ரயிலே…. ரயிலே…

               இன்றைக்கும் ரயில் என்றாலே உற்சாகம்தான். அதிலும் ரயில் ஸ்டீம்என்ஜினாகப் புகைவிட்டுக்கொண்டு குப்…குப்… என்று கிளம்பி, வேகம் எடுத்துச் செல்வதைப் பார்க்கையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஒரே ஆனந்தம்தான்.

               நீராவியின் சக்தியை அறிந்த ஜேம்ஸ் வாட்டும்’, நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீபன்ச’னும் இன்றைய நவீன ரயிலை நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

               அதிலும், நம்மூரில் மரவட்டைக்குப் பெயர், ரயில் வண்டிப்பூச்சி. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டிற்குப் பெயர் ரயில் விளையாட்டு என்று, ரயில் நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உயிர்ப் பொருளாகிவிட்டது.

               அந்தக்காலத்தில் நல்லதம்பி’ படத்தில் கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்கள் ‘நந்தனார்’ என்ற பழைய கதையை காலத்திற்கேற்ப மாற்றி, ‘கிந்தனார்’ எனப் பெயரிட்டுக் கதாகாலட்சேபம் செய்வார். அதிலும் கிந்தன் முதன்முதலில் ரயிலைப் பார்த்து வியந்து பாடுவதாக ஒரு பாடல் அமைத்திருப்பார்.

               ரயிலே, நீயும் கடவுளும் ஒண்ணு. கடவுள் காசு உள்ளவனையும் காப்பாத்துகிறார், காசு இல்லாதவனையும் காப்பாத்துகிறார், நீ டிக்கெட் எடுத்தவனையும் ஏத்திட்டுப் போற, எடுக்காதவனையும் ஏத்திட்டுப் போற, ரயிலே, ரயிலே, ரயிலே என்று அந்தப் பாடல் நகைச்சுவையாக அமைந்திருக்கும்.

               தரையில் மட்டும் போய்க்கொண்டிருந்த இரயில் காலப்போக்கில் தரைக்கடியில் செல்ல ஆரம்பித்து, இப்போது பறக்கும் ரயிலாகத் தரைக்கு மேலேயும் போய்க்கொண்டிருக்கிறது.

               நான் இந்த முறை அமெரிக்கா சென்றபோது, அங்கு பூமிக்கு அடியில் செல்லும் ரயிலிலும், சாதாரண ரயிலிலும் பலமுறை செல்ல வேண்டியிருந்தது. அப்போது எங்காவது மாறி இறங்கிவிடக்கூடாது என்பதற்காக, அருகில் இருக்கும் அந்நாட்டுப் பயணியிடம் எனது டிக்கெட்டைக் காண்பித்து, இறங்க வேண்டிய இடத்தை உறுதி செய்து கொள்வேன்.

               ஒருநாள் நியூயார்க் நகரத்திற்கும், நியூஜெர்சி நகருக்கும் இடையில் எடிசன்’ என்ற ஊரில் இறங்க வேண்டியிருந்தது. (இந்த ‘எடிசன்’ என்ற ஊரில்தான் தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பை உருவாக்கினார்) வழக்கப்படி நான், அருகில் நின்றிருந்த அமெரிக்க நண்பரிடம் ‘எடிசன்;’ நிலையம் வந்தால் கூறுமாறு கேட்டேன்.

               அப்போது அவர் ஒரு அரிய செய்தியைச் சொன்னார். அந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியின் உட்புறத்திலும் ரயில் கிளம்பும் நேரம், ஒவ்வொரு ஸ்டேஷனையும் அடையும் நேரம், கடைசியாகச் சென்றடையும்  இடம் எல்லாம் எழுதி ஒட்டப்பட்டிருப்பதைக் காண்பித்தார். மேலும் சொன்னார், “இப்போது மாலை 4 மணி 12 நிமிடம், ரயில் நியூயார்க்கை விட்டுக் கிளம்பிவிட்டது. 4மணி 52 நிமிடங்களுக்கு எடிசன் நிலையத்தில் நிற்பதாக எழுதியுள்ளது. நீங்கள் ஊர்களைப் பார்க்க வேண்டாம். 4.52க்கு வண்டி எங்கு நிற்கிறதோ அங்கு இறங்குங்கள். அது கட்டாயம் எடிசனாகத்தான் இருக்கும். இதில் மாற்றமில்லை” என்றார் உறுதியாக.

