பெருமைக்குரிய பெண்ணினம்…. மகளிர் தினம்…

மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும் அம்மா!
எனப் பெண்களின் பெருமையை அழகாகப் பாடுகின்றார் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை.
மனிதகுலத்தின் தலைமைப்பொறுப்பு பெண்களிடமே இருந்தது. சொத்துடைமை காலத்துக்குப்பின்தான் அது தந்தைவழியாக மாறி ஆண் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தொடங்கினான் என எழுதுகிறார் ராகுல சாங்கிருத்யாயன்.
நமதுநாட்டைப் பொறுத்தளவில் பூமிக்குப் பெயரும் பெண்தான். புண்ணிய நதிகளுக்குப் பெயர்களும் பெண்ணின் பெயர்கள்தான் (சிந்து, கங்கை, கோதாவரி, யமுனை, காவேரி). நமது புராண மரபுகளிலும் பெண்தெய்வங்களுக்குத் தனிஇடம் உண்டு. இந்தியாவின் அறுவகை மதங்களான சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் இம்மதங்களுள் பெண்ணை முழுமுதற் கடவுளாக வணங்குகின்ற மதமே சாக்தம் என்னும் சக்தி வழிபாட்டு மதம்.
தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தில் கல்வியில் சிறந்த பெண்பாற் புலவர்களும் இருந்திருக்கிறார்கள். சான்றாக ஒளவையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் என ஒரு நெடிய பாரம்பரியத் தொடர்ச்சியை நாம் தமிழ் இலக்கிய உலகில் காண்கிறோம்.
இராஜஇராஜசோழனின் பாட்டியாகிய செம்பியன் மாதேவியாரும், இராஜஇராஜசோழனின் சகோதரியாகிய குந்தவை நாச்சியாருமே அவர் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டுவிக்கக் காரணமானவர்கள் என வரலாறு கூறுகிறது.
பாண்டியநாட்டுப் பட்டத்து அரசியாகிய மங்கையர்க்கரசியே பாண்டியநாட்டில் சைவமதம் வளரப் பெருந்துணையாக இருந்திருக்கிறார் என்பதையும் அறிகிறோம்.
போர்க்களங்களிலும் பெண்கள் தேர் ஓட்டி இருக்கிறார்கள் என்பதற்குக் கண்ணனின் மனைவியாகிய சத்தியபாமாவும், இராமாயணத்தில் தசரதனுக்குத் தேர் ஓட்டிய கைகேயியையும் நாம் புராணங்களில் காண்கிறோம். போர்க்களத்தில் எதிரிகளோடு வீரப்போர் புரிந்த வீரமங்கை வேலுநாச்சி, ஜான்சிராணி லெட்சுமிபாய் போன்ற வீராங்கனைகளின் வரலாற்றுத் தொடர்ச்சிதான் இன்றைக்கும் பெண்கள் காவல்துறையிலும், எல்லைப்படைகளிலும், கப்பல், விமானம், விண்வெளிப்பயணம் என எல்லாத்துறைகளிலும் முன்னிருப்பதற்குக் காரணம்.
பெண்களுக்குச் சமஉரிமை வேண்டும் எனக் குரல்கொடுத்துப் போராடிய ஆண்களில் குறிப்பிடத்தகுந்தவர் இராஜாராம் மோகன்ராய். இவரது முயற்சியால்தான் அக்காலத்தில் இருந்த கொடூரப்பழக்கமான கணவன் இறந்தால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும் (சதி) என்ற வழக்கம் மாற்றப்பட்டது. அது குற்றம் என சட்டம் இயற்றப்பட்டது இவர் காலத்தில்தான்.
பெண்களுக்குக் கல்வியே முக்கியமானது என்பதை மகாகவி பாரதியும், பாரதிதாசன் போன்றவர்களும் கவிதைகளில் பாடத், தந்தை பெரியார், தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் போன்றோர் எழுத்திலும், பேச்சிலும் பெண்ணினத்தின் பெருமைகளை உயர்த்திப் போற்றினர்.
இருபத்தோறாம் நூற்றாண்டு பெண்களுக்கான ஆண்டு என்றே நாம் நம்பலாம். கல்வி, சொத்துரிமை, ஆட்சி, அதிகாரம், சுதந்திரம் என அனைத்திலும் பெண்களுக்கான உரிமைகள் கிடைத்து வருவதையும், உலகை ஆளும் உரிமை மீண்டும் அவர்களுக்குக் கிடைத்து வருவதையும் காண்கிறோம். கல்வியில், விளையாட்டில், கலைகளில், வீரத்தில் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டிவருவது போற்றுதலுக்குரிய ஒன்று.
வீட்டை விட்டே பெண்கள் வெளியில் வரக்கூடாது என்கின்ற காலம்மாறி, ஊரை, நாட்டை, ஏன் இந்த உலகத்தையே கடந்து விண்வெளியில் சாதனைபுரிந்த கல்பனா சாவ்லா போன்ற பெண்மணிகளையும் இந்த நூற்றாண்டில்தான் காண்கிறோம்.
“பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா!” எனும் பாரதி வரிகளோடு மகளிர் தின நல்வாழ்த்துகளை மகிழ்வோடு அனைவருக்கும் தெரிவிப்போம்… மகளிரைப் போற்றுவோம்!