பயிருக்கும் உயிர் உண்டு…. ஜெகதீஸ் சந்திரபோஸ்

ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்கள் இயற்பியல் மற்றும் தாவரவியல் ஆய்வாளர். வானொலியைக் கண்டுபிடிக்க மார்கோனி இலண்டன் மாநகரித்தில் முயன்று கொண்டிருந்த காலத்திலேயே அதுபற்றிச் சிந்தித்து அந்த ஆய்வு முடிவையும் வெளியிட்டார் ஜெகதீஸ் சந்திர போஸ். அப்போது மார்கோனி அவர்கள் ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதினாராம். அக்கடிதத்தில் ‘வானொலியைக் கண்டுபிடிக்கும் இம்முயற்சியில் கடும் உழைப்புடன் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் தாங்கள் அதற்கு உதவவேண்டும்’ என்று திரு.போஸ் அவர்களைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜெகதீஸ் சந்திர போஸ் மிகுந்த பெருந்தன்மையோடு தன் கண்டுபிடிப்பை அவருக்கு விட்டுக்கொடுத்தார். இதை அக்காலப் பத்திரிக்கைச் செய்திகள் உறுதிசெய்கின்றன. இதனாலேயே மார்கோனி அவர்களுக்கு 1909ஆம் ஆண்டு வானொலி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு கிடைத்தது. பின்னர் போஸ் அவர்கள் தாவரவியல் குறித்த ஆராய்ச்சியில் தன்னுடைய செயல்பாடுகளை மாற்றிக்கொண்டார்.
தாவரங்கள் தன்னை நேசிப்பவர்களைக் கண்டால் மகிழ்ச்சி அடைவதும், தன்னைத் துன்புறுத்துபவர்களைக் கண்டால் சோர்ந்து பயந்துவிடும் என்பதை மெல்லிய வயர்கள் மூலம் செடிகளை இணைத்து அதை ஒரு மீட்டரில் பொருத்தி, அந்த மீட்டர் துடிப்பிலிருந்து இதை நிரூபித்துக் காட்டினார் போஸ். எப்படியென்றால்,
தினசரி ஒருவரை வரவழைத்து ஒரு தாவரத்தின் கொப்புகள் ஒவ்வொன்றாக ஒடிக்கச் செய்தார். சிலநாட்கள் கழித்து அவர் அறைக்குள் வருவதற்கு முன்பாகவே அவர் வருகையை உணர்ந்துகொண்ட தாவரங்கள் தங்களுடைய துன்பத்தை வெளிப்படுத்துவதைச் சுட்டிக்காட்டினார்.
நமது தமிழ்நாட்டில் வாடிய “பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று இராமலிங்க வள்ளலார் பயிர்களுக்கும் உயிர் உண்டு என்று அவையும் நம்மைப்போல்; இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் என்றும் உணர்ந்து அக்கருத்தை தம் பாடல்களில் பதிவு செய்தார். இந்நிகழ்வையே ஜெகதீஸ் சந்திர போஸ் அவர்கள் செயல்பாட்டின் (Experiment) மூலமாக நிரூபித்துக் காட்டினார். மேலும் அவரைப் பற்றிச் சில செய்திகள்…
‘பயிருக்கும் உயிர் உண்டு’ என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஸ் சந்திர போஸ். இவர் 1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் நாள் இன்றைய பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார்.
இவர் வானொலி மற்றும் நுண்ணலை ஒளியியல் ஆய்வுக்கு முன்னோடியாக இருந்தார். தாவர அறிவியலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார் மற்றும் சோதனை அறிவியலின் அடித்தளத்தை அமைத்தார். இந்தியத் துணைக்கண்டம் ஐஇஇஇ (IEEE) அவரை வானொலி அறிவியலின் தந்தைகளில் ஒருவராக அறிவித்தது. மேலும் இவர் தாவரங்களின் வளர்ச்சியை அளவிடும் கருவியான கிரெஸ்கோகிராஃப்டையும் கண்டுபிடித்தார். சந்திரனில் உள்ள ஒரு பள்ளம் அவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
மின்காந்த அலைகள் பற்றி அவற்றை உருவாக்கிக் காட்டியிருந்தார் ஹெர்ட்ஸ். 24அடி மட்டுமே அளவுகொண்ட சிறிய அறையில் எந்த அறிவியல் உபகரணங்களோ, வழிகாட்டியோ இல்லாமல் இதுசார்ந்த ஆய்வில் தானே இறங்கினார் ஜெகதீஸ் சந்திரபோஸ். கொஹரர் என்கிற கருவியை ஏற்கனவே பான்லி என்கிற அறிஞர் உருவாக்கி இருந்தார். அதன் மூலம் ரேடியோ அலைகளைக் கண்டறியமுடியும் என்று அதை செம்மைப்படுத்திய லாட்ஜ் சொன்னார். ஆனால், அந்தக் கருவி நிறைய குறைபாடுகளோடு இருந்தது. அதனால் சீராக எந்த ரேடியோ அலைகளையும் உணரமுடியவில்லை. போஸ் நிறைய மாற்றங்களை அந்தக் கருவியில் கொண்டுவந்தார்.
