முத்திரைக் கதைகளில் முத்திரை பதித்தவர்….

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர் உலகில் தனக்கெனத் தனியே ஒரு சிம்மாசனத்தை உருவாக்கிக்கொண்ட பெருமை எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கே உண்டு.
நான் பள்ளியில் படிக்கிற காலங்களில் ஆனந்தவிகடனில் இவருடைய கதைகள் தொடர்ச்சியாக முத்திரைக் கதைகளாகப் பரிசு பெற்று வந்ததை நான் அறிவேன். என் தந்தையார் என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். பாரதம், இராமாயணம் இவற்றோடு நவீன கால இலக்கியம் என்று வரும்போது கல்கி, ஜெயகாந்தன் போன்றோருடைய படைப்புகளையும் படிக்கச் சொல்லுவார்.
குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் ஜெயகாந்தனுடைய ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை நான் படிக்கும்போதும், அதில் வருகிற ஓவியர் கோபுலு அவர்களின் ஓவியங்களைப் பார்க்கிறபோதும் பெருமகிழ்வு அடைவேன் (2003க்குப் பிறகு கலைஞானி கமல்ஹாசன் அவர்களுடைய நட்பு எனக்குக் கிடைத்தது. அவரிடத்தில் ஒருநாள் இந்த நாவலை ஏன் படமாக்காமல் போனீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரும் ‘அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். ஹென்றி பாத்திரத்தில் நடிப்பதற்காகத் தயாராகக்கூட இருந்தேன். அதற்கேற்ற சூழ்நிலை அமையவில்லை’ என்றார் அமைதியாக)
தொடர்ந்து முத்திரைக் கதைகளில் தன் எழுத்தினால் முத்திரை பதித்தவர் ஜெயகாந்தன் ஒருவர்தான். எப்படியாவது வாழ்க்கையில் ஒருமுறையாவது இவரைப் போன்ற படைப்பாளர்களைச் சந்தித்துவிடவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். ஒருமுறை மதுரையில் ‘ஆனந்த விகடன்’ மணியன் அவர்கள் தன்னுடைய ‘இதயம் பேசுகிறது’ பத்திரிக்கை விழாவிற்கு ஜெயகாந்தன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களை அழைத்து வந்தார். அப்போது அவரது பேச்சைக்கேட்டு மகிழ்ந்திருக்கிறேன், வியந்திருக்கிறேன்.
ஜெயகாந்தன் அவர்கள் நான் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் படித்தபோது எங்கள் கல்லூரிக்கு ஒருமுறை வந்து மிக அருமையாகப் பேசினார். மாணவர்களுடைய கேள்விகளுக்கும் கலகலப்பாக பதில் உரைத்தார்.
சென்னையில் எனக்கொரு அனுபவம்… பிட்டி தியாகராயர் அரங்கில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசுகிற கூட்டத்திற்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். நான் மேடையில் இருந்து எழுந்து அவரை வணங்கினேன். மகிழ்வோடு அவரும் வணக்கம் சொன்னார். பின்னர் நான் பேசும்போது இரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவர் எழுந்து வெளியில் செல்ல முயன்றபோது, நான் கிருபானந்த வாரியார் அவர்கள் சொன்ன ஒரு ஜோக்கைச் சொல்லி ‘சொல்லின் செல்வர்’ பட்டம் தனக்கு ஏன் கொடுத்தார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், நான் சொல்லின்… அவர் செல்வர்… என்று எழுந்து போன மக்களைப் பார்த்து வாரியார் சுவாமிகள் சொன்னதாகவும், நான் சொன்னதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்த ஜெயகாந்தன் வாசற்படியில் நின்று, ‘ஞானசம்பந்தன்.. நான் செல்லவில்லை, இதோ வந்துவிட்டேன்!’ என்று சொன்னபோது சபையே சிலிர்த்துப்போனது.
