மாமதுரை போற்றுவோம்…

மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்ட நாளாகிய இன்று மதுரையைப் பற்றி கொஞ்சம் யோசிப்போமே….
“மதுர மதுரன்னு பெருமை பேசுறாங்களே…. அப்படி என்ன மதுரையில் இருக்கு?” என்று வகுப்பறையில் மாணவர் ஒருவர் எழுந்து கேள்விகேட்டார். அவர் கோவைப் பகுதியிலிருந்து முதுகலை படிக்க வந்தவர். ‘மாமதுரை போற்றுவோம்’ என்று மதுரையில் 3 நாட்கள் நடந்த விழாவின் பெருமைகளைப் பேசியபோதுதான் அம்மாணவர் அப்படிக் கேட்டார்.
இதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்பாக, ‘எங்க மதுரையில் பழமையான வைகை ஆறு இருக்கு’ என ஒரு மாணவரும்,
‘ரெண்டாயிரம் வருசத்துக்கு முந்திய தமிழுக்கு முச்சங்கம் வச்சது எங்க மதுரதான் தெரியுமா?’ என்று ஒரு மாணவியும் சொல்ல,
“பாண்டியர் குதிரை குளம்படியும் – தூள்
பறக்கும் இளைஞர்; சிலம்படியும் – மதி
தோண்டிய புலவர்தம் சொல்லடியும் – இளம்
தோகையர்தம் மெல்லடியும்
மயங்கி ஒலிக்கிற மாமதுரை – இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை”
என ஒரு மாணவர் ஆவேசமாக வைரமுத்துவின் கவிதையைச் சொல்லிக்காட்ட, முதலில் கேள்விகேட்ட மாணவர் நடுநடுங்கிப்போய், ‘தெரியாம கேட்டுட்டேணுங்கோ’ எனச் சொன்னார்.
நான் உடனே, ‘நல்ல கேள்வி கேட்ட உங்களுக்கு நன்றி. பாய்ந்து வந்து பதில் சொன்ன பாண்டியநாட்டுக்காரங்களுக்கும் நன்றி’ எனச் சொல்லிவிட்டு, ‘எல்லா ஊருக்குமே தனித்தனி பெருமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், மதுரையை எடுத்துக்கொண்டால் ஆற்றங்கரை நாகரிகத்தில் பெருமைபெற்ற கலைநகரங்களில் தலைநகரமாக விளங்குவது இன்றைக்கு மதுரைதான். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு எனும் சங்கஇலக்கிய, நீதிஇலக்கிய நூல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டது இங்கேதான்’.
‘கேட்டீங்களா பிரதர்….. இரண்டாயிரம் வருசத்துக்கு முதல்ல பல ஊர்கள்ல பேசியேயிருக்கமாட்டாங்க. ஆனா எழுத்துக்கு, சொல்லுக்கு, பொருளுக்கு, யாப்புக்கு, அணிக்குன்னு பாட்டுப்பாடுன புலவர்கள் வாழ்ந்தது எங்க ஊரு!’ என்று விடாமல் சொன்னார் அந்தப் பாடலைச் சொன்ன மாணவர்.
‘இந்த நூற்றாண்டிலும்கூட மனோதைரியமும், நகைச்சுவை உணர்வும் மதுரை மக்களுக்கு மண்ணோடு கலந்த உணர்வு, துள்ளிவர்ற ஜல்லிக்கட்டு காளையைப் பாய்ந்து அடக்குற வீரமும், தமிழ்ப்பாடலில் பிழை இருந்தால் அவர் சிவனாக இருந்தாலும், “நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே” என வாதாடிய நக்கீரர்கள் வாழ்ந்த ஊர்” என்று நான் சொன்னேன்.
‘அப்ப பூராவுமே பழைய பெருமைதானாக்கும்’ என்று ஒரு சேலத்து மாணவி மெதுவாகக் கேட்க,
‘என்ன அப்படி கேட்டுப்புட்டீக. சுதந்திரப்போராட்ட காலத்துல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வந்து கொடியேத்திருக்காக தெரியும்ல! அவருக்கு இன்னைக்கும் இங்க சிலை இருக்கு; அவர்பேருல நேதாஜிரோடும் இருக்கு’ என்றொரு மாணவி ‘மதுர அப்பத்தா’ போல பேசிக்காண்பித்தார்.
‘காந்தியடிகள் குஜராத்துல பிறந்தாலும், தென்னாப்பிரிக்கா போய்ட்டுவந்தாலும், இந்தியாவுல இருக்குற உழவர்களுக்கான ஆடை வேட்டியும் துண்டும்தான் என்பதை உணர்ந்து, எங்க ஊர்லதான ஈரங்கியக் கட்டி, வெள்ளைக்கார பீரங்கிய எதிர்த்தாரு!’ என்றொரு மாணவர் ‘விருமாண்டி’ ஸ்டைலில் பேசினார்.
‘மகாகவி பாரதி தமிழாசிரியராகப் பணிபுரிந்து இராஜா சேதுபதி உயர்நிலைப்பள்ளியில்தான். அவருடைய ‘தனிமை இரக்கம்’ எனும் கவிதை ‘விவேகபாநு’ என்கின்ற மதுரை இதழில்தான் முதன்முதலில் அச்சேறியது’ என்றேன் நான்.
‘இம்புட்டு ஏங்க…. தமிழ் சினிமாவுல 1931இல் முதல் பேசும்படம் வந்துச்சே…. ‘காளிதாஸ்’ அதுக்கு முதல்பாட்டு எழுதுனதே எங்க ஊர் “மதுரகவி பாஸ்கரதாஸ்தான்” என்றொரு மாணவர் சொன்னார். ‘எல்லா ஊர் மண்ணுலயும் உலகைப் படைத்த கடவுள் வந்துரப்பாரு; நடந்துருப்பாரு. ஆனா, மதுரை மண்ணைத்தான் சிவபெருமான் தன் தலையில சுமந்தாரு. பிட்டுவாங்கித் தின்னு, பிரம்படியும் பட்ட இடம் எங்க மதுரதான்’ என்றொரு மாணவர் அன்பொழுகச் சொன்னார்.
‘மதுரையினுடைய பெருமையை நாங்க பேசிட்டோம். சேலத்து மாம்பழமும், சிறுவாணி தண்ணீர் ருசியையும் நீங்க ஒருநாளைக்கு பேசுங்க’ என்று நான் சொல்லி முடிக்க, மணி கலகல என முழங்கியது.