பகீரதனும்… கங்கையும்…

மனித வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவை முயற்சி, விடாமுயற்சி, இடைவிடா முயற்சி. இந்த மூன்றையும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு முன்னேற வேண்டும். முயற்சி செய்தவர்களுக்கெல்லாம் வெற்றி கிடைத்துவிடுமா? என்று ஒரு கேள்வியைச் சிலர் கேட்பார்கள். இதற்குத் திருவள்ளுவர் விடைசொல்லும்போது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
இறைவனின் அருள் இல்லாவிட்டாலும்கூட, ஒருவருடைய முயற்சி அந்த முயற்சிக்கு ஏற்ற பலனைக் கொடுக்கும். அது தெய்வத்தால் கூட முடியாததாக இருக்கலாம். ஆனால் முயற்சி செய்தால் எவரும் வெற்றிபெறலாம். இதற்கு ஆதாரமாகப் புராணத்தில் சொல்லப்படுகின்ற பகீரதனுடைய கதையைச் சான்றாகக் காணலாம்.
தம் முன்னோர்களின் சாபத்தைப் போக்குவதற்காக ஆகாயத்தில் ஓடுகின்ற கங்கைநதியை (பாகீரதி) பூமிக்குக் கொண்டுவரும் முயற்சியாகச் சிவபெருமானை நோக்கிப் பல்லாண்டு காலம் தவமிருந்தான் பகீரதன். அவரும் அருள்புரியலானார். ஆனால் ஆகாயத்திலிருந்து தண்ணீர் பூமியில் விழுந்தால் அதுவும் ஆறே பூமியை நோக்கி விழுமானால் பூமி தாங்குமா? என்ற யோசனை வந்தபோது, அதற்கும் சிவபெருமானே அருள்செய்ய வேண்டுமென்று தன் தவத்தைத் தொடர்ந்தான். சிவபெருமானும் ஆகாயகங்கையைத் தன் சடாமுடியில் தாங்கினாராம்.
அதனால் கங்கை பூமியை வந்து அடையவில்லை. பகீரதன் தவத்தை விடவில்லை. மீண்டும் முயற்சிக்கத் தொடங்கினான். அவனது விடாமுயற்சியால் மகிழ்ந்த சிவபெருமான் கங்கை நதியைப் பூமியில் பாயுமாறு தன் சடாமுடியிலிருந்து வழியவிட்டார்.
அப்படிக் கங்கை பூமிக்கு வந்த இடம்தான் லட்சுமணஜ்வாலா. இன்றைக்கும் இமயமலையில் இந்த இடத்தில்தான் கங்கைநதியானது மலைகளைத் தாண்டி அருவியாகக் குதித்து, ஆறாக ஓடுகின்ற இடம் இதுதான்;. இதனை நாம் இன்றைக்கும் பார்க்கலாம் (நானும் பார்த்திருக்கிறேன், அங்கே குளித்திருக்கிறேன்) இப்படி இடைவிடாது பகீரதன் முயற்சி செய்ததையும் கங்கை ஆறு பூமிக்கு வந்ததையும் காளமேகப் புலவர் ஒரு பாடலிலே சொல்லியிருக்கிறார்.
அந்தப் பாடலில் ஒரு சிறப்பு என்னவென்றால், குடத்திலே கங்கை அடங் கும் என்று பாட முடியுமா? என்று ஒரு புலவர் காளமேகப் புலவருக்குப் போட்டி வைக்க, அவரும் வார்த்தை விளையாட்டின் மூலம், சடா மகுடத்திலே கங்கை அடங்கும் என்பதை, சடா + ம + குடத்திலே எனப் பிரித்துப் பாடி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அந்தப் பாடல் இதுதான்,
விண்ணுக்கு அடங்காமல் வெற்புக்கு அடங்காமல்
மண்ணுக்கு அடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்தவி றைவர் சடாம
முடத்திலே கங்கை அடங்கும்
என்று முடித்துக் காட்டினாராம்.
