புதியன கற்போம்… புதுமைகள் செய்வோம்…!

உலக வரலாற்றில் புதிய சிந்தனைகளையோ, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளையோ உருவாக்கிய மேதைகளை இந்த உலகம் அவ்வளவாகப் பாராட்டியதில்லை. மாறாக அத்தகைய சிந்தனையாளர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.
‘உன்னையே நீ அறிவாய்… அறிவுதான் நான் தரும் ஆயுதம்…. சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள்…. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகளைக் கேளுங்கள்!’ என்று சொன்ன கிரேக்கஞானி சாக்ரடீஸ், அன்றைய அரசாங்கத்தால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். ‘உலகம் உருண்டையானது. சூரியன் நிலையானது. பூமிதான் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது’ என்ற அறிவியல் உண்மையை, தான் வாழ்ந்த 14ஆம் நூற்றாண்டில், தான் கண்டுபிடித்த சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் நிரூபித்துக்காட்டிய கலிலியோ பல துன்பங்களைச் சந்தித்து, அப்போதைய போப்பாண்டவர் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும் நிலைக்கு ஆளானார்.
‘உலக உயிர்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்தான் உருவாகி வந்துள்ளன. ‘அமீபா’ என்ற ஒருசெல் உயிரினத்தின் பல லட்சம் ஆண்டுகளின் வளர்ச்சியே உலக உயிரினங்கள் அனைத்தும். ஏன், மனிதன் குரங்கிலிருந்துதான் வந்தான்’ என்ற உண்மையை பல ஆண்டுகள் ஆராய்ந்தும், பல சோதனைகளால் நிரூபித்தும் காட்டிய சார்லஸ் டார்வினைத், தெருத்தெருவாக விரட்டி, கல்லால் அடித்தவர்கள் அன்றைய சமயவாதிகளும் அறியாத பொதுமக்களும்.
புகைப்படத்தின் வளர்ச்சியாக ‘சினிமாட்டோகிராபி’ என்ற சினிமாக்கருவியை லூமியர் பிரதர்ஸ் மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் உருவாக்கி, சினிமாப்படத்தைத் திரையில் ஓடச் செய்தபோது, அதைப் பார்த்து பயந்து அலறி ஓடியவர்கள் அதிகம்.
இவ்வளவு ஏன், நம் நாட்டில் திரைப்படத்தில் ரயில் ஓடிவருகிற காட்சியைப் பார்த்ததும், தரை டிக்கெட்டில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த பலர், செத்தோம் பிழைத்தோம் என்று ஓடிய வரலாறுகளைப் படித்திருக்கிறோம்.
இன்றைக்கு உலக மக்களையே தன் கைக்குள் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் 1950களில் உருவாக்கப்பட்டபோது, மிகப்பெரிய அதன் உருவத்தையும் அது ஏற்படுத்திய சத்தத்தையும் கேட்டவர்கள், இந்தக் கண்டுபிடிப்பால் எந்தப் பயனும் கிடையாது, தொல்லைதான் அதிகம் என்று அலுத்துக்கொண்டார்கள்.
யோசித்துப் பாருங்கள். புதியன காண்பதற்கு ஒவ்வொரு மனிதனும் பட்ட பாட்டையும் அதை உலக மக்களுக்கு அவர்கள் கொடுத்தபோது, மக்கள் படுத்திய பாட்டையும், நம்பவே முடியாது நம்மால்.
அப்படியே புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகளை தேவையற்றவை என்று அஞ்சி ஒதுக்கக்கூடாது. ஏனெனில் புதியவற்றை எதிர்த்தவர்கள், ஏளனம் செய்தவர்கள் இன்று இல்லாமல் போனார்கள். புதிய கண்டுபிடிப்புகளால் உலகம் உயர்ந்த நிலையை அடைந்து வருகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்கு முன் பிறந்த மிருகங்கள் இன்னமும் வேட்டையாடுகின்றன. பறவைகள் கூடுகட்டுகின்றன. ஆனால், மனிதன் வளர்ந்து விட்டான். இதைத்தான் ‘மனிதன் பறவையைக் கண்டான், விமானம் படைத்தான், பாய்ந்திடும் மீன்களில் படகினைக் கண்டான் எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான்’ என்று கவியரசு கண்ணதாசன் வியந்து எழுதினார்.
‘வேதம் புதுமை செய்! பெரிதினும் பெரிது கேள்! என்றான் பாரதி. புதிய சிந்தனைகளால் நாமும் வளர்வோம், உலகமும் முன்னேறும் என்பது உண்மை.
அறிவியல் வளர்ச்சியில் 1980களுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றமானது உலகத்தையே புரட்டிப் போடுகின்ற அளவிற்குப் புதுமைகளை உருவாக்கிய காலமாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஈமெயில், கைபேசியில் முகம் பார்த்துப் பேசுகின்ற வீடியோ கால், வேளாண்மை தொடங்கி மருத்துவம், விண்வெளி வரை அத்தனை துறைகளையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை கொண்ட கணினிகளின் வளர்ச்சி பற்றி சென்ற நூற்றாண்டுகளில் புத்தகங்களில் எழுதியிருந்தாலும்கூட, யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இவையெல்லாம் இன்றைக்குச் சாத்தியமாகின்றன.
ஆண்டிபட்டியில் நடக்கும் அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க டாக்டர்கள் இணையவழியில் இதய ஆப்ரேஷனுக்கான யோசனை சொல்கிறார் என்றால், இந்த யுகம் எத்தகைய புதுமைகளைப் பெற்றது என எண்ணிப் பார்க்கிறோம். இக்காலத்தில் வாழும் நாமும் இவற்றைப் பயன்படுத்தி பெருமை அடைகின்றோம்.
இனிவரும் புதுமைகளும், எத்தனையோ சாதனைகளைப் படைக்க இருக்கின்றன! எல்லாவற்றையும் சந்திப்பதற்கும், அதைப்பற்றிச் சிந்திப்பதற்கும் நேரம் ஒதுக்குவோம். அறிவியலின் வளர்ச்சி மனிதகுலத்தின் ஈடுஇணையற்ற வளர்ச்சி என்று பெருமிதம் கொள்வோம்.
புதுமைகளால் இந்தப் பூமிப்பந்து பொலிவுறட்டும்!