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமாகவும், பெருமைமிகுந்த அனுபவமாகவும் நான் இந்நிகழ்வை நினைத்துப் பார்ப்பது உண்டு. எழுத்துத் துறையிலும், பேச்சுத் துறையிலும், திரைப்படத் துறையிலும் சாதனைகளைச் செய்து காட்டியவர் ஜெயகாந்தன். அத்தோடு, ‘பாதை தெரிகிறது பார்’ எனும் படத்தில் வருகின்ற ‘தென்னங்கீற்றின் ஓலையினிலே… சிட்டுக்குருவி பாடுது… தன் பெட்டைத் துணையைத் தேடுது…’ எனும் பாடலைத் திரைப்படத்துக்காக எழுதியிருப்பார் ஜெயகாந்தன். இதேபோல் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் லாரி டிரைவராக வருகின்ற பாத்திரம் பாடுகின்ற பாடல்களெல்லாம் ஜெயகாந்தனுடைய கவிதை வரிகள்தான்.
எழுத்துலகில் தாம் எழுதிய காலத்தில் பெற்றப் புகழில் சிறிதும் குறையாது எழுதாத காலத்திலும் தம் இறுதிக்காலம் வரையிலும் பெற்ற பெரும் எழுத்தாளர் இவர்தான். இத்தகைய எழுத்து ஜாம்பவானைப் பற்றிய மேலும் செய்திகளை மேலும் காண்போம்…
ஜெயகாந்தன் அவர்கள் மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 1934ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் முருகேசன் ஓரளவே இவர் படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்துத் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளை கொண்டவர்.
ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்களைக் கொண்டு தமிழ் இலக்கியத்திற்கு அருந்தொண்டாற்றியவர் என்று சொன்னால் அது மிகையாகாது.
பொதுவுடைமைக் கோட்பாடுகளையும், பாரதியாரின் எழுத்துக்களையும் தன் மாமாவின் வாயிலாக அறிந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறினார். ‘ஜனசக்தி’ அலுவலக அச்சகத்தில் பணியாற்றியபோது, அங்கு பல தலைவர்கள் பேசுவதைக் கேட்டு இலக்கியத்தில் நாட்டம் பிறந்தது.
ஜெயகாந்தன் அவர்களின் முதல் சிறுகதை 1950இல் ‘சௌபாக்கியம்’ என்ற இதழில் வெளிவந்தது. அதன்பிறகு தொடர்ந்து பல இதழ்களில் எழுதினார். ‘சரஸ்வதி இதழில்’ இவரது படைப்புகள் வெளிவரத் தொடங்கிய பிறகு, ஓரளவு பிரபலமானார். ‘தாமரை’, ‘கிராம ஊழியன்’, ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’, ‘குமுதம்’ உள்ளிட்ட இதழ்களிலும் இவரது கதைகள் வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’ உள்ளிட்டஇவரது படைப்புகள் திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. இலக்கிய உலகில் புகழ்பெற்ற இவருக்குத் திரைப்பட உலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 1964ஆம் ஆண்டு ‘ஆசிய ஜோதி பிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி நண்பர்களின் கூட்டு முயற்சியால் ‘உன்னைப் போல் ஒருவன்’, படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. பின்னர் ‘யாருக்காக அழுதான்’, ‘புதுச்செருப்பு கடிக்கும்’ ஆகிய திரைப்படங்களை இவரே இயக்கவும் செய்தார்.
ஜெயகாந்தன், 40 நாவல்கள், 200 சிறுகதைகள் பல்வேறு வாழ்க்கை வரலாறு, குறுநாவல்கள், கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். ‘வாழ்விக்க வந்த காந்தி 1973’, ‘ஒரு கதாசிரியனின் கதை’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘ரிஷிமூலம்’, ‘கருணையினால் அல்ல’, ‘கங்கை எங்கே போகிறாள்’ ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். மேலும் இவர் எழுதிய முன்னுரைகள் தொகுக்கப்பட்டுத் தனிநூலாக வெளியிடப்பட்டது. இவரது பல படைப்புகள் இந்திய மொழிகளில் உட்பட உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் கம்யூனிஸ்ட் கொள்கைகளிலிருந்து மாறுபட்ட ஜெயகாந்தன், காமராஜரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் அவரது தொண்டனாக மாறி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, 2002ஆம் ஆண்டு இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். மேலும் 2009ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருதை தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறைப் பெற்றார். இதுதவிர 1972ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடமி விருது’, 2011ஆம் ஆண்டு ‘ரஷ்ய விருது’ எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஜெயகாந்தன் எழுத்தில் ஜெயித்துக்காட்டி காந்தம் போல் வாசகர்களைக் கவர்ந்தவர்! என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் தன் படைப்புகளால், தான் படைத்த பாத்திரங்களால்.