நினைவாற்றலே ஆற்றல்

நம்முடைய கல்விமுறை அனைத்தும் மனப்பாடத்தை அடிப்படையாகக்
கொண்டது. தான் படித்த பாடத்தை மனப்பாடம் செய்து, தன் நினைவாற்றல்
மூலம், அதனைத் திறமையாக வெளிப்படுத்துகின்ற மாணவனே முதல்
மதிப்பெண் பெறும் மாணவனாக மதிக்கப் பெறுகிறான். (தற்காலத்தில் மனனக்
கல்வி தேவையில்லை என்கிறார்கள், ஆனாலும் அது பயனுடையதே)
இந்தக் காலத்தில் பாடங்களை மனப்பாடம் செய்வது அவசியமா? என்று
ஒரு கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. மனனம் செய்வதும், செய்த
விஷயத்தைப் பயன்படுத்த முயல்வதும் மூளைக்குத் தரும் ஒருவகைப் பயிற்சி
என்பது அறிவியலாளர் கருத்து.
வினாடி வினாப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர்கள்
நினைவாற்றலை அதிகம் பெற்றிருந்தாலும், அதனை விரைந்து
வெளிப்படுத்தும்போதுதான் வெற்றி பெறுகிறார்கள். இதை ஒளவையார் தனது
பாடலில் சொல்லுகிறபோது,
“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்”…
என்கிறார்.
இதேபோல கணக்கிடும் கருவிகளான கால்குலேட்டர், கணினி
முதலியவை வருவதற்கு முன் மனக்கணக்குமுறைதான், நம்நாட்டில்
வெகுகாலம் பழக்கத்தில் இருந்தது; இன்றும் இருந்து வருகிறது.
கிராமங்களில் கல்வியறிவில்லாத வயதான பெண்கள் மனக்கணக்கின்
மூலம் பால்கணக்கு, விவசாயக் கணக்கு, வீட்டிற்கான வரவு செலவுக் கணக்கு,
வாசலில் கோலம் போடுவதற்கு என இவ்வளவையும் தங்கள் மனதிற்குள்ளேயே
தங்கள் நினைவாற்றல் மூலம் அவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள்.
நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளத் தற்போது பல பயிற்சிகள்
தருகிறார்கள். அறிவியல் வழியாகச் சொல்வதாக இருந்தால், ஞாபகசக்தியைக்
கூட்ட மாத்திரைகள் கூட வந்து விட்டன.
என் நண்பர் ஒருவர் இந்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு அந்த
மாத்திரை டப்பாவை எங்கே வைத்தோம் என்று தேடிக்கொண்டிருப்பதாகக்
கேள்வி.