பூக்குட்டிகளும்…புத்தகங்களும்…

புத்தகங்களும்… குழந்தைகளும்… என்றே கவிதை எழுதலாம். புத்தகங்களைப் படித்தால் நம் அறிவு வளர்கிறது. நம் கேள்விகளுக்கு விடையளிக்கிறது புத்தகம். குழந்தைகள் கேள்விகளாலேயே வளர்கின்றன. புத்தகத்தைப் பிரிக்கும்போது மகிழ்ச்சி. குழந்தையைப் பார்த்தாலும் பேசினாலும் தூக்கினாலும் மகிழ்ச்சி. இத்தகைய குழந்தைகள் நம்மிடமிருந்து செய்திகளைத் தெரிந்துகொள்வதைப்போல சிறுவயதிலேயே புத்தகங்களோடு பழகுவார்களேயானால் அவர்கள் வாழ்க்கை ஒளிமயமாகும். புத்தகத்தையும் குழந்தையையும் விரும்பாத மனிதர் யார்?
இரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு… அவர் செல்வம்மிகுந்த பிரபு குடும்பத்தைச் சார்ந்தவர்;. சிறுவயதாக இருந்தபோது அவருடைய பிறந்தநாள் வந்தது. அந்தப் பிறந்தநாளில் தாகூரின் சகோதரர் தன் தம்பிக்குப் பரிசளிக்க விரும்பி நள்ளிரவில் அவருடைய அறையைச் சத்தமின்றி திறந்து அவருடைய படுக்கையில் அந்தப் பரிசை வைக்கப்போனவர் வியந்துபோனார்.
காரணம், அந்தப் பட்டுமெத்தையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. தாகூர் தரையில் படுத்திருந்தார். இதைக்கண்ட அவரது அண்ணன் கண்கலங்கிப்போனார். என் தம்பி எத்தனை பெரிய ஞானி! என்று பெருமிதமாக நினைத்தாராம். அப்படி சிறுவயதிலேயே புத்தகங்கள் மீது இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் காதல் கொண்டிருந்தததால்தான் என்னவோ இலக்கியத்திற்கான நோபல்பரிசைப் பெற்றிருக்கலாம்.
குழந்தைகளுக்குக் கதை சொல்லிக்கொண்டே வந்து இதுபோன்ற கதைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன என்று சொல்லி, நாம் அவர்களுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம். தற்காலத்தில் ஒரு வாய்ப்பு என்னவென்றால், குழந்தைகள் கணினி அறிவு பெற்றிருப்பதால் அவர்களால் எளிதில் புத்தகங்களைத் தேடிக்கண்டுபிடிக்கவும் முடிகிறது.
கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் போன்றவற்றை வலைப்பதிவில் எழுதவும் முடிகிறது. பிறமொழிகளில் எழுதும் ஆற்றலையும் அவர்கள் இளவயதிலேயே பெற்றுவிடுகிறார்கள். இப்படியாக குழந்தைகளை படிக்க வைக்கவும் அவர்களை எழுத்தாளர்களாக படைப்பாளர்களாக மாற்றவும் புத்தகங்களே துணைநிற்கின்றன. அதனால்தான் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பற்றிய இன்னும் சில செய்திகளை விரிவாகக் காண்போம்…
சர்வதேச குழந்தைகளின் புத்தகநாள் 1967ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளானது ஹான்சு கிறிஸ்த்தியன் ஆன்டர்சன் (1805 – 1875) என்னும் குழந்தைகள் இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாளாகும்.
‘இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்’ (International Board on Books for young People – IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non-Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பன்னாட்டுக் குழந்தைகளள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
1. புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்.
2. குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தகநாளைக் கொண்டாடும் முன்முயற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பு, ஒவ்வோராண்டும் இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியத்தின் வெவ்வேறு நாட்டுப் பிரிவிற்கு வழங்கப்படும். அந்நாடு அவ்வாண்டிற்கான கொண்டாட்டக் கருத்தை முடிவு செய்து, தன்நாட்டின் சிறந்த எழுத்தாளரை அழைத்து உலகக் குழந்தைகளுக்கு அவ்வாண்டிற்கான செய்தியை எழுதவும் நன்கறியப்பட்ட ஓவியரை அழைத்து அவ்வாண்டிற்கானச் சுவரொட்டியை வடிவமைக்கவும் செய்யும். அந்த செய்தியும் சுவரொட்டியும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு புத்தகங்கள், படித்தல் ஆகியவற்றின் மீதான ஆர்வம் வளர்த்தெடுக்கப்படும்.
பூப்போன்ற குழந்தையும் புத்தம்புது புத்தகமும் எப்போதும் மகிழ்ச்சியையும் அறிவையும் நமக்கு ஊட்டும்…கூட்டும்.