மருத்துவர்களின் மாண்பு… (உலக நீரிழிவு நோய் தினம்)

இன்றைக்கு உலகை அச்சுறுத்தக்கூடிய நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோய் அதாவது நீரிழிவு நோய் கருதப்படுகிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகஅளவில் நீரிழிவு நோயால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. நல்லவேளை இந்நோய் ஒரு தொற்றுநோயாக (Infectious diesease) இல்லை. ஒருமுறைகூட, எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனது அறிவியல் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு இப்படி விடை கூறியிருந்தார்.
கேள்வி:- கணவனுக்குச் சர்க்கரை வியாதி இருந்தால் மனைவிக்கும் வருமா?
சுஜாதா பதில்:- சண்டைதான் வரும்.
ஆனால் இந்நோய் பாரம்பரிய நோயாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஒரு நண்பர்கூட வேடிக்கையாகச் சொல்லுவார். ‘அப்பாட்ட இருந்து சொத்து வராட்டாலும் சுகர் வந்துரும்’ என்று.
இந்த நோய் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை மருத்துவ மாமேதைகளும், அறிவியலாளர்களும் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். இன்று 13.11.2021 மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் டீன் டாக்டர். இரத்தினவேல் அவர்கள் தலைமையில், டாக்டர். விஜயராகவன் மற்றும் டாக்டர். தர்மராஜ் முன்னிலையில், சர்க்கரைநோய் துறையினுடைய தலைவர் மருத்துவர். சுப்பையா ஏகப்பன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சர்க்கரைநோய்ப் பயனாளிகளுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இந்நிகழ்வில் பல்துறை மருத்துவப் பேராசிரியர்கள், செவிலியர் படிப்பு பயிலும் மாணவியர்கள், அத்துறைப் பேராசிரியர்கள் மற்றும் சர்க்கரை நோய்ப் பயனாளிகள் என அனைவரும் பங்கேற்று இருந்தனர். நானும் ‘சர்க்கரையில் அக்கறை’ என்று இனிக்க இனிக்க நகைச்சுவையாகப் பேசினேன். அப்போது கல்லூரி முதல்வர் அவர்கள் பேசும்போது ‘இனிமேல் வருகின்ற தீபாவளியில் குடும்பத்தில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவரும், இனிப்பை மகிழ்வோடு உண்ணுகின்ற நிலைக்கான மருந்து எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட வேண்டும்’ என்று பேசினார். நிற்க!
‘சர்க்கரை நோய்க்கு முக்கியமான மருந்து எது?’ அது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? என்ற கேள்விகள் எழலாம். சர்க்கரை நோயிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கத் தேவையான முக்கியமான மருந்து இன்சுலின். இது 1921 – 22ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆம்! இன்சுலினுக்கு இப்போது நூறு வயது.
இந்த மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர். ஃபிரடெரிக் பேண்டிங்க் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு நாயைக் காப்பாற்ற இன்னொரு நாயின் கணையத்திலிருந்து இன்சுலினைப் பிரித்தெடுத்துப் பாதிக்கப்பட்ட நாயின் உடலில் செலுத்தியபோது அந்த நாய் நலம் பெற்றது. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த பேண்டிங்க் இதைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய மேக்லியோட் என்ற மருத்துவரையும், அவருடைய ஆராய்ச்சி கூடத்தையும் அணுகினார். அவரும் இக்கண்டுபிடிப்பைக் கண்டு வியப்படைந்து பேண்டிங்க் ஆராய்ச்சி செய்வதற்கு உதவி செய்தார். அதன் பின்னர் கன்றுகளின் கணையத்திலிருந்து இன்சுலினைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்தத் தொடங்கினர்.
1922இல் கனடா நாட்டின் தலைநகரான டொரன்டோ மருத்துவமனையில் சர்க்கரை வியாதியால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 11வயது சிறுவனான லியனார்டு தாம்சனுக்கு முதன்முறையாக இந்த ஊசி செலுத்திப் பார்க்கப்பட்டது. அவன் மீண்டெழுந்தாலும் சில சிரமங்களைப் பட்டான். மீண்டும் பேண்டிங்க் அந்த இன்சுலினைப் பெரிதும் முயன்று சுத்தப்படுத்தி அச்சிறுவனைப் பிழைக்க வைத்தார். மனிதஇனம் இந்த நோயிலிருந்து மீண்டெழ ஒரு அருமருந்து கிடைத்துவிட்டது.
இந்த ஆய்வுக்காகப் பேண்டிங்க் அவர்களுக்கு நோபல் பரிசு உறுதிசெய்யப்பட்டது. டாக்டர் பேண்டிங்க் தனக்கு உதவிய மேட்லியோடுக்கும் அந்தப் பரிசுத்தொகையை பகிர்ந்து கொடுக்க முன்வர, திரு.மேட்லியோட் தன்னோடு இருந்து உதவிய ஜேம்ஸ் காலிப் மற்றும் சார்லஸ் பெஸ்ட்டையும் சேர்த்துக்கொண்டு நால்வராக நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்கள். (நன்றி ஆனந்தவிகடன்)
இதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் இந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையாக அவர்கள் என்ன பெற்றார்கள் தெரியுமா? ஒரே ஒரு அமெரிக்க டாலர் தான். அத்தோடு ‘இக்கண்டுபிடிப்பு உலக மக்களுக்குப் பயன்பட வேண்டும். இதனை இலாப நோக்கமில்லாமல், மனித இனத்தை இந்நோயிலிருந்து காப்பாற்ற யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம்’ என்று எழுதியும் கொடுத்தார்கள். மருத்துவ உலகின் மிகப்பெரிய அறமாக இது கருதப்படுகிறது.
இத்தகைய அறம் சார்ந்த மருத்துவர்கள் பலர் இன்றும் உலகெங்கும் இருப்பதால்தான் மனிதஇனம் அச்சமின்றி வாழ்கின்றது.
ஆம்! கடவுளுக்கு அடுத்தபடியாக கையெடுத்து வணங்கத்தக்கவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்தான்.