வணக்கம்!

காலத்திற்கேற்ற புதுமை, காலத்திற்கேற்ற வளர்ச்சி எனும் குறிக்கோள்களோடு நம்முடைய வலைப்பதிவினை இன்று (19.10.2021) எனது பிறந்தநாளோடு தொடங்குவதில் நான் மகிழ்கிறேன்.
2018ஆம் ஆண்டில் எங்களது நிறுவனமான ‘இயல் டிஜிட்டல்’மூலமாக ஜி.ஞானசம்பந்தன் (G.Gnanasambandan) எனும் யூ – ட்யூப் சேனலைத் தொடங்கினோம். தற்போது அதன் மூலம் நாங்கள் வெள்ளி பட்டனை (Silver button) பெற்ற பெருமையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். மேலும் தற்போது 1,55,000 பேர் நம்முடைய யூ – ட்யூப் சேனலை மகிழ்வோடு பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்குக் கிடைத்து வரும் பெருமைதான்.
இத்தோடு இயல் டிவியின் மூலமாக ‘பொன்னியின் செல்வன்’ தொடரினைத் திருமதி. அர்ச்சனா கார்த்திகேயன் அவர்கள் வழங்கி வருகிறார்கள்.
ஸ்டோரி டெல் (கதை சொல்லி) மூலமாக எனது குரல் பதிவும் தமிழ் கூறும் நல்லுலகத்தாரிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது.
நான் எழுதிய 25நூல்களில் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அமேசான் கின்டலில் (kindle) அனைவரும் பெற்றுப் படித்து வருகின்றனர். மேற்கூறிய அனைத்தும் நானும் எனது தொழில்நுட்பக் குழுவினரும் இடையறாது செய்து கொண்டிருக்கும் பணியின் முயற்சி என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். இனி வலைப்பதிவிற்கு வருவோம்…
இதோ, வலைப்பதிவில் உங்களோடு… இன்று ஒரு செய்தி…
அலெக்ஸாண்டர் கி.மு.336 – 323 கிரேக்கத்திலிருந்து புறப்பட்டு இந்தியாவின் சிந்துநதிக்கரை வரை வந்து தன் வெற்றியைக் கொண்டாடினார். அவரே முதலில் உலகத்தை ஜெயித்தவர் என்று வரலாற்றில் படிக்கின்றோம். வாழ்த்துக்கள்!
எனக்கென்னவோ தற்போது வலைஒளி (you tube) முகநூல்; (Facebook) சுட்டுரை (twitter) கட்செவி (whatsapp) எனும் அறிவியல் சாதனங்கள் மூலமாகத்தான் உலகம் முழுவதையும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
2020ஆம் ஆண்டு நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, சான்ஃபிரான்சிஸ்கோ மாநிலத்தில் பேஸ்புக், யூ – ட்யூப் அலுவலகங்களை சுற்றிப்பார்த்தேன், வியந்துபோனேன். பேஸ்புக்கின் நிறுவனரான மார்க் சுக்கர்பெர்க் (ஆயசம ணுரஉமநசடிநசப) தனது 35ஆவது வயதிற்குள் இந்த அறிவியல் சாதனத்தின் மூலம் கத்தியின்றி இரத்தமின்றி உலகத்தை ஜெயித்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.
ஆம், அமெரிக்காவிலிருந்து முகநூலில் ஆஸ்திரேலியாவையும், அரபுநாடுகளையும், ஆண்டிபட்டியிலிருக்கும் தமிழரையும் தொடர்புகொள்ள முடிகிறதென்றால் இது அறிவியலின் வெற்றிதான். உண்மையில் உலகை ஜெயித்தவர்கள் அறிவியல் அறிஞர்கள்தானோ!
அந்த நிறுவனத்திற்கு நான் சென்றபோது மற்றொரு மகிழ்ச்சியான சந்திப்பும் நிகழ்ந்தது. அந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருவள்ளுவர் படம் போட்ட டி-சர்ட்டோடு என்னை வரவேற்றார்கள். ஆம் நாமும் உலகை ஜெயித்துவிட்டோம், ஜெயிக்கப்போகிறோம்.
(சரி சரி…தினசரி பேசுவோம்)