மழைக்காலமும் மத்தாப்புகளும்…

“ஐப்பசி அடைமழைக்காலம்” அப்டீன்னு அந்தக்காலத்துல பெரியவுங்க
சொல்லுவாங்க. 15 நாள் விடாம ஐப்பசிமாசத்துல மழைபெஞ்சதெல்லாம் நான்
கண்ணார பார்த்துருக்கிறேன்’ அப்படீன்னு அந்தத் திண்ணையில உட்கார்ந்திருந்த
98வயசு தாத்தா கண்ணாடி போடாமலேயே கண்கள் பளபளக்கச் சொன்னார்.
‘அந்தத் தீபாவளிதான் எங்களுக்குத் தலைதீபாவளி. இடுப்புத் தண்ணியில
இவரு கையைப்பிடிச்சுக்கிட்டு ஆத்துக்குள்ள நடந்துபோயி எங்க அப்பா வீட்ட
அடஞ்சப்ப எங்கத் தெருவே சந்தோசப்பட்டுச்சு’ என்று தன்னுடைய 95 வயதிலும்
நாணம் முகத்தில் படர அந்தப் பாட்டி சொன்னபோது கேட்டுக்கொண்டிருந்த
பேரன், பேத்திகள் எல்லோரும் கைதட்டினார்கள்.
‘அப்படீன்னா அன்னிக்கு நீங்க வெடி விடலையா?’ என்று வீடியோ
கேம்ஸில் விளையாடிக்கொண்டிருந்து கொள்ளுப்பேரன் கேள்வி கேட்க,
‘விட்டாரு… விட்டாரு… ஓலவெடி விடுறதுக்குள்ள ஊரையே கூட்டிட்டாரு,
அப்புறம் நான்தான் யானைவெடியை கையில பிடிச்சு அப்படியே
தூக்கிப்போட்டேன்’ என்று பாட்டி வீரமாகச் சொல்ல, அப்ப நீ யானை மாதிரி
இருந்த, அதனால யானை வெடி விட்ட, நான் ஊசிபட்டாசு மாதிரி இருந்தேன்,
அதனாலதான் ஓலவெடி விட பயந்தேன், ஏன்னா நான் ஒன்னியவும்
காப்பாத்தனும் பாரு’ என்றார் தாத்தா பெருமிதமாக.
அப்ப தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் எல்லாம் எங்க வாங்குவீங்க?’ என்று பேத்தி
ஆர்வமாய்க் கேட்க, தாத்தாவும் பாட்டியும் சற்று யோசித்தார்கள். ‘இனிப்பு
பலகாரத்தைத்தான் சொல்றா’ என்று 60வயதான அவர்களின் மூத்தமகள்
மொழிபெயர்த்துக் கொடுக்க,
‘அன்னைக்கு எங்க வீட்டுல இட்லிதான் பலகாரம், அதிரசம், முறுக்கையும்
அஞ்சுநாளைக்கு முன்னாடியே செஞ்சு அடுக்குபானையில வச்சிருவோம்.
ஆறுமாசத்துக்குக் கெட்டுப்போகாது’ என்று இருவரும் போட்டிபோட்டிக்கொண்டு
சொன்னார்கள்.
‘உங்க தலதீபாவளிக்கு என்ன படம் ரிலீஸ் ஆச்சு தெரியுமா தாத்தா?
என்று லெக்கின்ஸ் போட்ட பேத்தி கேட்க, சற்று நேரம் யோசித்த கிழவர்,
‘ஹரிதாஸ்ன்னு ஒரு படம், மூணு வருச தீபாவளிக்கு ஒரே படம் ஓடுச்சு.
எம்.கே.தியாகராஜபாகவதருடைய பாட்டுக்காகவே அந்தப் படத்த நான் பத்து
தடவப் பார்த்தேன்’ என்று தாத்தா சொல்ல, ‘இல்ல… இல்ல… அதுல வந்த
டி.ஆர்.ராஜகுமாரியப் பாக்கத்தான் இவரு போனாரு’ என்று குறுக்கேப் புகுந்த
பாட்டியை, ‘நீயும் பாகவதரைப் பாக்கத்தானப் போன’ என்று அவரும் விடாமல்
கிண்டலடிக்க அத்தனை பேரும் ஆச்சரியத்ததோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஐப்பசிமாதத்தில் அடைமழை மட்டுமில்லை, அன்புமழையும் தொடர்வதற்கான
வாய்ப்பிருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். கிராமத்து வீடுகளில்
ஆடிப்பட்டம் தேடிவிதைத்த நெல்மணியானது அறுவடையாகி புதுநெல்லு
புதுமணத்தோடு வீடுகளின் தானியக்களஞ்சியங்களில் நிறைந்திருக்கும்.
எப்போதும் மழைபெய்து கொண்டிருக்கும் காலமாதலால் குடையோடு
திரியும் பெரியவர்களும், மழையில் குதித்து ஆடும் குழந்தைகளும்,
அரிசிச்சாக்கையோ அல்லது நெல்போட்டு வைக்கும் சாக்கையோ கோணிப்பை
மாதிரி செய்துகொண்டு அதைத் தலையில் முக்காடாகப் போட்டுக்கொண்டு
நனைந்தபடி சுறுசுறுப்பாக வேலைபார்க்கும் குடும்பத்தலைவிகளையும் இந்த
மாதத்தில்தான் நாம் காண முடியும்.