               அவர் சொன்னதை நம்பியும் நம்பாலும் ரயில் நின்றவுடன் இறங்கிப் பார்த்தால்… ‘எடிசன்’ தான். வினாடி நேரத்தில் என்னை இறக்கிய ரயில் கிளம்பிவேகமெடுக்க, அந்த அமெரிக்கர், மகிழ்வோடு கையசைத்துச் சென்று கொண்டிருந்தார்.

               நான் நமது ஊரையும் நினைத்துப் பார்த்தேன். இதேபோன்று நமது ஊரிலும் வரவேண்டும். விரைவில் வந்து விடும் என்றும் நம்பிக்கை கொண்டேன். அதேநேரத்தில் நமது ஊர்களில் ரயிலைப் பற்றிய நகைச்சுவைகள் எத்தனை எத்தனை உண்டு என எண்ணிப் பார்த்தேன்.

               மிகமெதுவாகப் போகின்ற ‘பாசஞ்ஜர்’ வண்டிகளைக் குறித்த கதைகளில் ஒன்று…

               தமிழகத்திலே மிக மெதுவாகப் போகிற வண்டி எது? என்று ஒரு வழிப்போக்கன் பல இடங்களில் விசாரித்து, அந்த வண்டி மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்குச் செல்லும் பகல்நேரப் ‘பாசஞ்ஜர்’ வண்டிதான் எனக் கண்டுபிடித்து, அதில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

               ரயிலும் மெதுவாகக் கிளம்பி, மெதுவாக ஊர்ந்து பரமக்குடியைத் தாண்டி அப்படியே நின்றது என்ன? ஏது? என்று எல்லோரும் இறங்கிப் பார்க்க, ரயில் தண்டவாளத்தில் ஒரு எருமை மாடு படுத்திருந்ததாம். உடனே எல்லோரும் ஓடி அதனை விரட்டியடிக்க, கிளம்பிய ரயில் திரும்ப நிற்க, பழையபடி ஒரு எருமைமாடு. திரும்பி விரட்டப்பட, ரயில் கிளம்பி மீண்டும் நிற்க, இப்போதும் ஒரு எருமை மாடுதான்.

               ரயிலில் வந்த வழிப்போக்கன் அருகில் இருந்தவனிடம் கேட்டான், ‘இந்தப்பக்கம் எருமை மாடுகள் அதிகமா?’ என்று, அதற்கு மற்றவன் வேதனையோடு, ‘அதெல்லாம் இல்லை… ஒரே எருமை மாடுதான், ரயிலை முந்தி…முந்தி வந்து தண்டவாளத்தில் படுத்துக்கொள்கிறது’ என்றானாம்.

               இன்றைய இந்தியாவில் ரயில்வே துறைதான் உலகத்திலேயே மிகப்பெரிய ரயில்வே துறையாகப் பாராட்டப்படுகிறது. லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிசெய்யும் துறையும் அதுதான். மின்சார ரயில், மெட்ரோ ரயில் என வளர்ந்துகொண்டிருக்கும் இத்துறையில் புல்லட் ட்ரெயினும் வந்து பயணத்தை விரைவுபடுத்த இருக்கிறது.

எத்தனை நவீன ரயில்கள் இருந்தாலும் ‘கூ’ என்று ஓசை எழுப்பிக்கொண்டு நீராவியைக் கக்கிக்கொண்டு புறப்பட்டுப்போகும். அந்தக்கால ரயில்களும் அதில் ஜன்னலோர இருக்கைகளும் ஊர்தோறும் கிடைக்கும் உணவுப்பொருளும் (மணப்பாறை முறுக்கு, திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழம், விருத்தாசலம் தவலைவடை) இவற்றை ருசித்துக்கொண்டே உடன்வருகின்ற குடும்பங்களோடு பேசிக்கொண்டே செய்த பயணங்கள்தான் நம் கண்முன்னே இன்னமும் நிற்கின்றன.

ரயில் சினேகங்கள் குடும்ப உறவுகளாகவும் மலர்ந்திருக்கும் ஆச்சர்யங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

ரயில் பயணங்கள் தொடரட்டும்…!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.