பேசுவதற்குத் தூண்டுங்கள்…

சிலவீடுகளில் வினோதமாக இருக்கும். ஒரே வீட்டில் இருப்பார்கள், பக்கத்திலேயே இருந்தும் சரிவரப் பேசிக்கொள்ளாமல், மௌனமாகவே இருப்பார்கள். இது ஒருவகை என்றால் – பேச்சினிடையே திடீரென்று அமைதியாகி விடுவது இன்னும் ஆபத்து.
ஒருவிழா மேடையில், வி.ஐ.பி.க்களைச் சுட்டிக் காட்டியபடி, ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். ‘இவர்கள் அனைவரும் பொறுக்கி…’ என்று சொல்லிவிட்டு, சோடா குடிக்க ஆரம்பித்து விட்டார். மேடையில் இருந்தவர்கள் வெலவெலத்துப் போயினர். சோடாவைக் குடித்துவிட்டு ‘எடுத்த முத்துக்கள்’ என்று பேச்சைத் தொடர்ந்தார்.
நம் வீட்டிற்குப் புதிதாக உறவினர்களோ, நண்பர்களோ வரும்போது, குழந்தைகள் ஆர்வமாகக் கவனிப்பார்கள். ‘யார் இவரு?’ என்று கேட்கும் குழந்தைகளை அலட்சியமாக விரட்டுவார்கள். அப்படியில்லாமல் வந்திருக்கிறவரை, உறவுமுறை சொல்லி, குழந்தைகளிடம் அறிமுகப்படுத்த வேண்டும். குழந்தைகளும் தயக்கம் இல்லாமல் சகஜமாகப் பேச ஆரம்பிப்பார்கள். இந்தத் தொடர்புதான், தனக்கு மற்றவர்களுடைய உறவுகள் முக்கியம் என்கிற உணர்வைக் குழந்தையிடம் உருவாக்குகிறது.
எந்த உரையாடலிலும் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்கின்றன குழந்தைகள்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேச்சுக்கலையைப் பற்றி ஒரு தேர்வு வைத்திருப்பதாகச் சொன்னார்கள். நீச்சலைப் பற்றிக் கட்டுரை எழுதினால் போதுமா? நீந்த வேண்டாமா? அதுபோல, பொதுமேடைகளில் பேசச்சொல்லி மதிப்பெண் வழங்க வேண்டும். பேசுவதற்குத் தயக்கம் காட்டாதவர்கள், தான் வேலைக்குச் செல்கிற இடங்களிலும், ஏதாவது ஒரு பொது வேலையைக் கையிலெடுத்துக் கொண்டு செய்வார்கள். இதைப் பல அலுவலகங்களில் பார்க்க முடியும்.
காரணம், பேச்சுதான் ஒருவனுடைய ஆளுமையை வெளிக்காட்டுகிறது. செயல்பாட்டின் துவக்கம் பேச்சுதான். பேசிவிட்டுச் செயலில் இறங்காதவர்களைப் பற்றி நான் இங்கு சொல்லவில்லை.
ஒரு கூட்டத்தில் 150பேர் இருந்தால் – சிலர் மட்டும் பேச்சுத் திறமையுடன் இருப்பது எப்படி? முனங்கிக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் முன்னேறாமல் அப்படியே இருந்த இடத்தில்தான் இருப்பார்கள்.
நான் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில், ஒருவர் மேடையேறிப் பாடினார். நல்ல குரல் வளம், சளைக்காமல் பாடினார். அப்படியே அசந்துவிட்டோம் எல்லோரும். அவர் ஒரு அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்ப்பவர்தான். திறமையிருந்தும் ‘போதும்’ என்று இருந்து விட்டார் அவர்.
சிலர் முதல் சிறுகதையோ, கட்டுரையோ, வெளிவந்தால் ரசித்துவிட்டு அதோடு எழுதுவதை நிறுத்திவிடுவார்கள். சில பெண்கள் ஒரேயொரு நாட்டிய அரங்கேற்றத்தோடு நடனத்தை நிறுத்தி விடுவார்கள். அவர்களுடைய திறமை அதோடு நின்று போய்விடுகிறது.
பேச்சுத்திறமை அப்படியல்ல. வீட்டிலும் அலுவலகத்திலும், மனம் விட்டுப் பேசும் சூழ்நிலை இப்போது குறைந்து கொண்டிருக்கிறது. எது நடந்தால் எனக்கென்ன? என்ற மனநிலையும் பேசத் தயங்குகிற சூழலில்தான் உருவாகிறது. இளம்வயதிலேயே குழந்தைகளைத் தயக்கமின்றிப் பேசத் தூண்டுங்கள்.
அதன்மூலம் அவர்களுடைய திறமையையும், உலகை எதிர்கொள்ளக் கூடிய துணிவையும் சேர்த்துத் தூண்டுகிறோம் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பேசும் கலை வளர்ப்போம்; பேச்சால் தமிழ் வளர்ப்போம்.