இன்னமும் சொல்வதானால் அதை முழுமையாக மாற்றியமைத்தார் போஸ். பாதரசத்தை அதில் சேர்த்தார். சுருள்வடிவ ஸ்பிரிங்குகளை இணைத்தார். கூடவே டெலிபோனைப் பயன்படுத்தினார். பின் குறைகடத்தி படிகத்தை கருவியில் இணைத்து பார்த்தார். வெறுமனே அலைகள் இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டிருந்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து, மீண்டும் அதைத் திரும்பப்பெறுகிற மாயத்தை செய்தது. அந்த அற்புதம் அப்பொழுதுதான் நிகழ்ந்தது. 5மில்லிமீட்டர் அளவில் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு மைக்ரோவேவ் என்று அறியப்படுகின்றன. மின்காந்த அலைகளின் எல்லா பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ். கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்த முதல் ஆளுமை ஆனார்.
அதைக்கொண்டு ஒரு பெல்லை ஒலிக்கச் செய்து வெடிமருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ். கூடவே அதைக்கொண்டு சில மைல் தூரத்துக்கு ரேடியோ கொண்டு சென்று மீண்டும் பெறவும் சாதித்து காண்பித்தார் போஸ். அதாவது உலகின் முதல் ரேடியோ எழுந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்கோனி ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாகச் சொன்னார்.
மிகக்குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் ஓர் எந்திரத்தை இவ்வுலகில் முதன்முதலில் வடிவமைத்த பெருமை போஸ் அவர்களையே சாரும். மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புதியதோர் ஒளிபடக் கோட்பாட்டை (Photographic theory) அவர் உருவாக்கினார். கணிப்பொறி அறிவியலின் துவக்கக் கால ஆய்வாளர்களில் போஸும் அடங்குவார்.
போஸ் மிகச்சிறந்த இரு நூல்களை இயற்றி உலகப்புகழ் பெற்றார். உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்பது ஒரு நூல்.
தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Mechanism of Plants)என்பது மற்றொரு நூல். இவ்விரு நூல்களின் வாயிலாக வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிற விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்தார்.
1915ஆம் ஆண்டு இலண்டன் ராயல் கழகத்தில் போஸ் அவர்கள் “புறத்தூண்டுதல்களுக்குத் தாவரங்கள் எவ்வாறு பொறுமையுடன் நடந்து கொள்கின்றன” என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். தாமே வடிவமைத்துத் தாயாரித்த இந்தியக் கருவிகளின் துணைகொண்டு பல்வகையான செயல்முறை விளக்கங்களைச் செய்து காட்டினார். 1920ஆம் ஆண்டு இலண்டன் ராயல் கழகத்தின் உயர்நிலை உறுப்பினர் பதவியைப் பெற்றதன் மூலம் போஸ் அவர்கள் இந்திய அறிவியலுக்குப் பெருமைத் தேடித் தந்தார்.
தாவரங்களும் நம்மைப் போன்றே உணவு உண்டு செறிக்கின்றன. அவைகளும் மனிதர்களைப்போல் இரவில் உறங்கி, காலையில் விழிக்கின்றன. அவையும் பிறக்கின்றன, இறக்கின்றன. அவைகளுக்கும் நம்மைப்போன்றே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மைகளைக் கண்டறிந்தார் போஸ்.
மனவுறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, பொறுமை ஆகியவைகட்கு உறைவிடமாய் விளங்கிய ஜெகதீஸ் சந்திர போஸ் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரு வெற்றியும், பெரும் புகழும் ஈட்டியதன் வாயிலாக இந்தியாவின் புகழை உலகில் மிளிரச் செய்தார் எனில் அதில் மிகையேதுமில்லை.
உலகின் மிகச்சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில், சிந்தனையாளர்களில் போஸ் அவர்களுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.