பாட்டுக்கோட்டை… பட்டுக்கோட்டை…

கவிஞர் வாலி அவர்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்து திரைப்படத்தில் பாடல்கள் எழுதுவதற்காகச் சென்னைக்குச் செல்கிறார். ஏற்கனவே திரைத்துறையில் இருந்த நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் தனது அறையில் இவரைத் தங்கவைத்து கவிஞர் வாலிக்காக, வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார். அவரது அறையில் இவரைப்போலவே திரைப்பட வாய்ப்புத்தேடி பல நண்பர்கள் வருவது வழக்கமாம்.
அப்படி வந்துபோனவர்களில் ஒருவர் ஒரு துணிப்பையை வைத்துவிட்டு மாலையில் வருகிறேன் என்று வாலியிடம் சொல்லிவிட்டுப் போனாராம். அவர் தந்துவிட்டுப் போன துணிப்பையிலிருந்த நோட்டுப்புத்தகத்தில் சில கவிதை வரிகள் இருப்பதைக் கவனித்த வாலி அதைப் படித்துப் பார்த்து மகிழ்ந்து போனாராம். அதில் ஒரு கவிதை,
அம்பது பைசா நிக்கிறமாதிரி மீச வச்சான்
அவன் தோச விக்கிற பொம்பள மேல ஆச வச்சான்…
என்றிருந்த பாடலைப் பார்த்து வியந்துபோய் மாலையில் அந்தப் பையைக் கொண்டுவந்தவரைப் பார்த்து ‘இந்தக் கவிதைகளை எழுதியது யார்?’ என்று கேட்டாராம். உடனே அவரும் சிரித்துக்கொண்டே, ‘என் தம்பிதான், நாடகத்துக்கெல்லாம் பாட்டெழுதுவான், பேரு கல்யாணசுந்தரம், எங்க ஊரு பட்டுக்கோட்டை’ என்று சொல்லிவிட்டுப் போனாராம். அந்தப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் பட்டுக்கோட்டைக்கு அருகே செங்கப்படுத்தான்காடு என்ற ஊரில் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி 1930ஆம் ஆண்டு பிறந்த கவிஞர்.
தமிழ்த்திரையுலகின் பாடலாசிரியர்களுள் எளிமையான குடும்பத்தில் பிறந்து இடதுசாரிச் சிந்தனையோடு எழுச்சிமிகு திரையிசைப் பாடல்களைத் தந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இவர் பள்ளிப்படிப்பு அதிகம் படிக்கவில்லை. ஆனால் 21 தொழில்களுக்கு மேலே செய்திருக்கிறார். இவர் திரையுலகில் பாட்டெழுத வந்த வரலாறே அதிசயமான ஒன்று. அந்தக் காலத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ‘பாசவலை’ என்றொரு படம் தயாரித்தார்கள். எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்திற்கு இசையமைத்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இராமமூர்த்தி. அந்தப் படத்தில் ஒரு தத்துவப்பாடல் தேவைப்பட்டபோது அக்காலத்தில் புகழ்பெற்ற தத்துவக்கவிஞராக இருந்த உடுமலை நாராயணகவி அவர்களை அணுக, அவரிடத்தில் அவ்வளவு சுலபமாகப் பாடல் கிடைக்கவில்லை. காரணம் அவர் பல படங்களுக்குப் பாடல் எழுதிக்கொண்டிருந்தார்.
அப்போது கவிஞர் மருதகாசி அவர்கள் ‘எனக்குத் தெரிந்த ஒரு பையன் எழுதிய கவிதைகளைப் பாருங்களேன்’ என்று விஸ்வநாதன் இராமமூர்த்தியிடம் கொடுத்தாராம். அந்தப் பாடலைப் பார்த்த இசையமைப்பாளர்கள் இருவரும் வியந்தார்கள்.
குட்டியாடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி தப்பிவந்தா கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா…
என்பதே அந்தப் பாடல் வரிகள்.
