பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்”
– பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்.
முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்
என்ற சிற்றூரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். தேவர்
அவர்கள் ஆன்மிகவாதியாகவும், சாதிபாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப்
போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்
தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத்
தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரையே
சாரும்.
1927ஆம் ஆண்டு சென்னை சென்ற தேவர் அவர்கள் பிரபல காங்கிரஸ்
பிரமுகரும், முன்னணி வழக்கறிஞருமான சீனிவாசனைச் சந்தித்தார். அப்போது
அவர் சென்னையில் நடந்து கொண்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் காரியக்
கூட்டத்திற்கு தேவர் அவர்களை அழைத்துச் சென்றார்.
அக்கூட்டத்தில் வழக்கறிஞர் சீனிவாசன் அவர்களின் எழுச்சிமிகு
உரையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உணர்ச்சிமிகு உரையையும்
கேட்டு வியந்தார் முத்துராமலிங்கத்தேவர். இதனால் விடுதலைப் போராட்டத்தில்
தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளத் தீர்மானித்தார். அப்போது
தொடங்கியது அவரது முழுநேர அரசியல் பயணம். தனது உடல், பொருள், ஆவி
என அனைத்தையும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகக்
காணிக்கையாக்கினார் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். அன்று முதல் அவர்
விலை உயர்ந்த ஆடைகளை உடுத்துவதை நிறுத்திக்கொண்டார். தூய கதர்
ஆடைகளை விரும்பி அணியத் தொடங்கினார்.
முழுமையான காங்கிரஸ்காரராக மாறினார்.வழக்கறிஞர் சீனிவாசன் இல்லத்தில் தங்கியிருந்தபோது பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் தேசிய உணர்வு மற்றும் தெய்வீகப்பற்று குறித்து அறிந்து கொண்டார் நேதாஜி அவர்கள்.
அதன் விளைவாகப் பின்னர் அவரைக் கொல்கத்தாவில் உள்ள தனது
இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் நேதாஜி. தனது தாயாரிடம் உங்களுடைய
கடைசி மகன் பிறந்திருக்கிறான் என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை
அறிமுகம் செய்து வைத்தார் நேதாஜி.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை
அழைத்துச்செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் அதற்கு எங்கு
பார்த்தாலும் எதிர்ப்பு. இந்நிலையில் ஆலயப்பிரவேசக்குழு மதுரை எட்வர்ட்
ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன்
உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஆலயப்பிரவேசம் அமைதியாக
நடைபெறத் தேவரின் ஒத்துழைப்பும் உறுதிமொழியும் வேண்டும் என அவர்கள்
தேவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்கள்.
அதற்கு அவரும், “என் சகோதரர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், அன்னை மீனாட்சிக் கோயிலில் ஆலயப்பிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்துப்
பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு
திரும்பும்வரை அவர்கள் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்” என்றார்.
அதன்படி ஆலயப்பிரவேசம் 08.07.1939இல் காலை 10மணிக்கு மிகச் சிறப்பாக
நடைபெற்றது.
தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு
எதிரான போராட்டம் என்கிற ஆயுதம், இவர் மீது தனித்தன்மையான அரசியல்
நோக்கினை உண்டாக்கியது. இச்சட்டத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கிய முத்துராமலிங்கத்தேவர் மதுரை, இராமநாதபுரம்,
திருநெல்வேலி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்று மக்களைத் திரட்டினார்.அப்போதைய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வும்
கிட்டவில்லை. இருப்பினும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தொடர்
போராட்டத்தின் எதிரொலியாக 1942ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது
குற்றப்பரம்பரைச் சட்டம்.
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும்
வெற்றி பெற்ற பெருமை இவரையேச் சாரும். ஆங்கில அரசு இவருக்கு எதிராக
வாய்ப்பூட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்தபோதும், தேர்தல் களத்துக்குச்
செல்லாமலே வெற்றிபெற்ற பெருமையை உடையவர் பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் புகழ்; என்றென்றும்
நிலைத்து நிற்கும்.