டவை. அதனால், ‘வசனநடை கவிதையின் தந்தை’ என்றும் போற்றப்பட்டார்.
வால்ட் விட்மனின் புரட்சிகரமான கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் ஆவேச உணர்ச்சியில் எழுதப்பட்டவையாக இருந்தது. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” (Leaves of Grass) அவராலேயே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப்பட்டது.
வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிவுமறைவின்றி எதையும் வெளிப்படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத்தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப்பட்டன. இவரது ‘ஐ சிங் தி பாடி எலக்ட்ரிக்’ (I Sing the Body Electric), ‘சாங் ஆஃப் மைசெல்ஃப்’ (Song of Myself) ஆகிய 2 கவிதை நூல்களும் மனித உடல், உடல்நலம், பாலுறவு ஆகியவற்றை விவரித்தன. முக்கியமாக இவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டியவர்களுள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் (Ralph Waldo Emerson).
1855ஆம் ஆண்டு 12பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்கவில்லை. பின்னர் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன்முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும், அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி” (Free Soil) என்பைத வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார்.
கருப்பின மக்களை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க ஆபிரஹாம் லிங்கன் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது. அரசின் ஐக்கியப் படைக்கும், கூட்டு மாநிலங்கள் என்ற கன்ஃபெடரேஷன் படைகளுக்கும் இடையே போர் மூண்டது. அதுவே சகிக்க முடியாத ‘சிவில் போர்’ (Civil War) எனப்படும் உள்நாட்டுப் போரானது.
விட்மன் ஐக்கிய படைகளுடன் இணைந்து போர் புரிந்தார். போருக்குப் பிறகு காயமடைந்த சுமார் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு விட்மன் தொண்டு புரிந்தார்.
போர் வெற்றி பெற்றது. அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. இதிலிருந்து 5ஆம் நாளில் ஆபிரஹாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். மனவேதனையில் விட்மன் எழுதிய ‘ஓ கேப்டன், மை கேப்டன்’ என்ற இரங்கற்பா, படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
1910ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பழைய ஆங்கில யாப்புக் கட்டுக்கோப்புகளை எதிர்த்து வால்ட் விட்மன் எதிர்ப்பு குரல் கொடுத்தார்.
‘யாப்பு பழமையின் சின்னம்!
நிலபிரவுத்துவத்தின் எச்சம்!
புதிய இலக்கியத்தின் உரைநடைக்கும் செய்யுளுக்கும் இடையே எவ்வித வேற்றுமையும் இருத்தல் ஆகாது. விஞ்ஞானம், சமுதாயம் பற்றி விரிவாக எழுத வேண்டுமெனில் கவிதை, உரைநடையிலேயே வேறுபாடு இருத்தல் கூடாது, பழைய ஆங்கில யாப்புகள் அடிமைத்தளைகள் என்று கூறுகிறார் வால்ட் விட்மன்.
ஏறத்தாழ இதே ஆண்டில்தான் மகாகவி பாரதி, வால்ட் விட்மன் என்ற தலைப்பில் வசன கவிதை எழுதினார். வால்ட் விட்மனை, நகரம் என்ற தம் கட்டுரையில் மகான் என்று குறிப்பிடுவதால் வால்ட் விட்மனின் தாக்கத்தால் எழுதத் தொடங்கினார் எனவும் கூறுகின்றனர்.
19ஆம் நூற்றாண்டில் கவிதை படைத்த இவருக்கு 20ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் புகழும் பெருமையும் கிடைத்தது. அமெரிக்க புதுக்கவிஞர், புரட்சிக் கவிஞராகப் போற்றப்பட்ட வால்ட் விட்மன் தமது 73ஆவது வயதில் மறைந்தார்.
புல்லின் இதழ்களால் புரட்சி செய்தவர்!