பூமிக்கு வந்த புதுமைப்பித்தன்;…. லியோனார்டோ டாவின்சி…

இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும் இயற்கையால் ஒன்றிணைந்;திருந்தாலும் இதனை அழகுபடுத்திய பெருமையும், அடுத்த கிரகங்களை நாடுகின்ற முயற்சியும் அறிவியல் அறிஞர்களால் கைகூடியது என்பது மறுக்க முடியாத உண்மை.
கலிலியோ, கோபர்நிகஸ், லியோனார்டோ டாவின்சி, டெஸ்லா, தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள் என ஒவ்வொருவரும் மனிதகுலத்தின் பல்வேறு உயர்வுக்குக் காரணமாய் இருந்தார்கள்.
இதேபோல கிப்போகிரேட்ஸ் தொடங்கி, தமிழகத்தில் தோன்றிய உடற்கூற்று அறிஞர்கள் முதல் தற்காலத்தில் உறுப்புமாற்று சிகிச்சை மூலம் மனிதவாழ்க்கையை நீட்டித்துக் கொண்டிருக்கும் மருத்துவ மாமேதைகளின் பங்கினையும் நாம் மறக்கமுடியாது.
ஜேம்ஸ் வாட், ஜார்ஜ் ஸ்டீபன்சன், ஹென்ரி போர்டு போன்றவர்கள் வாகனக் கண்டுபிடிப்புகள் மூலம் மனிதர்களின் பயணநேரத்தை விரைவாக்கித் தூரங்களைக் குறைவாக்கி உலகை வியக்க வைத்தார்கள். அலெக்சாண்டர் பிளம்மிங்கும், லூயி பாஸ்டரும், எட்வர்ட் ஜென்னரும், மேரி கியூரியும் மனித குலத்துக்குச் செய்த நன்மைகளுக்கு ஈடு இணையில்லை.
ஓவியத்தால், சிற்பத்தால், இசையால், நுண்கலைகளால் உலகை அழகுபடுத்திய கலைஞர்;களையும் நாம் மறக்கமுடியாது.
ஆனால் மேற்கூறிய இத்தனை துறைகளிலும் ஒரு மனிதர் முயற்சிசெய்து சாதனை படைத்திருக்க முடியுமா, என்றால் முடிந்திருக்கிறது. அவர் முழுவதுமாக வெற்றி பெறவில்லை. ஆனால் எல்லா முயற்சிகளும் செய்து பார்த்தார். அவர்தான் 1452ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி இத்தாலியில் உள்ள ஃபிளோரன்ஸ் நகருக்கு அருகே இருக்கும் வின்சி என்னும் கிராமத்தில் பிறந்த லியோனார்டோ டாவின்சி என்னும் மாமேதை.
2016ஆம் ஆண்டு நானும் என் துணைவியாரும் பாரீஸ் நகரத்திற்குச் சென்றபோது லூவர் (Louvre) மியூசியத்திற்கு எங்களை அழைத்த திரு. இலங்கைவேந்தன் உட்பட்ட தமிழ்ச்சங்க நண்பர்கள் அனைவரும் அழைத்துச் சென்றார்கள். உலகின் பழைமையான அருங்காட்சியகங்களுள் (மியூசியம்) ஒன்று பாரீஸ் நகரில் இருக்கும் லூவர் மியூசியம். அந்தப் பிரம்மாண்டமான மியூசியத்தினுடைய ஒரு பகுதி முழுவதும் லியோனார்டோ டாவின்சியினுடைய கண்டுபிடிப்புகள் இருப்பதைக்கண்டு நான் மகிழ்ந்தும் வியந்தும் போனேன்.
அங்குதான் அவர் வரைந்த உலகப் புகழ்பெற்ற ‘மோனாலிசா’ ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு ஆகாயத்தில் பறக்கும் விமானங்கள் குறித்து அவர் செய்த முயற்சிகள் ஆச்சர்யமானவை! அத்தோடு அவ்விமானத்தில் ஒருவேளை ஆபத்து ஏற்பட்டால் தரைஇறங்குவதற்கான பாராசூட்டுகள் பற்றிய படங்களையும் அவர் வரைந்து வைத்திருக்கிறார் (ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1903) லியோனார்டோ டாவின்சி ஓவியம், சிற்பம், புதிய கருவிகள் கண்டுபிடிப்பு என எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டு இருந்திருக்கிறார்.
