வரலாற்றை நேசிப்போம்…

               தமிழ்நாட்டில் வரலாறு’ என்ற சொல் பல்வேறு வகையான பொருள்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

               வரலாற்று நாயகனே வருக’

               ‘வாழுகின்ற வரலாறே வருக’

               என்று தங்கள் தலைவர்களுக்காகத் தொண்டர்கள் புதிய முழக்கங்களை வெளியிடுகிறார்கள். கிராமங்களிலோ ‘அவன் வாழ்ந்த வாழ்க்கை, அவன் வரலாறு எங்களுக்குத் தெரியாதா’ என்ற நலிந்து போனவர்களைப் பற்றி பேசிக்கொண்டு திரிகிறார்கள்.

               வகுப்பறைகளிலோ ‘ஹிஸ்ட்ரி’ வாத்தியாரும் போரு, ஹிஸ்ட்ரி பாடமும் அக்கப்போரு, ஏன்னா அதுல எப்பப் பாத்தாலும் போருபோருன்னு வருது’ என்று மாணவர்கள் சலித்துக் கொள்கிறார்கள்.

               இன்னும் சிலரோ, ‘நடந்தவைகளைப் பற்றியும், இறந்தவர்களைக் குறித்தும் படிப்பதனால் எதிர்காலத்திற்கு என்ன பயன்? எல்லாரையுமே கம்ப்யூட்டர் படிக்க வைங்க, பில்கேட்ஸ் வேலை கொடுப்பான்’ என்று கம்ப்யூட்டரின் வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு என்பது மன்னர்களையும், அரண்மனைகளையும், அந்தப்புரங்களையும், போர்களையும் பற்றியது மட்டுமன்று.

               விவசாயம் வளர்ந்த வரலாறு, அறிவியல் வளர்ந்த வரலாறு, மருத்துவம் வளர்ந்த வரலாறு, திரைப்படத்தின் வரலாறு, தமிழகத்தின் அரசியல் வரலாறு, மொழி வளர்ந்த வரலாறு நேற்றைய சுவடு போன்று தோன்றினாலும், இவையே எதிர்காலக் கோபுரத்திற்கு ஏறிச்செல்லும் படிக்கட்டுகள் என்பதை மறக்கவேண்டாம்.

               நம்நாட்டில் புகழ்மிக்க, வீரம் செறிந்த நிர்வாகத்தால் பெயர் பெற்ற அரசர்கள் பலர் ஆண்ட வரலாறு இன்றைக்கும்கூட நமக்கு முன்மாதிரியாகத்தான் விளங்குகின்றனவே அன்றி நம்மைப் பின்நோக்கி இழுப்பவை அல்ல.

               எடுத்துக்காட்டாக, இன்றைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி, வாக்குச் சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தமிழகத்தில் உத்திரமேரூர் என்னும் ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று சோழர் காலத்தில் குடவோலை’ முறையால் ஊர்த்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றினைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதாவது ஊர்த்தலைவர்களுக்கு இன்னின்ன தகுதிகள் இருக்க வேண்டுமென்று அந்தக் கல்வெட்டில் ஒரு வியப்பான செய்தி காணப்படுகிறது. அக்கால வேட்பாளர்கள் பொருளாதாரப் பின்னணி உடையவராக இருக்கவேண்டும். குற்றம் செய்து சிறைக்குச் செல்லுதல் போன்ற கண்ணியமற்ற செயல்களால் அவர் தண்டிக்கபடாமல் இருக்க வேண்டும் என, வேட்பாளருக்குரிய தகுதிகளாக அக்கால மக்கள் கருதியிருந்ததை அந்தக் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அவர்களுடைய பெயர்களை இளம்பனைக் குருத்து ஓலையில் எழுதி, அவற்றைச் சுருட்டி ஒரு குடத்தில் இட்டு, அதிலிருந்து ஒரு பெயரை எடுத்து, அந்தப் பெயருள்ளவரே தலைவராக அறிவிக்கப்படுவாராம். இதையெல்லாம் நாம் வரலாற்றின் மூலமே அறிய முடிகிறது.

               வரலாறுகள் மர்மக்கதையின் பக்கங்களைப் போலவே விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்தவை. எனவே வரலாறுகளை வாசிக்கவும், நேசிக்கவும் கற்றுக்கொள்வோம்.

               ஒரு வரலாற்று ஆசிரியர் மாணவரிடம், ‘2ஆம் பானிப்பட் போர் ஏன் நடந்தது?’ எனக் கேட்டாராம். அதற்கு  அந்த மாணவன் ‘முதலாம் பானிப்பட் போர் ஒழுங்காக நடக்காததால் 2ஆம் பானிப்பட் போர் நடந்தது’ என்றானாம்.

               வரலாறுகள் இரசிக்கவோ, நகைக்கவோ அல்ல. அதற்கும் மேலே, அதற்கும் மேலே…

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.