புதுவை தந்த பூபாளம்… எழுத்தாளர் பிரபஞ்சன்

தமிழில், உரைநடையும் சிறுகதையும் தோன்றியபிறகு, இதழ்களின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கின. மணிக்கொடி, எழுத்து, ழா, தீபம் போன்ற இலக்கிய இதழ்கள் ஒருபுறமும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகள் ஒருபுறமும், சிற்றிதழ்கள் ஒருபுறமும் சிறுகதை உலகின் வளர்ச்சிக்குப் பெரும் துணை நின்றன.
எழுத்தாளர் கல்கி, சாண்டில்யன், தேவன், ரா.கி.ரங்கராஜன் போன்றவர்கள் சிறுகதைகளில் தங்கள் எழுத்துத் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அதேநேரத்தில் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்றவர்களும் தங்களுக்கெனத் தனிப்பார்வையோடும், இடதுசாரிச் சிந்தனையோடும் எளிய மக்களின் உலகத்தைத் தங்கள் எழுத்துக்களில் படைத்துக் காட்டினர். இந்நிலையில்தான் சாவி (சா.விஸ்வநாதன்) போன்ற பத்திரிக்கையாளர்கள் புதிய எழுத்தாளர் பட்டாளத்தைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினர். (திரையுலகில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போல)
எழுத்தாளர் சுஜாதா, மாலன், சுப்பிரமணிய ராஜு, பாலகுமாரன் போன்றவர்கள் புதியஅலை எழுத்தாளர்களாக எழுதத்தொடங்கியபோது, பாண்டிச்சேரியிலிருந்து தவழும் தென்றலாகவும், சீறும் புயலாகவும் இந்த எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவர்தான் சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட பிரபஞ்சன்.
இவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் பாண்டிச்சேரியையும், நடுநாட்டையும் மையமிட்டதாக அமைந்திருந்தது. பிரபஞ்சன் படைப்பாளர் மட்டுமல்லாமல் சிறந்த திறனாய்வாளராகக், கட்டுரையாளராக, மேடைப்பேச்சாளராகவும் திகழ்ந்தார். இவர் புதுச்சேரியில் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறந்தார்.
புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் கரந்தைக் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம், ஆனந்தவிகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார்.
பழைமையில் இருக்கும் நடைமுறைக்குப் புதிய பாய்ச்சலாக, இளம் படைப்பாளிகள் ஒன்றிணைந்து, 1970ஆம் ஆண்டு ‘வானம்பாடி’ என்ற கவிதை இதழைக் கோவை நகரத்தில் இருந்து வெளியிட்டனர். அக்குழுவில் சாரங்கபாணி வைத்தியலிங்கம் எனும் பிரபஞ்சன் ஒருவர் தன் 16ஆவது வயதில், 1961ஆம் ஆண்டு ‘என்ன உலகமடா’ எனும் சிறுகதை மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமானார்.
அக்காலத்திய நாவல்களில் ராஜாக்கள் நாயகர்களாக இருந்த காலகட்டத்தில், பிரெஞ்சுப் பகுதியை மையப்படுத்திய இவரின் ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ புதினங்கள் முக்கியமானதாகும். பிரபஞ்சன் அவர்களின் வரலாற்றுப் புதினம் ‘வானம் வசப்படும்’ 1995ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றது. இப்புதினம் ஆனந்தரங்கப் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. புதுச்சேரியின் சுதந்திர வரலாற்றைக் ‘கண்ணீரால் காப்போம்’ எனும் நூலில் உணர்வுப்பூர்வமாய் விளக்கியிருப்பார்.
குமுதம் பத்திரிக்கையில் எழுத்தாளர் பிரபஞ்சனும், மாலன் அவர்களும் வாரம் ஒருகதை என மாறிமாறி எழுதி வந்தனர். அந்தக் கதைகள் அப்பொழுது இலட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றன.
புத்தகத் திருவிழாக்களில் நானும் அவரும் இணைந்து பல மேடைகளில் பேசியிருக்கிறோம். அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தார் (ஃபெட்னா) என்னிடத்தில், ‘எழுத்தாளர் ஒருவரை இந்த ஆண்டு அழைக்கலாம் என்றிருக்கிறோம். யாரை அழைக்கலாம்’ என்று கேட்டபோது, நான் திரு.பிரபஞ்சன் அவர்களையே பரிந்துரை செய்தேன். அவர்களும் திரு. பிரபஞ்சன் அவர்களையும், மற்றும் சில கலைஞர்களையும் அமெரிக்காவுக்கு அழைத்தனர்.
எழுத்தைப்போலவே அவருடைய நடை, உடை, பாவனைகளும் மென்மையானதாய் நட்புணர்வோடு அமைந்திருக்கும். ‘நேற்று மனிதர்கள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் ஊரையே மிரட்டி ஆளுகிற வல்லமையுடைய பெரியவர் ஒருமுறை தான் பெற்ற மகனால் தாக்கப்படும்போது மனம் ஒடிந்து மரணம் அடைவதை அவர் சுட்டிக்காட்டும்போது நம் மனம் கண்ணீர் வடிக்கும். இவரின் எழுத்து நடையும் கவிதைபோல் இனிமையானதாய் இருக்கும்.
பிரபஞ்சன் அவர்களின் படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான ‘முட்டை’ டெல்லி பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான ‘நேற்று மனிதர்கள்’ பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது.
பிரபஞ்சனின் எழுத்து பிரபஞ்சத்துக்கே சொந்தமானது.