ஹென்றி போர்டு காரை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே கூடார வடிவிலான தானியங்கி மோட்டார் வடிவக் கூண்டு ஒன்றையும் இவர் கண்டுபிடித்திருக்கிறார். இதனை நான் ஒருநாள் டிஸ்கவரி சேனலில் இரண்டு மணிநேரம் பார்த்தேன். அதில் டாவின்சியினுடைய கனவு என்று போட்டு அந்தக் கூண்டுவண்டியை அவர்கள் உருவாக்கி ஓட்டியும் காண்பித்தார்கள்.
இவரது மற்றொரு புகழ்பெற்ற ஓவியமான ‘கடைசி விருந்து’ (The Last Supper) எனும் ஓவியத்தை அடிப்படையாக வைத்து டாவின்சி கோடு (Da Vinci Code) என்ற நாவல் ஒன்றும் அதை அடிப்படையாக வைத்து வெளிவந்த படம் ஒன்றையும் நாம் இந்த நூற்றாண்டில் பார்த்திருக்கிறோம். லியோனார்டோ டாவின்சி என்ற அற்புத மனிதருடைய வரலாற்றை சொல்லிக்கொண்டே போகலாம்… மேலும் சில செய்திகளைக் காண்போம்…
சிறுவயதிலேயே வரைவதிலும், மாதிரி வடிவங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டினார் டாவின்சி. அவருக்கு இடது கைப்பழக்கம் இருந்தாலும் இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் ஓவியம் வரையக்கூடிய ஒப்பற்ற ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் தன் விளக்கக் குறிப்புகளையும், கடிதங்களையும் இடமிருந்து வலமாக எழுதும் ஆற்றலுடையவர். எனவே அவற்றைப் படிக்க வேண்டுமென்றால் கண்ணாடி முன் அதை வைத்து கண்ணாடியில் தெரியும் பிரதி பிம்பத்தைப் பார்த்துப் படிக்க வேண்டும்.
உலகின் தலையாய கலைஞர்களுள் என்று பட்டியலிட்டால் டாவின்ஸியும் அதில் இடம்பெறுவார். ஆகாய விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பதற்காய் அவர் வரைபடங்கள் தீட்டியதுண்டு.
வானம் ஏன் நீலநிறத்தில் இருக்கிறது என முதன்முதலில் விளக்கம் அளித்தவர் லியோனார்டோ டாவின்சி என்பது குறிப்பிடத்தக்கது.
குதிரைகள் என்றால் டாவின்சிக்கு அவ்வளவு விருப்பம். உடல் வலிமையுடன் திகழ்ந்த அவர் குதிரை லாடங்களை வெறும் கைகளால் இரண்டாக உடைக்கக்கூடிய வலிமையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையை அதிகம் நேசித்த டாவின்சிதான் ஓவியங்களில் இயற்கையை பிரதிபலித்த முதல் ஓவியர் என்கிறது வரலாறு. தன் ஓவியங்களில் ஒளியையும், அதன் நிழலையும் தத்ரூபமாக வரைந்து காட்டிய முதல் ஓவியர் டாவின்சிதான்.
அழகுக்கும் புன்னகைக்கும் இலக்கணமாய் அமைந்த ஓவியம் ‘மோனாலிசா’ ஓவியம். எந்தக்கோணத்தில் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும், மோனாலிசா தன்னைப் பார்த்துப் புன்னகைப்பதாகவே பார்;க்கிற ஒவ்வொருவரும் எண்ணிக் கொள்வார்கள். குறிப்பாக இவரது மற்றொரு ஓவியமான ‘கடைசி விருந்து’ (The Last Supper), உலகப்புகழ்பெற்ற ஓவியமாகும்.
லியோனார்டோ டாவின்சியின் இளமைகால வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின் விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
டாவின்சி கோடு (Da Vinci Code) நாவலானது… டாவின்சி போட்ட ஓவியக்கோடு மோனாலிசா ஓவியமானது…!
பூமிக்கு வந்த புதுமைப்பித்தன்களில் லியோனார்டோ டாவின்சியும் ஒருவர்.