பெண்ணரசியின் பேரருள்… (சித்திரைத் திருவிழா)

               கல்லூரியில் முதுகலை வகுப்பில் ஒரு மாணவி எழுந்து, ‘ஐயா சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறோம்’ என்று கேட்டவுடன் பலர் சிரித்தார்கள்.

               ‘சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் கொண்டாடம பிறகு என்ன செப்டம்பர் மாசத்துலய கொண்டாடுவாங்க’ என்று ஒரு பையன் சொல்ல, எல்லோரும் சத்தம்போட்டுச் சிரித்தார்கள்.

     வகுப்பு நடத்திக்கொண்டிருந்த நான், கேள்வி கேட்ட அந்தப் பெண்ணைப் பாராட்டிவிட்டு, அந்தச் செப்டம்பர் மாத பையனைப் பார்த்து, ‘நீ சொல்லேன் சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறார்கள்?’ என்று நான் கேட்க, அந்தப் பையன் ‘இதான் நம்ம சிலபஸ்ல இல்லேல சார்’ என்றான்.

‘இருந்தாலும் சாய்ஸ்ல விட்ருவோம்;’ என்றான் இன்னொருவன். அப்போது நான் சற்றே கடுமையாக, ‘மதுரையில் பிறந்து மதுரையில் வளர்கிற நீங்களே இப்படிப் பேசலாமா?’ என்று சொல்லிவிட்டு, இந்தச் சித்திரைத் திருவிழா கொண்டாடத் தொடங்கி எவ்வளவு காலம் ஆயிற்று தெரியுமா?’ என்று கேட்டேன். வகுப்பே அமைதியாக இருந்தது.

         பிறகு நானே பதில் சொன்னேன். ‘நாயக்கர் காலத்தில்தான் இந்த விழாக்களெல்லாம் தொடங்கியிருக்க வேண்டுமென்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். குறிப்பாகத் திருமலை நாயக்கர் காலத்தில்தான் இந்த விழா தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

அதிலும் தை மாதத்தில்தான் இவ்விழா முதலில் நடப்பதாக இருந்தது. ஆனால் மக்கள் கூட்டம் குறைவாகவும், தேரோட்டத்தின்போது ஊர்கூடித் தேர்இழுப்பதற்கு மக்கள் வராததைப் பார்த்த திருமலை மன்னர் மந்திரிகளை அழைத்து, ‘ஏன் மக்கள் அதிகம் வரவில்லை’ என்று கேட்க,

‘தை மாதம் என்பது இரண்டாம் போக அறுவடைக் காலம். எனவே மக்கள் விவசாய வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்’ என்று மந்திரிகள் சொல்ல, ‘அதுவும் சரிதான்’ என்று ஏற்றுக்கொண்ட மன்னர், இந்த வேலைகள் எல்லாம் முடிந்து மக்கள் ஓய்வாக இருக்கிற காலம் எது? என அறிஞர் சபையைக் கூட்டி, ஆராய்ந்து பார்த்துச், சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதம். விவசாய வேலைகளும் அப்போது நடைபெறாது என்பதை அறிந்து சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதத்தில் கொண்டாட முடிவுசெய்து விழா எடுக்கத் தொடங்கினார்கள்’ என்று நான் சொல்லி முடித்தேன்.

               ‘இந்த சித்திரைத் திருவிழாவுல சிறப்பு என்ன ஐயா?’ என்று மீண்டும் ஒரு கேள்வி எழ, அதற்கும் நான் விடை சொன்னேன். கொடியேற்றத்தோடு தொடங்கி, ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் சிவபெருமானும் பிரியாவிடையும் ஆலவாய் அரசியாகிய அங்கயற்கண்ணி மீனாட்சியும் உலா வருவார்கள். காலைநேரத்தில் கோவிலுக்கு உள்ளும், இரவில் நான்கு மாசிவீதிகளிலும் இந்த உலா நிகழ்ச்சி நடைபெறும்.

