புகழ்மிக்க ஓவியர்கள்

கலை வடிவங்களில் மிகப் பழமையானது ஓவியக்கலை. பேச்சுமொழி தோன்றுவதற்கு முன்பாக மனிதர்களிடையே தகவல் தொடர்புக்கு ஓவியங்கள் பயன்பட்டிருக்க வேண்டும். பின்னர் அவ்வோயங்களே வரி வடிவங்களாக, எழுத்து வடிவங்களாக மாறியிருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, வேட்டைக்காரச் சமுதாயத்தைச் சார்ந்த ஆதிப்பழங்குடியினரின் குகைச்சுவரில் கூட ஓவியங்கள் காணப்படுகின்றன.
நமது நாட்டில் அஜந்தா, எல்லோரா போன்ற இடங்களில் மூலிகைச்சாறுகளால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் இன்றைக்கும் அவ்வண்ணம் கெடாமல் அழகாகக் காட்சியளிப்பதைக் காணமுடிகிறது. தமிழகத்தில் சித்தன்வாசலில் இத்தகைய ஓவியங்கள் இன்றைக்கும் காணப்படுகின்றன.
உலகப்புகழ்பெற்ற ஓவியர்கள் எனப் பார்க்கும்பொழுது இத்தாலியில் பிறந்த மைக்கேல் ஆஞ்சலோ, லியனார்டோ டாவின்ஸி, ரஃபேல் மற்றும் தற்காலத்தில் நவீன ஓவியங்களில் (Modern Art) புகழ்பெற்ற ஸ்பெயின் தேசத்தவரான பிகாசோ ஆகியோர் ஓவியக்கலையில் வியத்தகு சாதனைகள் புரிந்துள்ளதை வரலாற்றில் அறியமுடிகிறது.
மத்திய இத்தாலியின் டைபர் நதிக்கரையோரமுள்ள பிளாரன்ஸ் நகரின் அருகிலிருக்கும் காப்ரீஸில் என்ற ஊரில் கி.பி.15ஆம் நூற்றாண்டில் (1475) பிறந்தவர்தான் மைக்கேல் ஆஞ்சலோ. மைக்கேல் ஆஞ்சலோ ஒரு சிற்பியாக வர விரும்பினார். ஆனால் அவருடைய தந்தை அவரை ஓவியராக்க விரும்பி, ஓர் ஓவியக் கூடத்தில் 13ஆவது வயதில் சேர்த்துவிட்டார். இருந்தாலும் சிற்பக்கலையில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், அவர் வடித்த சிற்பங்களையும் பார்த்த அவருடைய ஆசிரியர் அவரைச் சிற்பக் கல்லூரியில் பயிலச் செய்தார். தம் தாய்நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டபோது வாழ்வதற்காக ரோமாபுரிக்குகச் சென்றார். கட்டடக் கலையிலும் வல்லவரான இவர் ஓவியம், சிற்பம் போன்றவற்றில் சிறந்து விளங்கத் தொடங்கினார்.
ரோம் நகரில் செயின்ட் பீட்டர் ஆலயத்தில் ‘பியெட்டா’ என்ற புகழ்மிக்க சிற்பத்தை, நான்கு ஆண்டுகள் உழைத்து பளிங்குச் சிற்பமாகச் செதுக்கினார்.
சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட ஏசுநாதரை, கன்னிமேரி தன் மடியில் பரிதாபமாகக் கிடத்திக் கொண்டிருக்கும் காட்சியே உலகப் புகழ்பெற்ற ‘பியெட்டா’ சிற்பமாகும். 174செ.மீ. கொண்ட இச்சிற்பத்தால் மைக்கேல் ஆஞ்சலோவின் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது. அவரது புகழுக்குப் பெரிதும் காரணமான ஓவியம், கி.பி.1505ஆம் ஆண்டு வாடிகன் நகரில் சிஸ்டன் தேவாலயத்தின் கூரைச் சுவர்களில், மைக்கேல் ஆஞ்சலோ வரைந்த ஓவியங்கள் இன்றைக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்களாக உள்ளன.
6000அடி பரப்பளவுள்ள மேற்கூரையின் உள்பக்கத்தில் சாரம் கட்டி மல்லாக்கப் படுத்தபடியாக 4 ½ ஆண்டு காலம் இந்த ஓவியத்தை இவர் வரைந்துள்ளார். தினமும் ஒருவேளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு எந்த ஒரு உதவியாளரும் இல்லாமல் இந்தப் பணியை இவர் செய்து முடித்தார் என்பது ஒரு தவத்துக்கு இணையானது. இவரது மற்றொரு புகழ்மிக்க ஓவியம் ‘இறுதித் தீர்ப்பு’. இந்த ஓவியத்தை வரைந்தபோது இவருக்கு வயது 75.
