முத்தமிழ் வித்தகர்… கொத்தமங்கலம் சுப்பு

தமிழ்த்திரையுலகில் நடிகராகக், கவிஞராக, எழுத்தாளராக, ‘ஒளவையார்’ என்ற படத்தை இயக்கிய பெருமையுடையவராகத் திகழ்ந்தவர்தான் பல்துறைக் கலைஞரான கொத்தமங்கலம் சுப்பு அவர்கள். தில்லானா மோகனாம்பாள், ராவ் பகதுர் சிங்காரம், பந்தநல்லூர் பாமா, போன்ற புதினங்களை ‘ஆனந்தவிகடன்’ வார இதழில் எழுதியவர். மிகச்சிறந்த கவிஞர், மிகச்சிறந்த நகைச்சுவையாளர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கான சான்றினை ஒரு பதச்சோறாகக் காண்போம்…
கிராமத்தில் நிலத்தை உழுதுகொண்டிருக்கின்ற விவசாயிக்கு அவன் மனைவி கஞ்சி கொண்டு செல்கிறாள். உழுது முடித்து வந்தவன் கலையத்திலிருக்கும் கஞ்சியை ஒரு வாய் குடிக்கிறான். உடனே அவன் மனைவி, ‘மச்சான் கொஞ்சம் இரு’ என்று சொல்லிவிட்டு, தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த உப்பினை அந்தக் கஞ்சியில் போட்டுக் கரைத்து அவனுக்குக் கொடுக்கிறாள். அந்தக் கஞ்சியை ரசித்து, ருசித்துக் குடித்த அந்த விவசாயி, ‘ஆஹா! இந்தக் கஞ்சியில் போட்டு ருசியோடு குடிப்பதற்காகத்தான் கடலிலே உப்பை இந்தக் கடவுள் உருவாக்கித் தந்திருக்கிறான்’ என்று சொல்லிவிட்டு அதைப் பாட்டாகப் பாடுகிறான்.
‘கஞ்சிக்கு உப்புக்கல் வேண்டி
இந்தக் கடலைப் படைத்தான்டி
அந்தச் சொடலப் பேயாண்டி…’
இவ்வளவு இனிமையாக எளிமையாகக் கொத்தமங்கலம் சுப்பு அவர்களைத் தவிர யாரால் பாட முடியும்.
கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் காந்தியடிகளின் வரலாற்றைக் ‘காந்திமகான் கதை’ என்ற பெயரில் தொடராக எழுதி, அதனைப் புத்தகமாகப் போட்டாராம். ஆனால் அந்தப் புத்தகம் அதிகம் விற்பனையாகவில்லையாம். பின்னர் அதே காந்திமகான் கதையை இவர் வில்லுப்பாட்டாகப் பாட ஆரம்பித்த பிறகு, மக்கள் கூட்டம் கூட்டமாக அதை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினார்களாம். கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் அப்படிப் பாடி அந்தக் கதையைச் சொல்லிக்கொண்டு வரும்போதே, காந்தியடிகள் சுடப்படுகின்ற காட்சி வருமிடத்தில் மாலை மாலையாகக் கண்ணீர் விடுவாராம்.
இந்த வில்லுப்பாட்டைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஒருவன், ஒருநாள் கொத்தமங்கலம் சுப்புவிடம் வந்து, ‘ஐயா, காந்தியடிகள் சுடப்படுகின்ற இடம் வருகிறபோது எப்படி அப்படிக் கண்ணீர் விடுகிறீர்கள்’ என்று ஆர்வமாய்க் கேட்டானாம். அதற்கு சுப்பு அவர்கள், ‘காந்தி அவர்களைப் பற்றி, நான் எழுதி விற்காமல் என் வீட்டில் கிடக்கும் அந்தப் புத்தகங்ளை எல்லாம் நினைத்துப் பார்ப்பேன்…. என்னை அறியாமல் அழுகையும் கண்ணீரும் வந்துவிடும்’ என்று நகைச்சுவையாகக் கூறினாராம்.
ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தயாரித்துக் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் இயக்கிய, கே.பி.சுந்தராம்பாளுக்குப் பெரும் புகழை வாங்கித் தந்த ‘ஒளவையார்’ படத்தில் அப்பாவி கணவனாக இவரும், இவரது மனைவியாக சுந்தரிபாய் அவர்களும் வருகின்ற காட்சியை இன்றைக்கும் யாராலும் மறக்க முடியாது.
‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வருகின்ற சிறப்பான காட்சி ஒன்று. அது வைஜெயந்தி மாலாவும், பத்மினியும் போட்டிபோட்டுக்கொண்டு நடனமாடுகின்ற காட்சி, அந்தக் காட்சியில் வருகின்ற ‘கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே…’ என்ற பாடல் இவர் எழுதியதுதான். இதேபோல் ஜெமினியின் தயாரிப்பில் வெளிவந்த மற்றொரு படமான ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் ‘மனமே முருகனின் மயில் வாகனம்….’ என்ற பாடலும் இவர் எழுதிய பாடல்தான். இத்தகைய பெருமைகள் வாய்ந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்களைப் பற்றி மேலும் விரிவான செய்திகளைக் காண்போம்….
கொத்தமங்கலம் சுப்பு கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா, வில்லுப்பாட்டு இசைக்கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடக நடிகர் எனப் பன்முகத் திறமைகொண்டவர்.
கொத்தமங்கலம் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் 1910ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார்.
எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். கொத்தமங்கலம் என்ற ஊருக்குக் குடிபெயர்ந்து, அங்கே வணிக நிறுவனம் ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றினார். இயல்பிலேயே நாடக ஆர்வமும், கவிபாடும் ஆற்றலும் இவருக்கு இருந்தது. ஓய்வுநேரத்தில் தவறாது நாடகம் பார்க்கச் சென்றுவிடுவார். பலமைல் தூரமானாலும் நடந்து சென்று நாடகம் பார்ப்பார். மறுநாள் நண்பர்களிடம் பாடல்களைப் பாடியும், நடித்தும் காண்பிப்பார். நாடக ஆர்வம் அதிகரிக்கவே, நண்பர்களுடன் இணைந்து ஒரு சிறு நாடகக் குழுவைத் தொடங்கி, அவ்வப்போது நாடகங்கள் நடத்தினார்.
நாட்டுப்புறப் பாடல்கள் இயற்றுவதில் இவர் வல்லவர். 1930களின் இறுதியில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இயக்குநர் கே.சுப்பிரமணியன் மூலம் இவருக்குக் கிடைத்தது.
தென்னிந்திய திரைப்படத்தொழில் மும்முரமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாடக அனுபவம் பட வாய்ப்புகளை இவருக்குப் பெற்றுத் தந்தது. சுப்பு அவர்கள் 1936ஆம் ஆண்டு ‘சந்திரமோகனா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகன் எம்.கே.ராதாவின் தோழனாக நடித்தார். அக்காலகட்டத்தில் ‘பட்டினத்தார், மைனர் ராஜாமணி’, ‘அநாதைப் பெண்’, போன்ற படங்களிலும் தலைகாட்டத் துவங்கினார்.
கொத்தமங்கலம் சுப்புவின் திறமையைக், கலைஆற்றலை உணர்ந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன், அவரைத் தன்னுடனேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார். ஜெமினியில் சுப்பு அவர்களின் கொடி பறக்க ஆரம்பித்தது. கொஞ்சநாட்களிலேயே வாசனின் பிரியமான நண்பராகவும் ஆகிப்போன சுப்பு, ஜெமினி கதை இலாகாவில் முக்கியப் பங்காற்றினார்.
