மதுரைத் தலங்களும் தேவாரமும்

ஒருமுறை முதுகலை வகுப்பில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களுக்குப் பொருள் கூறிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு மாணவர் எழுந்து ‘ஐயா, திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது ஏழாம்நூற்றாண்டு என்று கூறினீர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்ததற்கானச் சான்றாதாரங்கள் ஏதாவது உண்டா?” எனக் கேட்டார். எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
‘தம்பி நல்ல கேள்வி கேட்டாய். அவர் வாழ்ந்தார் என்பதற்குப் பல சான்றாதாரங்கள் உண்டு.
அவர் செய்த அருஞ்செயல்கள்
நிகழ்த்திய சாதனைகள்
அவர் வந்து சென்ற இடங்கள்
அவர் பயன்படுத்திய மொழி – இவை இன்றைக்கும் நாம் காணுமாறு இருப்பதுதான் சிறப்பு எனலாம்’ என்றேன்.
‘அத்தகைய சிறப்பு ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்களேன்’ என்றான் மாணவன்.
‘திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலங்கள் தமிழகம் முழுவதும் உண்டு. நாம் இருக்கும் மதுரைக்கு அருகில் திருஞானசம்பந்தருக்கு எனத் தனியாக கோவில் அமைந்த ஊர் ஒன்று உண்டு. அது எந்த ஊர் தெரியுமா?’ என்று கேட்டேன்.
வகுப்பு முழுவதும் அமைதியாக இருந்தது. யாரும் பதில் சொல்லவில்லை. பிறகு நானே தொடங்கினேன். ‘சாமநத்தம் என்று ஒரு ஊர் மதுரைக்குத் தெற்கே 8கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தெரியுமா?’ என்றேன். மாணவன் ஒருவன் எழுந்து, ‘ஐயா, அது எங்கள் ஊர்தான்’ என்றான். நான் மகிழ்ச்சியோடு ‘அந்த ஊருக்கு உண்மையான பெயர் ‘சாம்பல்நத்தம்’ என்பதுதான்’ என்று சொல்லி ‘அக்காலத்தில் கூன்பாண்டியன் மதுரையை ஆண்டபோது சமண சமயம் மதுரையில் மேலோங்கியிருந்தது. ‘சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் தண்டிக்கப்பட்டார்கள். இதை மாற்றக் கூன்பாண்டியனின் மனைவியும் பாண்டிய அரசியுமான மங்கையர்க்கரசியும், மந்திரியுமான குலச்சிறையாரும் இறையருள் பெற்ற திருஞானசம்பந்தரைச் சோழநாட்டிலிருந்து மதுரைக்கு வரவழைத்தார்கள்…’
மாணவர்கள் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினர்.
‘மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தருக்கும், மதுரையிலிருந்த சமணர்களுக்கும் அனல்வாதம், புனல்வாதம் எனப் போட்டி ஏற்பட்டது’. அதற்குள் ஒரு மாணவன் எழுந்து, ‘ஐயா, அனல் வாதம், புனல் வாதம் என்றால் என்ன?’ என்று கேட்டான். ‘போட்டியாளர்கள் தங்கள் கொள்கைகளை ஏட்டில் எழுதி நெருப்பில் இடுவார்கள். நெருப்பில் கருகாத ஏடே சிறந்த கொள்கையுடையது. அவரே வெற்றி பெற்றவர் என்பது முடிவு. இதற்கு அனல்வாதம் என்று பெயர்’.
‘இதேபோல ஏட்டினில் பாட்டினை எழுதி வைகையாற்றில் இடுவார்கள். ஆற்றோடு போன ஏடு தோற்றோருடையது. எதிர்த்துச் சென்ற ஏடு வெற்றியடைந்த ஏடு – இது புனல்வாதம். சமணர்கள் ஏடு அனல்வாதத்திலும் புனல்வாதத்திலும் பயனற்றுப் போனது. ஞானசம்பந்தர் தேவாரம் எழுதி இட்ட ஏடு நெருப்பில் ஒளிர்ந்தது, நீரில் எதிர்த்துச் சென்றது. வென்றது’
‘அவ்வாறு திருஞானசம்பந்தரின் ஏடு ஆற்றில் எதிர்த்துச் சென்று கரைசேர்ந்த இடம் எது தெரியுமா? திருஏடகம். அதுதான் இன்று சோழவந்தான் அருகில் உள்ள திருவேடகம் என்ற ஊர்’.
