நீரே…. தெய்வம்….!

               நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

               வான்இன்று அமையாது ஒழுக்கு.”

என்பது வள்ளுவர் வாக்கு. இந்த உலகம் நீரால் சூழப்பட்டது. முந்நீராகிய உப்புக் கடல்நீரும், நன்னீராகிய குடிநீராரும்தான் இந்த உலகத்து உயிர்களை வாழ வைக்கின்றன. கடல்நீர் முக்கால் பகுதி பூமியிலிருந்தாலும், குடிநீராகிய நன்னீர் இருந்தால்தான் மனிதர்களும், மற்ற உயிர்களும் தாவரங்களும் வாழமுடியும். நன்னீரின் பெருமையைப் பற்றிக் கூறும்போது,

               மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்;

               உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா – கடல்பெரிது

               மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்

               உண்ணீரு மாகி விடும்.

                                                                                                         மூதுரை(12)

               ஆயினும் தரையில் வாழ்கின்ற உயிரினங்களைப் போலவே, கடல்நீரிலும் இலட்சக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் மூலாதாரம் நீர்தான். மனிதஉடம்பில்கூட எண்பது சதவீதம் நீர்தான் இருக்கிறது என அறிவியலாளர் கூறுவர். குறிப்பாகக் கோடைகாலத்திலும், குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் வற்றாமல் நீர் இருப்பதால்தான் ஜீவநதிகள் பூமியை செழிக்கச் செய்கின்றன.

               நாற்பது வருடங்களுக்கு முன், எங்கள் ஊர் சோழவந்தானில், வயல்களுக்கு நடுவே ஓடிவரும் வாய்க்கால் நீரை அள்ளிக் குடித்திருக்கிறேன். மழைக்காலத்தில் ஆற்றுநீரையும், கோடைக்காலத்தில் அந்த ஆற்றில் ஊற்றுநீரையும் அருந்தி வாழ்ந்த வாழ்க்கை இப்போது கனவாகிப்போனது. வெளியூர்களுக்குச் சென்றால் எந்த வீட்டிலும், எந்தக் கடையிலும் தண்ணீர் கேட்டால் கொடுப்பார்கள், வாங்கிப் பயமின்றிக் குடிக்கலாம். கோடைக்காலத்தில் தண்ணீர் பந்தல் வைத்து தண்ணீரையும் நீர்;மோரையும் தாகத்தில் வருகின்ற வழிப்போக்கர்களுக்கு வாரி வழங்குவார்கள்.

               எண்பது ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் ஒரு திருமண வீட்டிற்குப் போயிருக்கிறார். விருந்து சாப்பிட்ட பிறகு, வெளியில் கைகழுவும் இடத்தில் ஒரு பானையும், ஒரு குவளையும் வைத்து ஒரு சிறுவனையும் நிறுத்தியிருந்தார்களாம். அந்தச் சிறுவன் தந்தை பெரியார் கைகழுவ நீர் ஊற்றும்போது, ‘தம்பி போதும்! போதும்!’ என்று பெரியார் சொல்லச் சொல்ல, அந்தச் சிறுவன் நீரை ஊற்றிக்கொண்டே இருக்க, அவன் முதுகில் செல்லமாகத் தட்டி, ‘டேய்! இந்தத் தண்ணிய ஒருகாலத்துல காசு குடுத்து வாங்கப்போறீங்க பாரு!’ என்று சொன்னாராம். அப்போது அந்த வார்த்தை கேலியாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போதுதான் அந்தச் சமூகவிஞ்ஞானியின் தொலைநோக்குப் பார்வை நமக்குப் புரிகிறது.

               மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமானால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என்று இன்றைய பொருளாதார மேதைகளும், அறிவியல் அறிஞர்களும் அச்சத்தோடு கூறுகிறார்கள்.

               நிலத்தடி நீரையும், ஆறுகளில் ஓடிவருகிற நீரையும் நாம் பாதுகாத்து அடுத்தத் தலைமுறைக்குத் தந்துவிட்டுப் போகவேண்டும். இது பூமியின் சொத்து. நீரின் அருமையை வரும் தலைமுறையினருக்கு நினைவுபடுத்தத்தான் உலகத் தண்ணீர் தினம் கொண்டாடுகிறோம். தண்ணீர் தினம் பற்றிய விழிப்புணர்வு பற்றிய மேலும் சில செய்திளைக் காண்போம்…

தண்ணீர் என்பது மனிதன் வாழ்வதற்கான மூலாதாரமாகும். உணவின்றி மனிதனால் சில நாட்கள் வாழ முடியும். ஆனால் நீரின்றி மூன்று தினங்கள் கூட வாழமுடியாது. மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்து வகையான உயிரினங்களுக்கும் நீரானது மிகவும் அவசியமான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஐக்கிய நாடுகள் சபையின் நியமிக்கப்பட்ட நாளான உலக நீர் நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நீர்வளத்தின் ஒட்டுமொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும்.

பாதுகாப்பான நீர் கிடைக்காமல் வாழும் 2.2பில்லியன் மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த உலகத் தண்ணீர் தினத்துக்காக ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையக் கருவைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

               உலகத் தண்ணீர் தினத்தில் நீரைப் பயன்படுத்தும் உழவர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஒவ்வொரு குடிமக்களும் தண்ணீர் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசுவது, தெரிந்து கொள்வது, மாற்றுத் திட்டங்களை வடிவமைப்பது எனச் செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

               காலநிலை மாற்றம் என்னும் நிகழ்வினால் பருவமழைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை பத்து நாட்களுக்குள் கொட்டித் தீர்த்துவிடுகிறது. அதனால் மழைநீர் வெள்ளமாக மாறி வெளியேறிவிடுகிறது. அதனால் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை. அதைத் தொடர்ந்து கோடைக்காலங்களில் வறட்சி ஏற்படுகிறது. இதனால் மக்களிடையே தண்ணீரின் அவசியத்தையும், அதை சேமிக்கும் முறையையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

               உலகஅளவில் அனைத்து அரசுகளுக்கும் உள்ள தலையாய கடமை மக்களுக்கான குடிநீர், உழவிற்கான நீர், தொழிற்சாலைகளுக்கான நீர் மற்றும் சூழல் தன்மையைக் காப்பாற்றுவதற்கான நீர் (வனவிலங்குள், உயிரினங்கள், காடுகள் பாதுகாப்பு) என அனைத்துப் பிரிவினருக்கும் தேவையான நீரை வழங்குவதே ஆகும்.

               நீரின்றி யாரும் இந்த உலகில் வாழ இயலாது என்பது நன்கு அறிந்ததே. பூமியில் 30விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாகச் சுத்தமான குடிநீரும் இடம்பெற்றுள்ளது. அந்த அளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது. பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

               உயிருள்ள அனைத்து ஜீவன்களின் இயக்கத்துக்கும் ஆதாரம் நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலகமக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிஷமே நீர். நீர்வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும்.

               நீரே மனித வாழ்வின் அடித்தளம் என்பதால் நீரைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

               உலகில் யார்தான் தெய்வம்?     நீர்தான் தெய்வம்!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.