பருவகாலக் கல்வி…

ஜுன், ஜுலை தொடங்கிவிட்டாலே நம் பள்ளிகளில் பரபரப்பு தொடங்கிவிடுகிறது. காரணம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற இடங்களில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய காலங்கள் இந்தக் காலங்கள்தான்.
‘ஆடிப்பட்டம் தேடிவிதை’ ‘பருவத்தே பயிர்செய்’ என்ற பழமொழிகள் விவசாயம் செய்கிய விவசாயிகளுக்கு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தம், சரியான நேரத்தில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கும் உண்டு. சரியான பருவத்தைத் தவறவிட்ட விவசாயியை ஊரே சேர்ந்து கண்டிப்பதும் உண்டு.
‘உழுகிற காலத்தில் ஊர் சுத்தப் போயிட்டு அறுக்கிற காலத்தில் அருவாளோடு வந்தா எப்படி விளங்கும்’ என்று கிராமத்துப் பெரியவர்கள் சொலவடை சொல்லிக் காட்டுவார்கள். சரியான பள்ளிக்கூடத்தை, கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அதிலும் சரியான பாடப்பிரிவுகளைப் பார்த்துச் சேர்த்து பணம் கட்டி, அப்பவே டியூசன் வாத்தியார்கள் யார் என்று பார்த்து, அவருக்கு முன்பணம் கட்டி அங்கேயும் சேர்த்துவிட்டு, புதிய உடைகள் புதிய புத்தகங்கள் எல்லாமே புதிது என்கிற அளவுக்குப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதற்குள் பெற்றோர்களுக்கு மூச்சு நின்றுவிடும் போலிருக்கும் காலம் இந்தக் காலம்.
இதையெல்லாம் சரியாகச் செய்யாவிட்டால், பிற்காலத்தில் பிள்ளைகள் பெற்றோர் மீது கோபம் கொண்டு ‘துள்ளித்திரிந்த பருவத்தே என் துடுக்கை அடங்கிப் பள்ளிக்கு அனுப்பாத பாதகன் என் தந்தை’ என மனம் வருந்திச் சொல்வதாக ஒரு பழம் பாடல் உண்டு.
பெற்றோர்களின் சிரமங்களைப் புரிந்து கொள்ளாத எத்தனையோ மாணவ மாணவியர்களை நாம் கல்விக்கூடங்களில் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். பருவத்தே பயிர்செய்கிற விவசாயிக்கு நான்கு மாதங்கள் கழித்துப் பலன் கிடைப்பது உறுதி. உழைப்பும் பூமியின் செழிப்பும் நிச்சயமாக விவசாயிகளின் வாழ்க்கையை உயர்த்தும்.
பிள்ளைகள் வேலைக்கு வந்து தங்கள் பெற்றோர்களைக் காப்பது இருக்கட்டும். பணம் கட்டும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவர்களை நினைத்துப் பார்க்கிறார்களா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு மாணவன் பெற்றோருக்குக் கடிதம் எழுதினானாம்.
‘நலமா? என் நலத்திற்குப் பணம் அனுப்பவும்’ என்று.
ஒரு நாலணா நாணயம் கீழே கிடந்தது. பலர் அந்த நாணயத்தைப் பார்த்தாலும் குனிந்து எடுக்கவில்லை. விரைவாகப் போயக் கொண்டிருந்தார்கள். அங்கே நின்றிருந்த ஒரு ஆசிரியர் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். பிறகு ஒரு மாணவனை அழைத்து அந்த நாணயத்தை எடுக்கச் சொன்னார். அந்தப் பையனும் எடுத்தான்.
‘ஏனப்பா இத்தனைபேர் இந்த காசைப் பார்த்துக் கொண்டே போகிறார்களா, இதை யாரும் எடுக்கக்கூடாதா?’ என்றார். உடனே அந்த மாணவன் ‘ஏன் சார் இதை எடுத்து என்ன செய்யப் போகிறோம்? இந்தக் காசைக் கொண்டு ஒரு டீ குடிக்க முடியுமா? பிச்சைக்காரர்கள்கூட வாங்க மாட்டான்’ என்றான் கோபத்தோடு.
அதற்கு அந்த ஆசிரியர் அமைதியாக ‘ஆமாம் தம்பி இந்தக் காசால எதுவும் வாங்க முடியாததுதான். எந்தப் பிச்சைக்காரனும் வாங்க மாட்டான்தான். அது எனக்கும் தெரியும். ஆனால் இந்த இருபத்து ஐந்து பைசாவிற்கு ஒரு போஸ்ட் கார்டு வாங்கலாம் (அந்தக் காலத்தில் அதுதான் விலை) அந்தக் கார்டில் உன்னைப் படிக்க வைப்பதற்காக இரவும் பகலும் உழைக்கின்ற தாய் தந்தையரை நலமா? என்று ஒரு வார்த்தை கேட்க முடியும்! கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இருக்கும் அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்க முடியும். போ போய் முடிந்தால் எழுது’ என்று அவர் சொன்னபோது, அந்தப் பையன் திகைத்துப் போய் நின்றுவிட்டான்.
வாழ்க்கைப் பாடங்கள் வகுப்பறைக்கு வெளியிலும் நடக்கின்றன.