‘ஐயா, அது எங்க ஊர் ஐயா’ என்று ஒரு மாணவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். ‘அப்படியா? அதில் எழுதிய பாட்டு உனக்குத் தெரியுமா?’ என்றேன் ‘தெரியும் ஐயா’ என்று சொல்லி
“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே”
என அத்தேவாரப் பாடலையும் எடுத்துச் சொன்னான் மாணவன்.
“ஐயா, எங்க ஊரை மறந்துட்டீங்களே’ என்றான் சாம்பல்நத்தத்துக்காரன்.
‘மறக்கவில்லை. இப்படி அனல் வாதம், புனல்வாதப் போட்டியிலே தோற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமணர்கள் கழுமரத்தில் ஏறித் தங்களை மாய்த்துக்கொண்ட இடம்தான் சாமநத்தம். அவர்களுடைய உடல்களை எரியூட்டியதால் சாம்பல் மலைபோல் குவிந்ததாம். அதனால் சாம்பல்நத்தம் பிறகு காலப்போக்கில் அது சாமநத்தம் ஆனது. இந்த நிகழ்ச்சியை மக்களுக்கு உணர்த்த திருஞானசம்பந்தருக்கு இவ்வூரில் கோவில் அமைக்கப்பட்டது’ என்று நான் சொல்லி முடித்தேன்.
அதற்குள் ஒரு மாணவன் ‘ஐயா, சமணர்களின் ஏடுகளை ஆறு அடித்துக்கொண்டு போனதாகச் சொன்னீர்கள். அவர்கள் எழுதிய பாட்டு ஆத்தோடு போய் விட்டதா?’ என்று குறும்பாகக் கேட்டான்.
‘நல்ல கேள்வி கேட்டாய். அப்படிச் சமணர்கள் எழுதிய பாட்டுக்கள் (பாக்கள்) கரை சேர்ந்த இடம் மதுரைக்குக் கிழக்கே ‘திருப்பாச்சேத்தி’ என்று நான் சொன்னவுடன்,
‘ஐயா, அது எங்கள் ஊர்தான் ஐயா’ என்று மகிழ்வோடு ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.
‘இன்னும் கேளுங்கள், திருஞானசம்பந்தர் வந்து சென்று அருட்செயல்கள் நிகழ்த்திய இடங்களைப் பற்றிப் பார்த்தோம். அவரது தேவாரப்பாடலில் பயன்படுத்திய ஒரு சொல் இன்றைக்கும் மதுரை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ளது தெரியுமா?’
‘அது என்ன சொல் ஐயா?’ என்று ஒரு மாணவன் கேட்டான்.
இன்றைக்கும் மதுரையில் இருக்கிறது திருஞானசம்பந்தர் மடம், இந்த மடத்தில் அன்றைக்கு திருஞானசம்பந்தர் தங்கியிருந்த போது, சமணர்கள் இரவில் திருஞானசம்பந்தரைக் கொல்வதற்காக மடத்திற்குத் தீ வைத்தார்கள். ஆயினும், சிவனருள் பெற்ற, அம்பிகையிடத்தில் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தரை அந்நெருப்பு நெருங்கவில்லை.
இதற்குக் காரணமாக இருந்தவர்கள் சமணர்கள்தான், அவர்களுக்குப் பின் இருந்தவன் பாண்டியன் மன்னன்தான் என்பதை திருஞானசம்பந்தர் உணர்ந்து நெருப்பினை நோக்கி,
“பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே”
எனப்பாட, நெருப்பு வெப்பு நோயாக மாறி பாண்டிய மன்னனைப் பற்றியது. பிறகு அவ்வெப்பு நோயையும்,
‘மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு’ எனும் தேவாரம் பாடி ஞானசம்பந்தரே தீர்த்து வைத்தார் என்பதும் நமக்குத் தெரியும். இதில் “பையவே” என்ற சொல் மதுரையில் இன்றைக்கும் வழக்கில் உண்டு. இதற்கு “மெதுவாக” என்று பொருள். வேகமாக ஓடுகின்ற ஒருவனை ‘பையப் போடா’ என்றால் ‘மெதுவாகப் போடா’ என்று பொருள். இந்தச் சொல்லைத் தமிழகத்தில் மதுரைக்காரர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான் என்று சொல்லி முடித்தேன்.