ஜெமினி ஸ்டுடியோவில், கொத்தமங்கலம் சுப்பு நடிகர், கதாசிரியர், இயக்குநர், கதை வசனகர்த்தா, கவிஞர் எனத் தன் பன்முகத் திறமையால் திறமையுடன் இயங்கித் திரையுலகில் புகழ்பெற்றார். ஜெமினியில் நான்கு படங்களை இயக்கிய சுப்பு, ஏழு படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். அவரது பல நூறு பாடல்கள் மக்களால் பெரிதும் பேசப்பட்டன. ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார் படம் கொத்தமங்கலம் சுப்புவுக்குப் பெரும்புகழ் அளித்தது. சினிமாவையே பார்த்திராத, அதன்மீது வெறுப்புகொண்ட இராஜாஜி அவர்கள் விரும்பிப் பார்த்த திரைப்படம் ஒளவையார் படம்தான். அத்தனை சிறப்பான முறையில் வாசனின் எண்ணத்துக்குத் திரையில் உயிர்கொடுத்திருந்தார் படத்தை இயக்கிய கொத்தமங்கலம் சுப்பு. படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் அனைத்தும் சுப்பு அவர்களே. 1954இல் ஒளவையார் படக்குழுவினருக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட இராஜாஜி, பக்தவத்சலம் ஆகியோர் ‘தமிழ் உலகுக்குக் கொத்தமங்கலம் சுப்புவும் வாசனும் செய்த சேவையை யாராலும் மறக்கமுடியாது’ எனப் பாராட்டித்தள்ளினர்.
கொத்தமங்கலம் சுப்புவுக்குப் புகழைத் தந்த படங்களில் முக்கியமானது ‘மிஸ் மாலினி’. பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் ‘மிஸ்டர் சம்பத்’ என்கிற நாவலை ஜெமினி நிறுவனத்தார் திரைப்படமாகத் தயாரித்து 1947இல் வெளியிட்டனர். இப்படத்தில் ‘சம்பத்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் கொத்தமங்கலம் சுப்பு. இப்படத்தில் இன்னுமொரு சிறப்பு ஜெமினி ஸ்டுடியோ அலுவலகத்தில் பணியாற்றிய அழகான ஒரு ஊழியர் ஒரு காட்சியில் நடித்திருந்தது. அவர்தான் பின்னாளில் காதல் மன்னன் எனத் திரையுலகில் புகழ்பெற்ற ஜெமினி கணேசன் அவர்கள்.
இந்த ஆண்டில்தான் ஜெமினியின் ‘சந்திரலேகா’ வெளியாகி அதன் வெற்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் அசைத்துப் பார்த்தது. இப்படத்தின் மூன்று வசனகர்;த்தாக்களில் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர்.
‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்துக்குப் பிறகு ஜெமினி நிறுவனத்திலிருந்து சற்று விலகி விகடனில் எழுத ஆரம்பித்தார். ‘கலைமணி’ என்ற பெயரில் அவர் எழுதிய கதைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. விகடனில் அவரது மாஸ்டர் பீஸ் ‘தில்லானா மோகனாம்பாள்’. இப்படம் வெளிவந்த காலத்தில் ஆனந்த விகடன் பரபரப்பாக விற்பனையானது. திரையுலகில் அவர் பெற்ற அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது.
வில்லுப்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் காந்திமகான் கதையை வில்லுப்பாட்டு மூலமாகத் தமிழகம் முழுவதும் நடத்தி, அத்தோடு இராமாயணக் கதையையும் பாடி மகிழ்வித்தார். பாரதியார் கதையைப் ‘பாட்டிலே பாரதி’ என்ற பெயரில் அரங்கேற்றினார்.
கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் 1970க்குப் பிறகு முற்றிலுமாகத் திரையுலகில் இருந்து விலகினார். 1967ஆம் ஆண்டு தமிழக அரசின் ‘கலாசிகாமணி’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1971இல் மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது தந்து கொத்தமங்கலம் சுப்புவைக் கௌரவித்தது.
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழிலும் வித்தகர் கொத்தமங்கலம் சுப்பு.