பக்திப் பயிரும்… பசுமைப் பயிரும்…நம்மாழ்வார்!

நம் இந்திய நாடு வேளாண்மையில் சிறந்த விவசாய நாடு. இங்கு வற்றாத ஜீவநதிகள் உண்டு. காலம் அறிந்து பெய்யும் பருவமழையும் உண்டு. இத்தகைய இயற்கை வளங்கள் நம் நாட்டிற்குக் கிடைத்த வரங்கள்.
குறிப்பாகத் தமிழகம் மூவாயிரம் ஆண்டுப் பழமையும் பெருமையும் உடையது. வேட்டைக்காரச் சமுதாயமாக இருந்த மனிதஇனம், கால்நடைச் சமுதாயத்திற்கு மாறிப் பின்னர் ஆற்றங்கரை நாகரீகத்தை நாடி வேளாண்மைச் சமுதாய வாழ்க்கை முறையைத் தொடங்கியது.
நம் தமிழர்கள் மலையும் மலைசார்ந்த இடத்தைக் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடத்தை முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த பகுதிகளை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதிகளை நெய்தல் என்றும் மணலும் மணல் சார்ந்த பகுதிகளைப் பாலை என்றும் பிரித்து அந்தந்த நிலத்துக்கேற்ற வேளாண்மை முறைகளையும் தொழில்களையும் செய்து வந்தார்கள்.
தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் இந்த வளமான மண்ணைப் பொன்னாக்கின. நெல்லும், கரும்பும், வாழையும், வெற்றிலையும் என நஞ்சை நிலப் பயிர்களும் சாமை, தினை, கேழ்வரகு, வரகு போன்ற புஞ்சை நிலப்பயிர்களும் செழித்து வளர்ந்தன. தஞ்சை… தமிழகத்தின் நெற்களஞ்சியமாயிற்று. இதுபோல மதுரையும் நெல்லையும் தெற்குப்பகுதியும் நெற்களஞ்சியங்களாயின.
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகானத் தென்மதுரை…
என விளங்கிய இந்நாட்டில் பசுமைப் புரட்சி செய்யும் முயற்சி ஏற்பட்டது. செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் நவீன விவசாயக் கருவிகளும் வந்து நம்நாட்டில் காலடி எடுத்துவைக்க மகசூல் பெருகியது எனச் சிலர் சொன்னாலும், மண்வளம் குறையத் தொடங்கியது உண்மை. சுற்றுப்புறச் சூழலுக்கு அழிவு ஏற்பட்டது. காணுயிர்களும், சிற்றுயிர்களும் மரஞ்செடி கொடி தாவரமும் அழிவை நோக்கிச் செல்லத் தொடங்கின.
இந்நிலையில்தான் இயற்கை வேளாண்மையை உலகோர் அறிய ஒரு மனிதர் தோன்றினார். அவர் செய்த வேளாண் புரட்சிதான் இன்றைக்கு விவசாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்தான் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். இத்தகைய வேளாண் போராளி குறித்து விரிவாகக் காண்போம்…
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் 1938ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி பிறந்தார்.
நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை ஜே.சி.குமரப்பாவின் கொள்கைகள். “டிராக்டர் நல்லாத்தான் உழும், ஆனால் சாணி போடாதே” என்று குமரப்பா சொன்னதை நகைச்சுவைத் ததும்ப தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.
கரூர் மாவட்டத்தில் கருமான்பட்டி என்ற இடத்தில் ‘வானகம்’ என்ற பண்ணையை அமைத்தார். தன்னுடைய மூன்றாண்டுக் கால செயலால் கரடாக இருந்த நிலத்தில் இயற்கை வேளாண்மை செய்யும் நிலமாகவும், பல்லுயிர் வாழும் கானகமாகவும் மாற்றிக் காட்டியவர் நம்மாழ்வார்.
நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு என்னும் இந்த வசனத்தைத் தனது எந்த ஒரு கூட்டத்திலும் பேசத் தவறியதே இல்லை நம்மாழ்வார்.
நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.
பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல. பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தவர் நம்மாழ்வார். இது அவரது ‘வானகம்’ பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார்.
நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல… மிகச்சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத் தொடர்;ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லையெனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது. சோலைக்காடுகள் இல்லையெனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்தி வந்தார்.
தமிழுலகம் கவனக்குறைவாக இருந்தவேளை, வேம்புக்குக் காப்புரிமை பெற வெளிநாட்டு நிறுவனம் முனைந்தபோது பெருமுயற்சி எடுத்து தடுத்து நிறுத்திய நம்மாழ்வார், தொடர்ந்து இயற்கை வேளாண்மை மூலம் எந்த நிலமும் விளைநிலமாக மாற்றப்படலாம் என்பதை நிரூபித்தும் காட்டினார்.
காந்தியைப் போலவே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர். கடும் பனிக்காலத்திலும் கூட சட்டையை அணிய மாட்டார்.
இன்று பாரம்பரிய நெல்லின் பக்கமும், இயற்கை வேளாண்மையின் பக்கமும் இளைஞர்கள் பலரும் திரும்பியிருக்கிறார்கள் என்னும் மகிழ்ச்சிக்கு விதைபோட்ட மனித மரம் நம் நம்மாழ்வார்.
இத்தமிழகத்தில் பக்திப் பயிர் வளர்த்தவர், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார்! பசுமைப் பயிர் வளர்த்தவர் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்!