நாடக உலகின் ஆசான்…

               120ஆண்டுகளுக்கு முன்னால் இது நிகழ்ந்தது. தற்போதைய விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்கின்ற ஊரில் ஒரு நாடகம் இரவு பத்து மணிக்கு தொடங்க இருக்கிறது. நாடகம் தொடங்குவதற்கான அதிர்வேட்டு போட்டவுடன் ஊர் மக்கள் அனைவரும் தரையில் வந்து அமர்ந்து நாடகத்தை இரசிக்கத் தொடங்கினார்கள். சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமதர்மன் உள்ளே நுழைந்தபோது அவருடைய உருவத்தையும், ஆர்ப்பாட்டமான நடிப்பையும் அதிர்ந்த இசையையும் கேட்டுக் குழந்தைகள் நடுங்கினர். ஒரு கர்ப்பிணிப்பெண் பாதிப்படைந்தாள்.

இவற்றையெல்லாம் மறுநாள் கேள்விப்பட்ட எமதர்ம வேடமிட்ட அந்த நடிகர் அடுத்த ஊர்களில் நாடகம் நடக்கும்போது தெருவில் தமுக்கு அடிக்கச் சொன்னாராம். ‘நாடகத்தில் எமதர்மன் வருகின்ற காட்சி வருகிறபோது குழந்தைகள் கர்ப்பிணிப்பெண்கள் மனஅச்சம் உள்ளவர்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்’ என்று. அந்த வேடத்தில் நடித்தவர்தான் நாடக உலகின் ஆசான் என்றும் தெருக்கூத்துக் கலையை நாடகக் கலையாக மாற்றிய நாடக உலகின் தந்தை என்றும் அழைக்கப்படுகின்ற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

               இவர் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் சிறப்போடு விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ்சுவாமிகள் காலத்தில்தான்.

               தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி என்ற ஊரில் 1867ஆம் வருடம் செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகராகத் தன் வாழ்க்கையைத் துவக்கினார். இவர் நாடக்கலையின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

அக்காலத்தில் நாடகத்தில் நடிக்க, இசையும், பாட்டுத்திறமையும் மிக முக்கியம். அதற்காகப் புதுக்கோட்டை மான் பூண்டியா பிள்ளையிடம் இசைப்பயிற்சி பெற்றார். இலக்கண இலக்கியங்களைத் தன் தந்தையிடமே கற்றுக்கொண்ட பிறகுதான் முழுநேர நடிப்பில் ஈடுபட்டார். சங்கஇலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் என எல்லாவற்றையும் கற்றார். இதனால் வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களான வண்ணம், சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனைப் பெற்றார். இதனாலேயே இவரது நாடகங்கள் நல்ல மொழி வளங்களோடும், இசையோடும் இருந்தன.

இவருடைய நாடகத்தில் பெண்கள் யாரும் நடிக்கவில்லை. சிறுவர்களும், பெண்வேடமிட்டு ஆண்களும் நடிகைகளாக மேடையில் தோன்றினர். இவர் தனது நாடகக் கம்பெனியின் இளம் நடிகரான டி.கே.சண்முகம் அவர்களுக்காக ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம்தான் அபிமன்யு சுந்தரி.

இந்நாடகத்தைச் சாதாரண காடாவிளக்கின் வெளிச்சத்தில் மை தொட்டு எழுதும் பேனாவை வைத்துக்கொண்டு அடித்தல் திருத்தல் ஏதும் இல்லாமல் பாடல்கள் வசனங்கள் என்று அந்த நாடகத்தை எழுதி முடித்த பெருமை சங்கரதாஸ் சுவாமிகளையே சாரும். இவருக்குப் பெரும் புகழைத் தந்த நாடகங்கள்; வள்ளி திருமணம், சதி சுலோசனா, சத்தியவான் சாவித்தரி போன்றவை ஆகும்.

               கொடுமுடிக் கோகிலம் என்று அழைக்கப்படுகின்ற இசை அரசி கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பாடிப் புகழ்பெற்ற ஞானப் பழத்தைப் பிழிந்து’ எனும் பாடலை இயற்றிய பெருமையும் சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களையே சாரும். 

எமதர்மன், சனீஸ்வரன், இராவணன், இரணியன், கடோத்கஜன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்த சங்கரதாஸ் சுவாமிகள், தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி இரசிகர்களைக் கட்டிப்போட்டார். பார்ப்பவர்களை அசத்தும் திறமைபெற்ற இவர், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு விட்டு நாடகங்களை எழுதி இயக்குவதோடு தன் பங்களிப்பைச் சுருக்கிக் கொண்டார்.

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையை உருவாக்கிய பெருமை உடையவர் இவரே. அதன் ஆசிரியராகத் தனது இறுதி நாள் வரை இருந்தார்.

சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ‘வள்ளி திருமணம், பவளக்கொடி சரித்திரம், வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, இராம இராவண யுத்தம், சித்திராங்கி விலாசம்’ போன்றவை அவருக்குப் புகழ் தந்த நாடகங்கள். இதில் பெரும்பாலனவை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை தமுக்கம் திடலின் வாயிலில் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு சிலை வடிக்கப்பட்டுள்ளது.

சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய நாடகச் செய்யுள்களைத் திரட்டி அச்சேற்றும் முயற்சிகள் நடைபெற்றன. அவ்வகையில் அபிமன்யு சுந்தரி, சுலோசனா சதி ஆகிய இரு நாடகச் செய்யுள்களும் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் ஆதரவோடு 1959இல்  வெளிவந்தன.

தி.க.சண்முகத்தின் தனிமுயற்சியால் சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சுலோசனாசதி, சதி அனுசூயா, கோவலன் ஆகிய நாடகச் செய்யுள்கள் சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு என்னும் பெயரில் நூல்வடிவம் பெற்றுள்ளன.

இவை தவிர, சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம் என்னும் நூலை சென்னை காவ்யா வெளியீடு வெளியிட்டு இருக்கிறது.

               இவருடைய இறுதிக்காலம் பாண்டிச்சேரியில் கழிந்தது. திருமணம் செய்து கொள்ளாமல் கலைக்காகவே வாழ்ந்த பெருமை இவருக்கு உண்டு. இன்றைக்கும் பாண்டிச்சேரி சென்றால் இவரது கல்லறையைக் காணலாம்.

நாடகங்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அங்கே சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்ந்து கொண்டிருப்பார்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.