பகீரதன் தவம் செய்தபோது கங்கை நதியானது ஆகாயத்துக்கு அடங்காமல், மலைக்கு (வெற்பு) அடங்காமல் பூமிக்கு (மண்) அடங்காமல் வந்தபோதும் சிவபெருமானின் சடாமகுடமாக விளங்குகின்ற இமயமலையில் பாய்ந்து வந்ததை இந்தப் பாடலில் அழகாக விளக்குகிறார் காளமேகப் புலவர்.
இப்படிப் பகீரதன் தவம் செய்யவேண்டிய காரணம் என்ன? புராணத்தில் வருகின்ற அந்தக் கதையையும் சற்றே பார்த்துவிடுவோமே….
பகீரதன் சூரிய குலத்து திலீபனின் மகன். இராமரின் முன்னோரும் கங்கையும் பூலோகத்திற்கு வரக் காரணமானவர். கங்கை பூமிக்கு வந்த நாள் வைகாசி மாத வளர்பிறை பத்தாம் நாள் என வழங்கப்படுகின்றது. கங்கையைப் பகீரதன் கொண்டு வந்ததால், கங்கைக்குப் பகீரதி என்றும் பாகீரதி என்றும் பெயர் ஏற்பட்டது.
பகீரதப் பிரயத்தனம் (விடாமுயற்சி) எனும் சொல்லும் இவரது கடினமான விடாமுயற்சியைக் குறித்து, செய்வதற்கு அரியது எனக் கருதப்படும் செயலுக்கு வழங்கப்படலாயிற்று.
ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை யாகம் ஒன்றை நடத்தினார். யாகக் குதிரையானது திக் விஜயம் புறப்பட்டது. அப்போது விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவைத்தனர்.
குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாகக் கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் குதிரை இருப்பதைக் கண்டறிந்தனர். கபிலமுனிவரே குதிரையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டுமென்று தவறாகக் கருதினார்கள். ஆத்திரத்தில் முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபிலமுனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள் அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான் சாம்பலானார்கள் சகரனின் புதல்வர்கள்.
அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்ச சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன தங்களின் முன்னோர் நற்கதி அடைவற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவே இல்லை.
பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கையானது பூமிக்கு வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக நம்பினான். அதையடுத்துக் கங்காதேவியை நோக்கிக் கடும் தவம் செய்தார்.
ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி பூமிக்கு இல்லை என்பதைப் பகீரதனுக்கு உணர்த்தினாள். உலகாளும் சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான் இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள்.
உடனே பகீரதன் சிவபெருமானை நினைத்துக், கடும் தவம் இருந்தான். சிவபெருமானும் மனம் கனிந்தார். குளிர்ந்தார். பகீரதனுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டார்.
அதன்படி, பிரவாகமெடுத்து தபதபவென வந்த கங்கையைத் தன் சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார். பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர்கள் நற்கதி அடைந்தனர் என்கிறது புராணம்.
தெரிந்தோ, தெரியாமலோ, முன்னோர்கள் சில பாவங்களைச் செய்து, அது இன்றும் நம்மைப் பின் தொடர்ந்து வரலாம் என்கிறது சாஸ்திரம். அதனால்தான் கங்கையில் நீராடினால், பாவங்கள் அனைத்தும் தொலையும் என்று சொல்லிவைத்தார்கள் ஆச்சார்யர்கள்.
இந்தக் கதையை வைத்துதான் எந்த முயற்சியைப் பற்றிச் சொல்லுகிறபோதும் பகீரத முயற்சி என்ற ஒரு வார்த்தையை பகீரதன் பெயராலேயே இன்றைக்கும் பயன்படுத்தி வருகிறோம். முயற்சி செய்தால் மண்ணிலிருந்து விண்ணுக்கும் செல்லலாம். விண்ணைத் தாண்டியும் செல்லலாம். இதை ஒரு புதுக்கவிஞன் சொல்லுகிற போது
அத்தனையும் முடிப்போம்
அந்தக் கர்த்தரையும் பிடிப்போம்
என்று வேடிக்கையாகச் சொல்லியிருப்பார்.
முயன்றதால்தான் மனிதன் விலங்கிலிருந்து வேறுபட்டான். முயற்சித்தால் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று சொல்லுகிறார் கண்ணதாசன்.
முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்.