பனையோலைகளும்… புதிய வலைதளங்களும்…

உலகப் புத்தகத் திருநாள் மனித வர்க்கத்தின் அறிவுத்திருநாள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு புத்தக நூல்நிலையமும், அறிவுத் திருக்கோயில்கள்தாம்.
மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்தான் என்கின்றார் ஒரு மேல்நாட்டு அறிஞர். இத்தகைய புத்தகங்கள் ஒருகாலத்தில் ஓலைகளில் எழுதப்பட்டு வந்தன. அந்த ஓலைகளைத் தமிழ் கற்ற சான்றோர்களும், ஆன்மீகத் திருமடங்களும் பேணிப் பாதுகாத்து வந்தன.
புலவர்களும், எழுத்தாணி கொண்டு பனைஓலைகளில் எழுதும் பயிற்சி உடையவர்களும் இருந்ததால் இப்பனைஓலைகள் காலங்காலமாய் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அதுவும் அந்தக்காலங்களில் புள்ளி எழுத்துக்கள் கிடையாது. நெடில் குறில் வேறுபாடுகளைப் பிரித்தறிவது கடினமாக இருந்தது. வீரமாமுனிவர் போன்ற மேல்நாட்டு கிறித்தவப் பாதிரிமார்கள் தமிழ்கற்று எழுத்துச் சீர்திருத்தம் செய்து ‘சதுரகராதி’ எனும் அகராதியை உருவாக்கித் தமிழுக்குத் தொண்டு செய்தனர்.
அச்சுக்கூடங்கள் வந்தபிறகு தாள்களில் நூல்கள் புதுவடிவம் பெற்றன. வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகளுக்கு முன்னரே ஓர் அதிசயம் நடந்தது. இந்தியமொழிகளில் தமிழ்மொழி முதலில் அச்சேறிற்று. தமிழில் வெளிவந்த முதல்நூல் ‘தம்பிரான் வணக்கம்’ என்னும் நூல்தான். இதனைக் தனிநாயக அடிகள் பிரிஸ்பேன் பல்கலைக்கழத்திலிருந்து (இவருக்கு 32 மொழிகள் தெரியும் இவர்தான் முதல் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தவர்) படியெடுத்துக்கொண்டு வந்து உலகத்திற்கு அறிவித்தார்.
தற்காலத்தில் அச்சுவடிவ நூல்கள் ஒலிவடிவிலும், வலைதளப் பதிவிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எப்படித்தான் இருந்தாலும் புத்தகங்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. பனையோலையிலிருந்த தமிழ் மென்தமிழாக (software) மாறியிருப்பது அறிவியல் நமக்குத் தந்த கொடை. ஒரு புதுக்கவிஞன் கூட எழுதினான்,
வள்ளுவன் – ‘கள்ளுண்ணாமையை’ பனையோலைகளில் எழுதினான்…! என்று
தமிழ் இலக்கிய உலகில் ஒரு பழமையான பழக்கம் உண்டு. அதாவது ஒரு புலவர் பற்பல காலம் சிந்தித்து ஒரு நூலை இயற்றுவார். அக்காலத்தில் பனையோலையில் இரும்பு எழுத்தாணியில் அவை எழுதப்படும். தான் எழுதிய நூலை அப்புலவர், அறிஞர்கள் நிறைந்த சபைகளில், தமிழ்ச்சங்கங்களில் அனைவர் முன்னிலையிலும் வாசித்து அரங்கேற்றம் செய்வார். அப்போது அந்நூலைப் பாராட்டியும், அதில் குறைகளைச் சுட்டிக்காட்டியும் புலவர் பெருமக்கள் திறனாய்வு செய்வார்கள்.
அரசர்கள் அப்பாடல்களுக்கு அல்லது அந்த நூலுக்குத் தக்க சன்மானம் கொடுப்பார்கள். இந்த வழக்கம்தான் காலங்காலமாகத் தமிழ் இலக்கிய உலகில் நடைபெற்று வந்து இருக்கிறது.
மதுரையில் இருந்த முதல்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய சங்கங்களில்தான் சங்க இலக்கிய நூல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. திருவிளையாடல் படத்தில் பாண்டியமன்னன் பிழையான பாடல்களுக்குப் பரிசு தந்துவிடக்கூடாது என்பதற்காக நக்கீரர், தமிழ்ப்புலவராக வந்த சிவபெருமானையே எதிர்த்து, ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ எனக் கூறியதையும் கேட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். தவறான சொற்களோ, பிழையான பாடல்களோ, தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாகவும் இருந்திருக்கிறார்கள்.
தற்காலத்தில் ஒரு ஆச்சரியத்தைப் பார்க்கிறோம். யார் வேண்டுமானாலும் கவிதைப் புத்தகம் எழுதுகிறார்கள். யாரையாவது தலைமை தாங்க வைத்துப் புத்தகம் வெளியிடுகிறார்கள். பெரியபெரிய பட்டங்களும் வாங்கிக் கொள்கிறார்கள். சமீபத்திய புத்தகக் கண்காட்சிகளில் பலகோடி ரூபாய்களுக்குப் புத்தகங்கள் விற்பனை ஆகியிருப்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் அவற்றில் வெளியான புத்தகங்களின் தரங்களை நிர்ணயிப்பது யார்? அறிஞர் பெருமக்களா? தமிழ்ச்சான்றோர்களா? வாசகர் வட்டத்தைச் சார்ந்த வாசிக்கும் பழக்கமுடைய நண்பர்களா?
வாசகர் வட்டங்கள், நூல் அறிமுகங்கள், நூல் மதிப்பீடுகள் இவை தொடர்ச்சியாக ஒவ்வொரு ஊரிலும் உள்ள நூலகங்களில், இலக்கிய மன்றங்களில் வாசிக்கும் பழக்கமுடைய நண்பர்களின் வட்டாரத்தில் நடைபெற்று வருமானால், புதிய புத்தகங்களின் தரத்தினை நாம் அறிந்து கொள்ள முடியும்.
எழுத்துப் பிழைகள் இல்லாத புத்தகங்களைப் பதிப்பிக்கும் முயற்சியும் முழுமையாக நடைபெற வேண்டும். அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமகனான நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் ‘இந்தப் புத்தகத்தில் ஒரு பிழையேனும் கண்டுபிடித்துக் கொடுப்போருக்குப் பரிசுகள் வழங்கப்பெறும்’ என ஒரு குறிப்புரையும் எழுதுவாராம்.
பழைய புத்தகங்களைப் புதிதாகப் பதிப்பிக்கும்போதும், புதிய இலக்கியங்களை உருவாக்கும்போதும் பிழையற்ற, தரமான படைப்புகளை உருவாக்கிப் புத்தகங்களாக வெளியிட்டால்தான், வருங்காலத்தில் தமிழ் கற்கும் தலைமுறைக்கு அது பயன்தரும்.
உலகமக்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய நாள் இந்த உலகப் புத்தகநாள்தான்.
கற்போம்…. கற்பிப்போம்… கல்வியால் உயர்வோம்…
படிக்கும் நாளெல்லாம் மேல்…படிக்காத நாளெல்லாம் பாழ்…