இன்னும் அஞ்சேநாள்தான் தீபாவளி’ என்று ஒரு குழந்தை சொல்ல,
‘இல்ல…இல்ல…. நாலு நாள் தான். நாலாநாள் ராத்திரியே தீபாவளி வந்துரும்’
என்று மற்றொரு குழந்தை மறுக்கும்.
ஆமாமா விடிய விடியத் தீவாளி, விடிஞ்சு பாத்தா அமாவாசை அப்டீன்னு
எங்க அப்பத்தா சொல்லும்’ என்னும் இந்தக் குழந்தைகளின் தீபாவளி எதிர்பார்ப்பு
விடுமுறையோடு தொடங்கும்.
தலதீபாளிக்கு மகனும் மருமகளும் என்னக்கி வராங்க’ என்று விசாரிக்க
வரும் சுற்றத்தார்களுக்கு, ‘நாலு நாளைக்கு முன்னாடி வரச்சொல்லியிருக்கோம்.
எப்டியும் வந்துருவாங்க. பொண்ணப் பாத்து ஒருமாசம் ஆச்சு’ என்று ஏக்கத்தோடு
தாய் சொல்ல,
ஏய்! பத்துநாளைக்கு முன்னாடிதான பொண்ணுமாப்பிள்ளைய
கூப்பிட்றதுக்குப் பாக்கப்போனோம்’ என்று அப்பா ஞாபகப்படுத்த, ‘ஆமால்ல’
என்று அதிசயிப்பாள் தாய்.
அதே நேரத்தில் ‘ஏங்க! தலதீவாளிக்கி அப்பாவும் அம்மாவும் வந்து
கூப்பிடிட்டுப் போயிட்டாங்க. நம்ம இன்னைக்கே போயி அவுகளுக்கு ஒரு
அதிர்;ச்சி குடுப்போமா’ என்று ஆர்வமாய் புதுமனைவி கேட்க,
‘குடுக்கலாம், அப்புறம் ஆபீஸ்ல இருந்து எனக்கு அதிர்ச்சி
குடுத்துருவானுங்க.
கவலைப்படத நீ சொன்னமாதிரியும் போவோம், ஒரு புது
ஷாக்கும் குடுப்போம்’ என்று அன்போடு சொல்லும் கணவனை மகிழ்ச்சிப்
பொங்கப் பார்க்கும் மகள்களின் முகத்தில் ஒளிரும் தாய்மைத் தீபாவளியும்,
‘நம்மூர் தியேட்டர்ல தீபாவளி ரிலீஸ்க்கு நம்ம தலைவர் படம் வரலேன்னா
டவுனுக்குப் போயிற வேண்டியதுதான். எல்லாப் பயலுககிட்டேயும் சொல்லி
வையி. காலப்பலகாரம் முடிஞ்சதும், புதுவேட்டி சட்டையோட சைக்கிள்
எடுக்குறோம்… பறக்குறோம்…’ என்று உள்௵ர் இளவட்டங்கள் தலைவரின்
படத்துக்காகத் தீபாவளியை எதிர்நோக்கிக் காத்திருக்க,
‘என்ன! போனஸ் வாங்கின கையோட கிளம்பியாச்சு போலிருக்கு,
குடும்பத்தோட போங்க, குதூகலமா வாங்க’ என்று குடும்பத்தோடு செல்லும்
கணவன் மனைவி குழந்தைகளை பாராட்டி அனுப்பும் பெரியவர்களும், அதனைப்
புன்னகையோடு ஏற்றுக்கொண்டு கடைவீதியை நோக்கிப் போகும் நடுத்தரக்
குடும்பங்களும் தீபாவளியைத் தேடிப்போவது போல போய்க்கொண்டிருப்பார்கள்.
இப்படியெல்லாம் நாம் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக
தீபாவளியை கொண்டாடியிருக்கிறோம். தற்காலத்திலும் மகிழ்ச்சிக்குக்
குறைவில்லை என்றாலும் தொலைபேசியும், அலைபேசியும் வாட்ஸ்அப்பும்
இன்ஸ்டாகிராமும் அத்தனைபேர் கையில் பளபளக்கிறபோது எல்லாவற்றையும்
தீர்மானிப்பது கைபேசிகளும், தொலைக்காட்சிகளும் திரைப்படங்களும்தானோ
என்ற ஒரு எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.
இருந்தாலும் வாட்ஸ்அப்பில் வெடிவெடித்து, வாய்ஸ்மெயிலில்
வாழ்த்துச்சொல்லி, ஃவைபை மூலம் வீடியோவில் அமெரிக்காவில் இருக்கும்
பேரன் பேத்தியோடு பேசிக்கொண்டு புதிய தலைமுறைக்குரிய தீபாவளியை
கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறோம்.
மழைக்காலமானாலும் மத்தாப்புக்கள் ஒளிவீசுவதைப்போல மக்களை
மகிழ்ச்சிப்படுத்தும் தீபாவளி போன்ற திருநாட்கள் எல்லோர் வாழ்க்கையிலும்
ஒளிபரவச் செய்யட்டும். உறவுகள் மலரட்டும். உள்ளங்கள் இணையட்டும்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.