மனிதக் கணினி செய்குத்தம்பி பாவலர்…

‘அவதானம்’ என்பது ஒரே நேரத்தில் பல செயல்களை ‘அவதானித்தல்’ எனப் பொருள்படும். எட்டுவேலைகளை ஒரே நேரத்தில் செய்கின்ற ஆற்றலுடையவரை ‘அஷ்டாவதானி’ என்றும், பத்து வேலைகளைச் செய்பவரை ‘தசாவதானி’ என்றும், பதினாறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவரை ‘சோடஷ அவதானி’ என்றும் அழைப்பது வழக்கம்.
இந்த ‘அவதானி’ என்ற வடசொல்லுக்குத் தமிழில் ‘கவனகர்’ என்று பொருள். இதேபோல, நூறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவர்களை ‘சதாவதானி’ என அழைப்பார்கள். அத்தகைய சதாவதானிகளில் ஒருவர்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர். இவர் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலைப் பெற்றதோடு ஏக சந்தக் கிராதியாகவும் திகழ்ந்தார். ‘ஏக சந்தக் கிராதி’ என்ற வடசொல்லுக்குப் பொருள் ஒருமுறை ஒரு சொல்லைச் சொன்னால் அதனை அப்படியே உள்வாங்கிக்கொண்டு திரும்பச் சொல்லுகிற திறமை. அத்திறமை உள்ளவர்களை ‘ஏக சந்தக் கிராதி’ என அழைப்பது வழக்கம்.
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு செய்தியைக் குறிப்பிடுவார்கள். அவதானங்கள் செய்கிறபோது பல்வேறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது சபையிலிருப்பவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு விடைசொல்ல வேண்டும். போடுகின்ற கணக்குகளுக்கும் விடை சொல்ல வேண்டும். பாட்டு வரிகள் சொன்னால் அந்தப் பாட்டு வரிகளை முடித்து வைக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றைச் செய்யாமல் போனாலும் அவர் போட்டியில் தோல்வி அடைந்தவராகவே கருதப்படுவார்.
ஒருமுறை செய்குத்தம்பி பாவலர் அவர்கள் சதாவதானம் செய்துகொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து, ஒரு வெண்பாவிற்குரிய ஈற்றடி கொடுத்து அதனைப் பாடி முடிக்குமாறு கேட்டுக்கொண்டாராம். அந்த அடியைக் கேட்ட சபை திகைத்தது. செய்குத்தம்பி பாவலரும் திடுக்கிட்டார். காரணம் சபையிலிருந்தவர் கொடுத்த ஈற்றடி ‘துருக்கருக்கு ராமனே துணை’ என்று இருந்ததாம். செய்குத்தம்பி பாவலர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர். பிறமத தெய்வங்களைப் போற்ற முடியாது. ஆனால் பாடலை முடிக்காவிட்டால் போட்டியில் வெல்ல முடியாது. அப்போது அவர் முறிப்படி என்னும் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு வெண்பாவின் இறுதி அடிக்கு முந்தைய அடியில் இராமபிரானது தம்பிகளான ‘பரத, லட்சுமண, சத்’ என்று வருமாறு பாவலர் அமைத்தார். இந்த அமைப்பின் மூலம் ‘சத்ருக்கருக்கு இராமனே துணை’ என முடித்துக்காட்டி, அனைவரின் பாராட்டையும் பெற்று போட்டியில் வென்று காட்டினாராம்.
இத்தகைய ஆற்றல் மிகுந்த சதாவதானி செய்குத்தம்பி பாவலரைக் குறித்து மேலும் சில செய்திகளைக் காண்போம்….
செய்குத்தம்பி பாவலர் தமிழ்க் கவிஞர், சொற்பொழிவாளர். மத எல்லைகளைக் கடந்து ஆன்மிகப் பணியில் ஈடுபட்டவரும் தமிழகத்தின் முதல் ‘சதாவதானி’ என்ற பெருமைக்குரியவரும் இவரே. இவர் கன்னியாகுமரி மாவட்டத்;தில் உள்ள கோட்டாறு அடுத்த இடலாக்குடியில் 1874ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31ஆம் தேதி பிறந்தார்.
