புழுங்கலரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது?

‘பச்சரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது? புழுங்கலரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது? சொல்லுங்க…’
ஒருநாள் வகுப்பில் இதை நான் கேட்டபோது, உட்கார்ந்திருந்த மாணவர்களில் 35 மாணவர்களுக்கு விடை தெரியவில்லை. ‘பச்சரிசி ஒரு மாதிரியான பயிர்’ என்று சொன்னான் ஒரு மாணவன். பலர் சத்தியமாகத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.
அரிசியை அவித்தால் புழுங்கல், அப்படியே விட்டால் பச்சரிசி என்பது கூடத் தெரியாததற்குக் காரணம் – விவசாயத்திற்கும் இன்றைய மாணவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஒரு நெல் எப்படி விளைகிறது? நெல்லில் இருக்கிற வகை என்ன? விதை பாவுவது, நாற்று நடுவது, களை எடுப்பது என்று ஏதாவது தெரிய வைத்திருக்கிறோமா? அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு என்று சொல்கிறோம். ஆனால் நம்முடைய கல்வித்திட்டம், விவசாயத்தைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் துவக்கத்திலிருந்து சொல்லிக் கொடுப்பதில்லை.
ஆஸ்திரேலியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் ஓடும் நதியின் பெயரையெல்லாம் பொது அறிவாகக் கணக்கில் எடுத்துக் கேள்வி கேட்போம். ஆனால் நம்மூரில் ஓடுகிற ஆறுகளைப் பற்றித் தெரியாது.
எந்தெந்தக் கனிகள் எந்தெந்த சீஸனில் விளையும் என்பதும் தெரியாது. ஒரு மரத்தை நம்முடைய நெருங்கிய உறவாகப் பார்த்தார்கள் நம் முன்னோர்கள். ‘இந்த நிலத்தில் எத்தனை போகம் விளையும்?’ என்று அப்போது கேட்டார்கள். இப்போது அதேநிலத்தில் ‘எத்தனை பிளாட் போடலாம்?’ என்று கேட்கிறார்கள். நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள நிலங்கள் எல்லாம் காங்கிரீட் வீடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ஜப்பானில் கடலில் பலகையைப் போட்டு அதில் மண்ணையும் போட்டு பயிர்களை விளைவிக்கிறார்கள். நிலமில்லாததால் அங்கு அந்த மாதிரியான மாற்றைத் தேடுகிறார்கள். இங்கு நிலமிருக்கிறது. மதுரையிலிருந்து இராமநாதபுரம் வரை எவ்வளவு ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. அங்கு மட்டும் நீர் இருந்தால் பொன்னான நெல் விளையும். அங்கெல்லாம் விளைவிக்க ஏன் எந்த முயற்சியும் நடக்கவில்லை. நம்முடைய அரசியல்வாதிகள் அதுகுறித்து யோசித்திருப்பார்களா?
இராமநாதபுரத்தில் முன்பு ‘நீர்ச்சம்பா’ என்ற வகை நெல் விளைந்திருக்கிறது. கண்மாயில் அப்படியே அந்த நெல்லை விதைத்துவிட்டு வந்து விடுவார்களாம். விளைந்து தண்ணீரை மீறி நிற்குமாம் கதிர். அப்படியே அறுவடை பண்ணியிருக்கிறார்கள். இப்படி அபூர்வமான நெல்வகையெல்லாம் நம்மிடம் இருந்திருக்கிறது. இப்படிப் பல நூறு வகையான நெல்வகைகள், அந்தந்த மண் சுவையுடன் மலைப்பழம், மட்டிப்பழம் என்று அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றன. அந்தச் சுவையெல்லாம் இப்போது அபூர்வமாகி விட்டது. ‘விவசாயி மகன்’ போன்று விவசாய முறையை விவரிக்கும் நாவல்கள் தமிழில் இல்லை.
பறக்கும் ஆச்சரியங்களான தட்டானைப் பிடிக்க ஆசைப்படுகிற குழந்தைகள் இன்றைக்கு இருக்கிறார்களா? மரங்களில் ஏறித் தழுவி விழுகிற சிறுவர்கள் இருக்கிறார்களா? இது இயற்கையோடு நாம் கொள்கிற ஒரு நெருக்கம். ஆனால் இன்று அந்த இயல்பைத் தொலைத்து விட்டோம். விதவிதமான பூச்சி, மிருகங்களைத் தொலைக்காட்சிச் சேனலில் வேடிக்கை பார்க்கின்றன நம் குழந்தைகள்.
மண்ணோடும் இந்த மண்ணிலிருக்கும் மரங்கள், பூச்சிகள், சின்னச்சின்ன வண்டுகள், கன்றுகள், நாய்கள் எல்லாவற்றுடன் நமக்கிருந்த தொடர்புச் சங்கிலி, நம் குழந்தைகளுக்குப் பரவாமல், இந்தத் தலைமுறையில் அறுந்து போய்விட்டதோ என்ற பயம் ஏற்படுகிறது.
உறவுச் சங்கிலிதான் உலக உயிர்களோடு நமக்கிருக்கும் உயிர்ச் சங்கிலி.