தன்வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாது பலஆண்டுகள் சில ரொட்டித் துண்டுகளையும், தண்ணீரையும் மட்டுமே அருந்தி இறவாப் புகழுடைய ஓவியங்களை வரைந்த மைக்கேல் ஆஞ்சலோ 1564ஆம் ஆண்டு தமது 90ஆவது வயதில் மரணமடைந்தார். ஓவியக்கலைஞர்களில் முதலிடத்தில் வைத்து எண்ணப்படுபவர் மைக்கேல் ஆஞ்சலோ என்றால் மிகையாகாது.
வரையப்பட்ட காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் ஓவியம் ‘மோனலிசா’. இத்தகைய புகழ்மிக்க ஓவியத்தை வரைந்தவர் இத்தாலிய ஓவியரான லியனார்டோ டாவின்ஸி. இவர் தன் ஓவியப் பயிற்சியை வெர் ரோச்சியா என்ற மேதையிடம் கற்றார்.
லியனார்டோ டாவின்ஸி ஒரு அறிவியல் மேதையும்கூட. மோட்டார், விமானம், போர்க்கருவிகள், ஹெலிகாப்டர், பாரசூட் இவையெல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே தம் கற்பனையில் இவற்றுக்கு உருவம் கொடுத்தவர் டாவின்ஸி ஆவார். மனிதஉடம்பில் இரத்த ஓட்டம் பற்றி ஆராய்ந்தவர் வில்லியம் ஹார்வி. ஆனால் அவருக்கு 400ஆண்டுகளுக்கு முன்பே மனித உடற்கூறு பற்றி ஆராய்ந்து, இரத்த ஓட்டத்தின் பாதையைப் படம் வரைந்தவர் டாவின்ஸி.
இவைதவிர டாவின்ஸி வரைந்த விஞ்ஞானக் குறிப்புகளாக 7000 சித்திரக் குறிப்புகள் கிடைத்துள்ளன.
எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் பார்ப்பவர் மனதை மயக்கும்வண்ணம் வரையப்பட்ட புன்னகையுடன் கூடியது மோனலிசா ஓவியம். இது 1503 முதல் கி.பி.1505 வரை இரண்டாண்டு காலம் வரையப்பட்டது.
20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற ஓவியரான பிகாசோ, நவீன ஓவியத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
புதுக்கவிதை புனைபவர்கள் கவிதையின் வடிவத்தை முக்கியமாகக் கருதாமல் அதன் உள்ளடக்கத்திற்கு, கருத்திற்கு முக்கியத்துவம் தருவதுபோல பிகாசோ, கியூபிசம் என்ற புதிய ஓவியக்கலையையும், அப்ஸ்டிராக்ட் என்ற கலை வடிவத்தையும் கலந்து தன் படைப்புக்களை உருவாக்கினார்.
குறிப்பாக சர்ரியலிசம் என்பது இயற்கைக்கு மாறான விசித்திரத்தன்மை உடையதாக வரையப்படுகின்ற ஓவியங்களாகும். எடுத்துக்காட்டாக ‘பூங்கொடி போன்ற பெண்’ என்பதைக் கூற ஒரு பூங்கொடியும், அதன் உச்சியில் ஒரு பெண்ணின் தலையுமாக வரைந்து உருவகப்படுத்துவது. இத்தகைய சர்ரியலிச ஓவியங்களை வரைந்து பிகாசோ புகழ்பெற்றார்.
பிகாசோவின் புகழ்பெற்ற ஓவியம் ‘கார்னிகா’ என்பது. 1937ஆம் ஆண்டு ஸ்பானிஷ் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரையும், அதன் விளைவுகளையும் குறித்த ஓவியமே கார்னிகா ஆகும்.
இறைவன் இயற்கை என்னும் ஓவியத்தை தன் படைப்பு என்ற தூரிகையால் நிரந்தரமாக நமக்குத் தந்துள்ளான். புகழ்மிக்க ஓவியர்களும், தாங்கள் வாழ்ந்த காலத்தில் அமர ஓவியங்களைப் படைத்து அதன்மூலம் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஓவியங்கள் – ஓசையில்லாத இசை வடிவம்.