பறவையினங்கள்

          “தமிழ்நாட்டுக் கானுயிர்ச் செல்வத்தில் முக்கிய பரிமாணம் பல வகையான உயிரினங்கள்தான். வெப்ப நாடான இந்தியாவில் ஒரு வளம் பல்லுயிரியம் (Biodiversity) மரங்கள், செடி கொடிகள், பாலூட்டிகள், புள்ளினம், ஊர்வன, நீர்வாழ்வன, நண்டு போன்ற நீர் – நில வாழ்வன, பூச்சிகள் போன்ற ஏராளமான உயிரினங்கள் யாவும் இந்தப் பல்லுயிரியத்தில் அடக்கம்” எனக் குறிப்பிடுவார் பல்வகையான களங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள திரு. சு.தியோடர் பாஸ்கரன் அவர்கள்.

       மனிதர்களுக்கு விருப்பமான செய்திகளில் ஒன்று பறவைகளைக் காண்பதும், அவற்றைப்போல விண்ணில் பறப்பதற்கு நமக்கு இறக்கைகள் இல்லையே என்று ஏங்குவதும்தான். இதன் காரணமாகவே, பறவைகளை நேசிப்பதையும் அவற்றை வீட்டில் செல்ல உயிரினங்களாக வளர்த்து வருவதையயும் காண்கிறோம்.

        பொதுவாகப் பறவைகள் என்றால் நீர்வாழ்ப் பறவைகள், நிலத்தில் வாழ்ந்து விண்ணில் பறக்கும் பறவைகள், மரங்களில் கூடுகட்டி அடர்ந்த காடுகளில், மலைமுகடுகளில் வாழ்ந்துவரும் அரிய பறவைகள் எனப் பிரித்துக் காணலாம். ஆனால் நாம் அன்றாட வாழ்வில் வெகுசில பறவைகளைப் பற்றித் தான் படிக்கிறோம், காண்கிறோம். உதாரணமாக காக்கை, கழுகு, கிளி, ஆந்தை, குருவியினங்கள், மைனாக்கள், கொக்கு, வாத்து, நாரை போன்ற பறவைகளையே நாம் காணமுடிகிறது. ஆயினும் ஆயிரக்கணக்கான பறவையினங்கள், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இருந்ததை, அவை அழிந்து வருவதை பறவையியல் அறிஞர்கள் குறிப்பிட்டு எழுதுகிறார்கள். பறவையினங்களைப் பற்றிய கல்வியை  ‘ஆர்னித்தாலஜி’ (Ornithology) எனக் குறிப்பிடுவர். வடநாட்டைச் சேர்ந்த பறவையியல் சிறப்பறிஞரான டாக்டர் சலீம் அலி அவர்கள் தம்முடைய முதிர்ந்த வயதுவரை பல்லாயிரக் கணக்கான பறவைகளின் வாழ்க்கையை ஆராய்ந்து, அவற்றில் அழிந்து வருகின்ற அரிய வகைப் பறவைகளின் நிலையினையும் குறித்துக் கவலையோடு எழுதி வைத்துள்ளார்.

    தமிழகத்தில் P.L.சாமி அவர்கள் தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள அன்னப்பறவை, ஆனைச்சாத்தான், குருவி (கரிக்குருவி), அன்றில் பறவை போன்ற அரிய வகைப் பறவைகள் குறித்துக் கள ஆய்வு செய்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இம்முறையில் பேராசிரியர் முனைவர் க.ரத்னம் அவர்கள் தமிழ்நாட்டுப் பறவைகள் என ஓர் அரிய நூலை மெய்யப்பன் தமிழாய்வகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

      இதுவரை அறியப்படாத செய்திகளும், அபூர்வமான பறவைகளின் வண்ணப்படங்களுமாக இந்நூல் பறவைகளைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு கருவூலமாக விளங்குகிறது.

   பொதுவாக இலக்கியங்களில் பறவைகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படும். சங்க இலக்கியங்களில் சாதகப் பறவைகள், அன்றில் பறவைகள், அன்னங்கள், கொக்குகள் போன்றவற்றைக் கருப்பொருள்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுச் சொல்லுவர்.

திருவள்ளுவர்,

               பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

                வேந்தர்க்கு வேண்டும்பொழுது”

என்று காக்கையைப் பற்றியும், கூகையைப் பற்றியும் குறிப்பிடுவார்.

          63நாயன்மார்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தம் தேவாரத்தில், கோடியக்கரையில் (வேதாரண்யத்திற்கு அருகில்) உள்ள குழகராகிய சிவபெருமானைப் பாடும்போது, அப்பகுதியில் வாழுகின்ற ஆந்தைகள் குறித்துப் பாடுகிறார்.

               ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில் கரிக்குருவியாகிய ஆனைச்சாத்தான் குருவியைப் பற்றிப் பாடும்போது,

               கீசுகீசு என்றெங்கும் ஆனைச் சாத்தான் கலந்து

                பேசிய பேச்சரவம் கேட்டிலையோ”

               என்று கூறுகிறார்.

           பிற்காலப் புலவர்களில் ஒருவராகிய சத்திமுற்றப் புலவர் ‘நாரை’ என்கின்ற நீர்ப்பறவையைக் குறிப்பிடும்பொழுது, அதனுடைய நீண்ட மூக்கு பனங்கிழங்கினைப் பிளந்தது போல் இருக்கின்றது என்பதனை,

               நாராய் நாராய் செங்கால் நாராய்

                பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

                பவளக்கூர்வாய் செங்கால் நாராய்”

என ஓவியத்தில் நாரையைக் காட்டுவது போலப் பாடிச் சிறப்பித்துள்ளார்.

               மகாகவி பாரதிகூட சிட்டுக்குருவியைப் பற்றி அழகாகப் பாடியுள்ளார். பறவையினங்களில் நாம் பார்த்தும், பெயர் தெரியாத பறவைகளைப் பற்றியும் அவற்றின் இயல்புகளைப் பற்றியும் அறியும்பொழுது வியப்பு ஏற்படுகிறது. முக்குளிப்பான், கூழைக்கடா, பாம்புத்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், பூ நாரை என 300க்கும் மேற்பட்ட பறவையினங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்பதாகப் பறவையியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

        இதிலும் ‘வலசை’ என்ற ஒரு சொல்லை பறவைகள் குறித்துப் பயன்படுத்துகிறார்கள். அயல்நாடுகளிலிருந்து உணவுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும், தட்பவெப்ப நிலைச் சூழலுக்கேற்பவும், ஆயிரக்கணக்கான மைல்கள் வெளிநாடுகளிலிருந்து பறந்து வருகின்ற பறவைகளை ‘வலசைகள்’ என்று குறிப்பிடுகின்றனர்.

               உள்ளான்’ என்ற பறவையினத்தைச் சேர்ந்த விசிறிவால் உள்ளான், கோரை உள்ளான், கல்திருப்பி உள்ளான் போன்றவை குளிர்காலத்தில் பிற இடங்களிலிருந்து வலசை வருகின்ற பறவைகளாகும். இவற்றில் கல்திருப்பி உள்ளான் எனும் பறவை, கடற்கரையில் சிறுசிறு கற்களைத் தனது மூக்கால் புரட்டி அவற்றுக்கடியிலே இருக்கின்ற புழு பூச்சிகளை உண்ணுகின்ற இயல்புடையது. தரையில் விரைவாக நடந்துகொண்டே, தன் மூக்கால் கற்களைப் புரட்டிக்கொண்டே பூச்சிகளை உண்ணும் இப்பறவை, பறக்க எழும்போது, சிறுகுரல் கொடுத்துக்கொண்டே பறந்து செல்லும் இயல்புடையது.

           தமிழ்நாட்டில் ‘அக்காகுருவி’ என்றழைக்கப்படுகின்ற ஒருவகைப் பறவை காடுகள், தோப்புகள், அடர்ந்த மரங்கள் உள்ள வீட்டுப் பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கும். இவை குளிர்காலத்தில் மௌனமாகத் திரிந்தாலும், கோடை காலம் நெருங்கும்போது விடாமல் கத்திக்கொண்டே இருக்கும். இதனால் இதற்கு மூளைக் காய்ச்சல் பறவை (Brain fever Bird) என்றொரு பெயரும் உண்டு.

   சிபிச் சக்கரவர்த்தி என்றொரு மன்னன் தன்னை நாடி அடைக்கலமாக வந்த ஒரு சிறு பறவைக்காக தன் உயிரையே கொடுத்ததாக, இலக்கியங்களில் படிக்கிறோம். இன்றைக்கும் சமாதானத்திற்கு அடையாளமாகப் புறாக்களைக் குறிப்பிடுகின்றோம். வண்ண மயில், நம் தேசியப் பறவையாக உள்ளது. அதனால் பறவைகளைக் காப்போம். அவற்றிடம் பாசமும் நேசமும் கொள்வோம்.

         வேடிக்கையாகச் சொல்வதாக இருந்தால் மயில் தேசியப் பறவை, கிளி ஜோசியப் பறவை.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.