வரலாற்றுத் தொலைநோக்கி… தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்

நான் அயல்நாடுகளுக்குச் செல்லுகிறபோதெல்லாம் அங்குள்ள பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இவற்றையெல்லாம் பார்த்து அவற்றுக்கான காலப்பின்னணியைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். அமெரிக்காவுக்கு முதன்முதலில் பயணப்பட்டபோது (2003ஆம் ஆண்டு) அங்கு அவர்கள் சுற்றிக்காட்டிய பழமையான கட்டிடங்கள் எல்லாம் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவையாகவே இருந்தன. அப்போது நான், ‘எங்கள் தமிழ்நாட்டுக்கு வாருங்கள், ஈராயிரம் ஆண்டுப் பழமையுடைய கோயில்களும், கட்டிடங்களும் எவ்வளவோ உண்டு’ என்று பெருமையாகச் சொல்லுவேன்.
பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே சரித்திரக் கதைகள் மீது எனக்கு அளவற்ற விருப்பம் உண்டு. அதிலும் குறிப்பாகப் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்களை எழுதிய எழுத்தாளர் கல்கி அவர்களுடைய எழுத்தைப் படிப்பதென்றால், எனக்கு நேரங்காலம் போவது தெரியாது. கல்கியைத் தொடர்ந்து சாண்டில்யன், ஜெகசிற்பியன், நா.பார்;த்தசாரதி, அகிலன் ஆகியோரின் வரலாற்றுப் படைப்புகளும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனியிடங்களைப் பிடித்திருந்தது உண்மை.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்களைப் போன்ற எழுத்தாளர்கள் சரித்திரக் கதைகளை எழுதுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யாரென்று பார்ப்போமேயானால் கல்வெட்டு ஆய்வாளர்கள், ஓலைச்சுவடி பதிப்பாளர்கள், பழமையானத் தமிழக வரலாற்றைப் பதிவுசெய்தவர்கள் என்ற பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
அவர்களில் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், இராகவையங்கார், ராசமாணிக்கனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள்ளும் குறிப்பாகத் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்ற நூலே தாம் பொன்னியின் செல்வன் நாவல் எழுதுவதற்குப் பெரிதும் துணை நின்றது என்று குறிப்பிடும் எழுத்தாளர் கல்கி அவர்கள் தன்னுடைய நாவலில் தக்க இடங்களில் சதாசிவப் பண்டாரத்தாருடைய குறிப்புகளைச் சான்றாதாரங்களாக எடுத்துக்காட்டுவார். அதிலும் ‘சின்னமனூர் செப்பேடு’ சோழர் வரலாற்றைச் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதைச் சதாசிவப் பண்டாரத்தாரின் நூல்வழியே நமக்கு எடுத்துக்காட்டுவார் எழுத்தாளர் கல்கி அவர்கள்.
இன்றைய சூழலில் பொன்னியின் செல்வன் நாவல் புத்தகக் கண்காட்சி தோறும் அதிக அளவில் விற்பனையாவதும், ஸ்டோரி டெல் ஆப்பில் (Story tell App) வாசிக்கப்படுவதும், இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை மிகப் பிரம்மாண்டமானத் திரைப்படமாகத் தயாரித்து வருவதையும் நாம் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்கிய தி.வை. சதாசிவப் பண்டாரத்தாரைப் பற்றிய விரிவான செய்திகளைக் காண்போம்…
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளரும், தமிழறிஞருமாவார். இவர் 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கும்பகோணம் அருகிலுள்ள திருப்புறம்பியம் என்னும் ஊரில் பிறந்தார். படிப்பைத் தன் சொந்தஊரிலும், உயர்கல்வியை கும்பகோணத்திலும் பயின்றார்.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை, ஆகியோரிடம் தமிழ் இலக்கணமும், இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார். பின்னத்தூர் நாராயணசாமியின் தாக்கத்தால், இவருக்குக் கல்வெட்டியல் குறித்த ஆர்வம் பிறந்தது.
ஊரைச்சுற்றிலும் இருந்த பண்டைய கோயில்களில் காணப்பட்ட கல்வெட்டுகள் இவரது ஆர்வத்தை மேலும் தூண்டின. வாணதுறை உயர்நிலைப்பள்ளியில் 25ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே எழுத்துப்பணிகளையும் மேற்கொண்டார் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். ‘செந்தமிழ்’ என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவருடைய முதல் கட்டுரை ‘சோழன் கரிகாலன்’, இவருடைய ஆழ்ந்த அறிவையும் வரலாறு குறித்தத் தெளிவானப் புரிதலையும் அக்கட்டுரை எடுத்துக் கூறியது.
1930ஆம் ஆண்டு ‘முதலாம் குலோத்துங்க சோழன்’ என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. ஏராளமான கல்வெட்டுகளை ஆராய்ந்தும், சங்கஇலக்கியங்களை ஆராய்ந்தும் விரிவாக எழுதப்பட்ட இந்த நூல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இவர் தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையையும் எழுதினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்ற பெரிய நூலை எழுதினார். இந்நூல் 1949, 1951 மற்றும் 1961ஆம் ஆண்டுகளில் 3 தொகுதிகளாக வெளியானது. இது தென்னிந்தியாவை ஏறக்குறைய 250ஆண்டுகள் ஆண்டுவந்த சோழர் மன்னர்களைக் குறித்த ஆய்வுநூல். இதில் மன்னர்கள் ஒவ்வொருவரின் பிறப்பு முதல் அரசியல் நிலவரங்கள், ஆட்சிமுறை, போர்கள், முக்கிய நிகழ்வுகள் என அனைத்தையும் விரிவாக எழுதியுள்ளார்.
மேலும் இரண்டு தமிழ் வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார். திருப்புறம்பியம் மற்றும் சேரமாதேவி உள்ளிட்ட பல தல வரலாற்று நூல்களையும் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ளார்.
தி.வை. சதாசிவப் பண்டாரத்தாரின் படைப்புகள் தமிழில் வெளிவந்துள்ள வரலாற்று ஆய்வு நூல்களில் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்கு இவருடைய பங்களிப்பு மகத்தானது.
அரசுப்பள்ளியில் ஆசிரியப்பணியில் இருந்தபோதும், தம்முடைய இடைவிடாத கல்வெட்டு ஆராய்ச்சியாலும், வரலாற்று நுண்ணறிவாலும், தமிழர்களின் மறந்துபோன வரலாறுகளைப் பதிவுசெய்த தி.வை. சதாசிவப் பண்டாரத்தாரை இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நாம் கையெடுத்து வணங்குவோம். ஏனெனில் பயணப் போக்குவரத்துகளும், அறிவியல் வளர்ச்சி அதிகமில்லாத அந்தக் காலத்தில் இவரைப் போன்றவர்களின் ஆர்வமே, உழைப்பே நமக்கு வரலாற்றுப் பொக்கிஷங்களாகக் கிடைத்திருக்கின்றன என்பது உண்மை.
தமிழக வரலாறு உள்ளவரை சதாசிவப் பண்டாரத்தாரின் புகழ் கல்வெட்டாய் நிலைத்திருக்கும்.