அந்தப் பாடலை எழுதிய கவிஞரை அழைத்துப் பாராட்டிவிட்டு, அந்தப் பாடலுக்கு இசையமைத்து சி.எஸ்.ஜெயராமன் அவர்களைப் பாடவைத்து, எம்.கே.ராதா அவர்களை நடிக்க வைக்க, அந்தப் படமும், பாடலும் பெருவெற்றியைப் பெற்றன. அந்தப் பாடலை எழுதிய கவிஞர்தான் நம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இவர் தன்னுடைய 21ஆவது வயதில் தொடங்கி எட்டாண்டுகள் மட்டுமே திரையுலகில் ஐநூறு பாடல்களுக்கு மேல் எழுதியிருந்தபோதும் அப்பாடல்கள் எல்லாம் அழியாப் புகழ்பெற்ற பாடல்களாக அமைந்தன என்பதுதான் உண்மை. தனது 29ஆவது வயதில் இவர் மறைந்துவிட்டாலும் இவரின் பாடல்கள் இன்றும் பேசப்படுகின்றன.
இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் ‘கல்யாணப் பரிசு’ படத்தை எடுத்தபோது அதன் கதையை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் ஒருமணிநேரம் சொன்னாராம். அதைக் கேட்டுக்கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி,
கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி’
இதுதானே கதை என்று ஸ்ரீதரிடம் கேட்டவுடன், ஸ்ரீதர் அசந்து போனாராம். அந்தக் கல்யாணப் பரிசு படத்திற்கான எல்லாப் பாடல்களையும் பட்டுக்கோட்டையே எழுதினார்.
1958இல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தன் சொந்தத் தயாரிப்பில் ‘நாடோடி மன்னன்’ என்று ஒரு படத்தைத் தயாரித்தார். அப்போது அவர் சொன்ன வார்த்தை, ‘இந்தப் படம் வெற்றியடைய வேண்டுமானால் இதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டு இருக்கவேண்டும்’ என்று சொல்லி அவரிடம் கேட்டு ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற பாடலையும், ‘சும்மா கிடந்த நிலத்த கொத்தி சோம்பல் இல்லாம ஏர் நடத்தி…’ என்ற பாடலையும் அவரிடம் கேட்டு வாங்கித், தன் படத்தில் சேர்த்தாராம். படமும் வரலாறு காணாத வெற்றி அடைந்ததை நாம் அறிவோம்.
பிற்காலத்தில் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக ஆனபோது ஒரு பேட்டி ஒன்றில், ‘நான் அமர்ந்திருக்கிற முதலமைச்சர் நாற்காலியின் கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டையின் பாடல்கள்’ என்று மகிழ்ச்சியோடு கூறினாராம்.
இடதுசாரிச் சிந்தனையாளராக திரு.பட்டுக்கோட்டை அவர்கள் இருந்தாலும், ‘தில்லை என்பது நடராசா’ எனும் பக்திப்பாடலை ‘பாக்கியவதி’ படத்திற்காகத் தயக்கமில்லாது எழுதிக்கொடுத்திருக்கிறார். காலத்தை வென்ற கவிஞராகிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பற்றி மேலும் சில தகவல்கள்…
பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக்குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சித்தாந்தி, சிந்தனையாளர். இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு.
கம்யூனிச விவசாய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு அச்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அடித்தட்டு மக்களின் ஆசைகளையும், ஆவேசங்களையும் பிரதிபலித்தார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் 1952இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார்.
தொடக்கத்தில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர் என பன்முக பரிமாணங்களைக் கொண்டவர் நாடக நடிகராக மாறி இறுதியில் கவிஞர் என்ற பெரும் பெயரையும் புகழையும் பெற்றார்.
1955ஆம் ஆண்டு வெளியான ‘படித்த பெண்’ என்ற படத்தில்தான், இவரது கற்பனை, முதல் பாடலாகப் பாட்டில் வந்தது.
கருத்துச்செறிவும், கற்பனை உரமும் கொண்டு இவர் எழுதிய பல கவிதைகள், ‘ஜனசக்தி’ ஏட்டில் வந்தது. இவருடைய பாடல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
தனிஉடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறுமென்பது பழைய பொய்யடா
என்ற பட்டுக்கோட்டையின் வரிகள் எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவை.
மாட்டுவண்டி செல்லாத ஊருக்குக்கூட இவரது பாட்டுவண்டி சென்றது என்பதே உண்மை.