படங்களும்… பாடங்களும்…

கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், திரைப்படங்கள், புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இசை என படைக்கப்படுகின்ற எல்லாமே பொழுது போக்குவதற்காகவா? அல்லது பயன்பாட்டிற்காகவா? அதாவது கலை என்பது கலைக்காகவா? மக்களுக்காகவா? என்ற பட்டிமன்றத் தலைப்பு ஒன்று வெகுகாலமாகவே, ரசிகர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள் மத்தியில் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
‘எந்த ஒரு படைப்பும் ஏதாவது ஒரு பயனைத் தரவேண்டும்’ என்கின்றனர் சிலர்.
‘படைப்பை ரசித்து மகிழ வேண்டுமே, தவிர, ஆராய்ச்சி செய்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது’ எனச் சொல்கின்றனர் சிலர்.
உதாரணமாக, ஒரு செடியில், வாசனை பொருந்திய, வண்ணங்கள் நிறைந்த மலர் பூத்திருக்கிறது என்றால் அதனை ரசிக்க வேண்டும். ரசனைதான் முக்கியம் என்று சிலர் சொல்ல… அந்தப் பூ பூப்பதே காயாகிப், பழமாகி, விதை தந்து, அடுத்து ஒரு செடியை உருவாக்கத்தான் எனச் சிலர் சொல்கின்றனர்.
இந்த இரண்டு செய்திகளிலுமே உண்மை இருக்கத்தான் செய்கிறது.
ஒரு நல்ல நகைச்சுவை சொல்லப்படும்பொழுது சொல்பவர் மகிழ்ச்சி அடைகிறார். கேட்பவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அந்த நகைச்சுவைக்குள் ஒரு கருத்தும் அமையுமானால், நினைத்து நினைத்துபர் பார்த்துப் பயனடையும் வழி இருக்கிறது.
அந்தக்காலத் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்கள் முதலில் நாடக பபூன்கள் போல, கோமாளிகள் போலக் குதித்து மக்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்கள் நாடகம், திரைப்படம் என நடிக்கத் தொடங்கியபோது, தங்கள் வசனங்களால், பாடல்களால், நடிப்பால் மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றனர். ‘நல்ல தம்பி’ என்ற திரைப்படத்தின் கதை வசனத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுத, கலைவாணர் அந்தப் படத்தை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்தார்.
அந்தப் படத்தில் குடியின் தீமையை எடுத்துக்காட்ட ஒரு தெருக்கூத்து நாடகமும், கல்வியின் பெருமையை உலகுக்குச் சொல்ல, பழைய ‘நந்தனார்’ நாடகத்தைப் புதுமெருகேற்றி ‘கிந்தனார்’ என்ற பெயரில் கதாகாலட்சேபமாகவும் நடத்திக் காட்டுவார். ‘கிந்தன்’ என்கின்ற தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த ஏழைச்சிறுவன் கல்வி கற்று, கல்வி அதிகாரியாக உயர்ந்ததால், அந்த ஊரே அவனை எப்படி மதித்து வணங்கியது என்பதுதான் அந்தக் கதையின் முக்கியச் செய்தி.
அதில், நகைச்சுவைப் பாடல்களை உடுமலை நாராயணகவி அவர்கள் எழுத, அதை இசையோடு பாடி மக்களின் சிந்தனைத் திறனைத் தூண்டியவர் கலைவாணர். ஒரு நாடகத்தில், ஒருவர் என்.எஸ்.கேயிடம் வந்து, ‘அவர் சரியில்லை’ ‘இவர் சரியில்லை’ ‘அவன் போக்கே சரியில்லை’ என்று சொல்லச் சொல்ல, கேட்டபடி நிற்கும் கலைவாணர், சொன்னவரிடம் ‘தம்பி உங்க சட்டைப் பையில் என்ன இருக்கு?’ என்று கேட்பார். ‘இருங்கண்ணே இதோ பார்த்துச் சொல்றேன்’ என்பார் அவர். ‘பாக்காமச் சொல்லணும் தம்பி, இப்ப நீங்க அவரைப் பத்தி, இவரைப் பத்தி, அவனைப் பத்தி, இவனைப் பத்தி சொன்னதெல்லாம் பாக்காமதானே சொன்னீங்க…’ என்று சொல்லும்போது நாடகக் கொட்டகை கைதட்டலால் அதிரும்.
எந்தச் செய்தியும் ரசனையோடும், பயன்பாட்டோடும் சொல்லப்படுமானால் அவை காலத்தை வென்று நிற்கும்.
படங்களும், பாடங்கள்தான்!