முருகப்பெருமான் திருக்கல்யாணம்

திருக்கல்யாணம் திருக்கோவில்களில் கடவுளர்களுக்கு நிகழும் திருமணத்தைக் குறிப்பதாகும். இத்திருமணங்களை மீனாட்சி திருக்கல்யாணம், ஸ்ரீநிவாசா திருக்கல்யாணம், முருகப்பெருமான் திருக்கல்யாணம் என வகைப்படுத்தலாம். இவற்றுள் முருகனுக்குரிய திருக்கல்யாணம் சூரசம்ஹாரத்துக்குப் பிறகு நிகழ்கிற மங்கல நிகழ்ச்சியாகும்.
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் சூரபத்மனும் அவன் உடன்பிறந்தவர்களும் துன்பம் இழைத்தபோது அவர்களை அழிப்பதற்குச் சிவனின் வடிவாகவே முருகப்பெருமான் தோன்றுகிறார். தனது வேலாயுதத்தால் அசுரகூட்டத்தை அழித்துச் சிறைப்பட்டிருந்த தேவர்களையும், தேவேந்திரனையும் விடுதலை செய்து காப்பாற்றுகிறார்.
இதனால் தேவர்கள் மனம் மகிழ்ந்தார்கள். தேவர்களுக்கு அதிபதியாகிய இந்திரனும் மகிழ்வோடு தனது மகளாகிய தெய்வயானையை (தெய்வானை) முருகப்பெருமானுக்குத் திருமணம் செய்து கொடுக்க முன்வந்தான். இந்நிகழ்வே திருக்கல்யாணமாகும். இத்திருக்கல்யாணம் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகிய திருப்பரங்குன்றத்தில் நிகழ்வதாக நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை எனும் நூலில் விரிவாகக் குறிப்பிடுகிறார்.
‘உலகின் இருள் விலகும் பொருட்டுச் சூரியன் கடல்மீது தோன்றுவதைப் போல முருகப்பெருமான் நம் மனஇருள் அகல மயில்மீது தோன்றுகின்றான்’ என்பதை,
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்.
எனப் பாடுகிறார்.
இத்திருமண விழாவிற்குச் சிவபெருமானும், உமையம்மையும், திருமாலும், இலக்குமிதேவியும், பிரம்மனும், சரஸ்வதிதேவியும் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து சிறப்புச் செய்வதாக திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
வீரத்தோடு சூரனை வென்ற முருகப்பெருமான் சினம் தவிர்த்து மணமகனாகத் தெய்வயானையைக் கரம்பற்றி மணம்செய்து கொள்வதாகக் காட்டப்படும் நிகழ்வுதான் இத்திருக்கல்யாணம்.
வீரர்கள் எப்போதும் போற்றப்படுவார்கள். வென்று வந்த வீரருக்குப் பரிசுகள் வழங்குவது வழக்கம். அதுபோல வீரமுருகனாகிய ஆறுமுகப்பெருமானுக்குத் தேவர்கள் செய்யும் நன்றிக்கடனாக இத்திருமண நிகழ்வு நடத்திக் காட்டப்படுகிறது.
சூரன் (சூரபத்மன்) நன்றி மறந்தான். அதனால் அவன் அழிவு உறுதியாயிற்று. தேவர்கள் நன்றி மறக்காது முருகப்பெருமானைத் தங்களின் மருமகனாக்கிக் கொண்டார்கள். இத்திருமண வைபவம் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளிலும் சிறப்பாக இன்றும் நிகழ்த்தப்படுகிறது. குறிப்பாகத் திருப்பரங்குன்றத்தில் நிகழும் காட்சியை உலகத்தார் அனைவரும் கண்டு மகிழ்வர்.
மணக்கோலத்தில் காட்சிதரும் முருகப்பெருமானையும் தெய்வயானையையும் போற்றி வணங்குவோம்.
இல்லங்கள்தோறும் மங்கலம் பெருகட்டும்.