நீ குளிச்சதே இல்லையா…..?

               பயணம் என்றாலே மகிழ்ச்சிதான். அதிலும் ஒத்த சிந்தனையும், ஒத்த வயதும் உள்ள நண்பர்களோடு பயணம் செய்யும்போது, அந்தப் பயணத்துக்கு ஈடில்லை. இணையில்லை. கேலி, கிண்டல் எத்தனை அலுப்பிலும் வெளிப்படும் நகைச்சுவை, பூலோக சொர்க்கமாக அமையும் நேரம்.

               இப்படிப்பட்ட பயணத்தைக்கூட, குழப்பி விடுகிற நபர்களும் (?) சில சமயம் கூட வருவார்கள். ஒருமுறை நாங்கள் குற்றாலத்துக்கு வழக்கமான நண்பர்களோடு சென்றோம். அப்போது ஆறாவது விரல்போல், அதிகப்படியாய் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் என் நண்பனுக்கு… நண்பனுக்கு… நண்பனுக்கு… நண்பனாம். அந்த நபர் எங்களைப் படுத்தியபாடு…. குற்றாலக் குரங்குகள் கூட அப்படி படுத்தி இருக்காது.

               குற்றாலத்தில் இறங்கித், தங்கும் விடுதியில் பொருட்களை வைத்துவிட்டுப் பேரருவிக்கு (தமிழில் ‘மெயின் பால்ஸ்’) குளிக்கச் சென்றோம். பிறகு, அங்கிருந்து ஐந்தருவிக்கு நடந்தே செல்வது என்று திட்டமிட்டோம். பௌர்ணமிக்குச் சில நாட்களே இருந்த முன் நிலாக்காலம். பல்வகை பச்சை மரங்களும், மலர்களின் வாசமும், பொதிகைத் தென்றலும், சில்வண்டுகளின் ரீங்காரமும், நடக்க நடக்க எங்களிடையே நகைச்சுவையும் அருவியாய்ப் பொங்கி வழிந்தது.

               ஐந்தருவியை அடைந்து, ஒரு மரப்பாலத்தில் உட்கார்ந்திருந்தோம். புதிதாக வந்திருந்த நபர் (அவர் பெயர் என்னமோ ஒரு குமார்) வேகமாக ஓடிவந்து ‘ஒருத்தரைச் சட்டையக் கழட்டிப் போட்டு அடிச்சிட்டு இருக்காங்க’ என்று கத்தினார். நாங்கள் ஓடிப்போய் பார்த்தால், அங்கே ஒருவர்க்கு ‘ஆயில் மசாஜ்’ நடந்து கொண்டிருந்தது. நிலா வெளிச்சத்தில் அவர் ‘மஜாவாய்’ உட்கார்ந்திருந்தார். எங்களுக்கு வந்த கோபத்தில் நாங்கள் ஒன்றுமே பேசவில்லை.

               நிலவு வெளிச்சத்தில், ஐந்தருவியில் நீராடத் தொடங்கினோம். அந்தக் குமார் என்னிடம், மெதுவாகக் கேட்டார். ‘இந்த அஞ்சருவியில் எதுல வெந்நீர் வரும்?’ எனக்கு வேதனையில் கண்ணீர்தான் வந்தது.

               பத்துநிமிடம் குளித்திருப்போம். அவர் மீண்டும் என்னிடம் வந்து, ‘சீக்கிரம் வாங்க….இட்லி கடையை மூடிருவாங்க கிளம்புங்க…. கிளம்புங்க…. என்றார். நாங்களோ கவலைப்படாமல் ஒரு மணிநேரம் குளித்தோம். அவருக்குக் கோபம். அப்படியொரு கோபம்.

பிறகு நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தபோது அவர் சொன்ன இட்லி கடையை மூடிவிட்டார்கள். மூடிய கடையின் வாசலில் உட்கார்ந்து இரண்டுபேர் தாங்கள் சாப்பிட்ட கடைசி இட்லிகளைப் பற்றி, மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘ருசின்னா…. ருசி, அப்படியொரு ருசி… பூவாய் இருக்கிற இட்லிய லேசாப் பிச்சு, எண்ணெயில் குழப்புன இட்லிப் பொடியில தொட்டு, அப்படியே வாயிலே போட்டா….’ என்று அவர் சொல்லும்போதே, பேரருவியாய், வாயில் நீர் வந்தது. இதைக் கேட்டவுடன், குமார் கோபத்தின் உச்சிக்கே போய் கோபக்குமார் ஆகிவிட்டார்.

               ‘உங்க கூடப் போய் வந்தேனே? எனக்கு நல்லா வேணும்’ என்று சத்தம் போட, நான் அவரிடத்தில், ‘இங்க பார், நீ வாழ்க்கையில இட்லியே தின்னதில்லையா?’ என்று கோபமாகக் கேட்டேன். அவர் சற்றும் தயங்காமல், ‘நீ வாழ்;க்கையில் குளிச்சதே இல்லையா?’ என்று என்னைக் கேட்டார். நான் திகைத்துப் போய்விட்டேன். பிறகு ஒரு வழியாகச் சாப்பிட்டோம். ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தோம்.

நீதி:- சிலருக்குக் குற்றால அருவியில் குளித்தாலும் குணமாவதில்லை.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.