அப்போது அந்தப் பகுதி திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால் பள்ளிகளில் மலையாளமே பயிற்றுமொழியாக இருந்தது. இவரும் மலையாளத்திலேயே பள்ளிக்கல்வியை முடித்தார்.
சங்கரநாராயணர் அண்ணாவி என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்று, இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார் செய்குத்தம்பி. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, ஐம்பெருங்காப்பியங்கள், திருக்குறள், தொல்காப்பியம் என அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். அசாதாரண அறிவாற்றலும் நினைவுத்திறனும்; பெற்றிருந்தார்.
சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். இந்திய விடுதலையில் நாட்டங்கொண்டு காந்தியடிகள் தலைமையில் போராடினார். கதரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ததுடன், தனது வாழ்நாள் முழுவதும் கதர் ஆடைகளையே அணிந்தார்.
அந்தாதியாகவும், சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலையைக் கைவரப் பெற்றார். முதன்முதலாக ஸ்ரீபத்மவிலாசப் பதிப்பகத்தில் பிழை திருத்தும் புலவராகப் பணியாற்றினார். அப்போது சீறாப்புராணத்துக்கு உரையெழுதிப் பதிப்பித்தார்.
‘தமிழ் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி’, ‘திருக்கோப்பற்றுப் பதிஞ்சம்’, ‘பத்தந்தாதி’, ‘திருமதினந்தாதி’, ‘கோப்பந்துக் கலம்பகம்’, ‘கோப்பந்துப் பிள்ளைத் தமிழ்’, ‘கவ்வத்து நாயகம்’, ‘இன்னிசைப் பாமாலை’, ‘நீதிவெண்பா’, ‘ஷம்சுத்தாசின் சேவை’, உள்ளிட்ட ஏராளமான கவிதைகள், வசனநடைக் காவிய நூல்களைப் படைத்தார்.
100வெவ்வேறு விதமான கேள்விகள், சந்தேகங்களுக்குத் தக்க பதில் தருகின்ற ‘சதாவதான’ சாதனையைச் சென்னையில் தமிழ்; அறிஞர்கள் முன்னிலையில் 1907இல் நிகழ்த்திக் காட்டினார். இறைநாம உச்சரிப்பு, கைப்பணி, தலைவரோடு உரையாடல், இலக்கியம், இலக்கணம், இருமுறை கேட்டு வெண்பாவை ஒப்பித்தல் உள்ளிட்ட 16 விஷயங்களில் இக்கேள்விகள், சந்தேகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் ‘முதல் சதாவதானி’ எனப் போற்றப்பட்டார்.
‘நோன்பை மறவாதே’, ‘கள்ளைக் குடியாதே’ உள்ளிட்ட தலைப்புகளில் பேசியும், பாடியும் மக்களின் சிந்தனைகளைத் தூண்டினார். கவிமணியால் ‘சீரிய செந்தமிழ்ச் செல்வன்’ என்றும், பாண்டித்துரைத் தேவரால் ‘தமிழின் நாயகம்’ என்றும் போற்றப்பட்டார்.
கணினிகள் (கம்ப்யூட்டர்), கணிப்பான்கள் (கால்குலேட்டர்) வந்தபிறகு இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களால் இரண்டு இலக்க எண்ணைக்கூட கூட்டவோ, பெருக்கவோ, வகுக்கவோ கருவிகளின் துணையின்றிச் செய்யமுடியவில்லை. ஆனால் நம் தமிழகத்தில் அஷ்டாவதானிகள், தசாவதானிகள், சதாவதானிகள் எங்கும் நிறைந்து இருந்திருக்கின்றனர். மனனக் கல்வி தேவையில்லை என்று சிலர் கூறினாலும், அஷ்டாவதானிகள் எப்படி உருவாவார்கள். இன்னொரு சதாவதானி நமக்குக் கிடைப்பாரா? உண்மையில் மனிதக் கணினி சதாவதானி செய்குத்தம்பி பாவலர்தான்.