               இந்த உலா எதற்காக என்றால்… கருவறையிலிருக்கும் சுவாமி மற்றும் அம்மன் இவர்களின் திருமேனி கற்களால் செதுக்கப்பட்ட திருமேனி. அது கருவறையிலேயே  அமைக்கப்பட்டிருக்கும். உற்சவ மூர்த்தியாகிய வடிவங்கள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டு பின்னர் அலங்கரிக்கப்படும். இத்திருமேனிகளை பலவகையான வாகனங்களில்  ஊருக்குள் வலம்வரச் செய்வார்கள். இதற்கான முக்கியக் காரணம் அந்தக் காலத்தில் கோவிலுக்குள் அனைவரும் செல்லமுடியாது. மற்றும் சுவாமியும் அம்மனும் வீதியுலா வரும்போது அவரவர் வீட்டு வாசலில் அனைவரும் பார்த்து மகிழலாம்.

               உங்கள் இல்லங்கள் தோறும் எழுந்தருளி…”

என்று மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் கூறுவதைப்போல, இறைவடிவங்களை வீட்டுவாசலிலேயே நாம் பார்க்கலாம். கோவிலுக்குச் செல்லமுடியாத வயோதிகர்கள், நோயாளிகள் போன்றவர்கள் இருந்த இடத்திலிருந்தே இறைவனைப் பார்ப்பதற்கு நம் முன்னோர்கள் செய்த சிறந்த ஏற்பாடு இது.

               இத்திருவிழாவில் என்ன சிறப்பு என்று கேட்டீர்கள். தடாதகைப் பிராட்டியாகிய மீனாட்சி மலையத்துவசப் பாண்டியனுக்கும் பட்டத்தரசியாகிய காஞ்சனமாலாவுக்கும் மகளாக நெருப்பிலே தோன்றுகிறாள். ஆண்வாரிசு இல்லாத அவர்கள் இப்பெண்ணரசியையே பேரரசியாக்குகிறார்கள்.

               இத்திருவிழாவில்தான் எம்பெருமாட்டி பட்டத்தரசியாக செங்கோல் பெறுவதும் திக்விஜயம் செய்து முப்பத்து முக்கோடி தேவர்களை வெல்வதும் பிறகு சிவபெருமானைப் பார்த்த பிறகு, நாணித் தலைகுனிந்து அவரைக் கணவராக ஏற்கச் சம்மதிப்பதும் அதன் காரணமாகத் திருக்கல்யாண நிகழ்வும், சிறப்பாக நடைபெறும். பின்னர் தேரோட்ட நிகழ்ச்சியோடு சித்திரைத் திருவிழா மீனாட்சி கோவிலில் சிறப்பாக நிறைவுறும்.

‘வேடர் பரிலீலை, கழுவேற்றம், போன்ற பல்வேறு திருவிளையாடல் புராண லீலைகளை ஐந்தாம் ஆறாம் நாட்களில் நிகழ்த்திக் காட்டுவார்கள்’ என்று நான் சொல்லிமுடித்தபோது, ‘அப்படி என்றால்…! சித்திரைத் திருவிழாவில் கள்ளழகருக்குத் தொடர்பில்லையா?’ என்று ஒரு பையன் ஆர்வமாகக் கேட்க,

நிச்சயமாக உண்டு! இது சைவத் திருவிழா… அது வைணவத் திருவிழா…! என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வகுப்பு முடிந்ததற்கான மணி ஒலிக்க, நான் என் பேச்சை நிறுத்த, ‘ஐயா அழகரை அப்படியே விட்டுட்டுப் போறீங்களே!’ என்று ஒரு பையன் ஆர்வமாகக்  கேட்க, ‘அழகர் வருவார்… ஆற்றில் இறங்குவார்… அடுத்த வகுப்பில் சந்திப்போம்’ என்றேன்.

      சித்திரைத் திருவிழாவுக்கு அத்தனை பேரும் வாருங்கள்…! அங்கயற்கண்ணியின் அருளைப் பெறுங்கள்! சொக்கநாதரை வணங்கி சுகமான வாழ்வு பெறுங்கள்!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.