நாங்கள் போட்ட நாடகங்கள்…

‘உன் நடிப்பெல்லாம் எங்கிட்ட வேணாம்’
‘அவன் பெரிய நடிகன்யா’
‘இந்த நடிப்புத்தானே வேணாங்கிறது’
‘எங்கிட்ட அப்பிடி நடிச்சு ஏமாத்திட்டாண்டா’
என்று பலரும் பலமுறை பலரைப் பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச் சொற்கள் உண்மையான நடிகரைப் பற்றியோ, அவரது நடிப்பைப் பற்றியோ சொல்லப்படுவன அல்ல. வாழ்க்கையில் நடிக்கும் மனிதர்களைப் பற்றியே…
நான் எங்க;ரில் எங்கள் வயதில் நாடகம் போட முயற்சித்ததையும், அதில் பட்ட சிரமங்களையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
எங்கள் ஊரின் மறுகரையில் இருந்த அக்கிரகாரத்துக் கிருஷ்ணன் கோவிலில் திருவிழா. அந்தத் தெரு நண்பர்கள் வந்தார்கள்.
‘எப்படியும் ஒரு நாடகம் போட வேண்டும்’
‘நடிகர்கள் எல்லாம் தயார்’
‘கதைதான் வேண்டும், வசனம் எழுத வேண்டும்’
‘ஏன் நீயே கதை வசனம் எழுதினால் என்ன?’ என்று உரிமையோடு கேட்டான் ஸ்ரீதர்.
‘எனக்கு மர்மக் கதைதானே வரும்’ என்றேன் (சத்தியமாய் ஒரு கதையும் எழுதியதில்லை. முதன்முதலில் ஒரு மர்மக்கதை எழுதி ஒரு முகமூடி மனிதனை வில்லனாக்கிக் கடைசியில் அவன் முகமூடியைக் கிழித்தபோது எல்லோரும் அசந்து போனார்கள் அந்த முகமூடி… என்று எழுதி அவன் யார் என்று எனக்கே தெரியாமல் அந்தக் கதையை முடித்துவிட்டேன். இதுதான் நான் மர்மக்கதை எழுதிய லட்சணம்).
‘ரிகர்சல் எங்க வீட்ல வச்சுக்கலாம்’ என்றான் கணேஷ். எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்தோம். நாடகம் போட்டே தீருவது என்று. நாடகம் தயாராயிற்று. ஒரு பழைய நாடகக் கதையை ‘உல்டா’ செய்து, நாடகம் தயார்.
ரிகர்சல் பார்க்க எல்லோரும் கணேஷ் வீட்டிற்குப் போனோம். வாசலை அடைந்தோம்.
‘எந்த நாய் கூடயும் சேரக்கூடாது. எவனாவது இங்க வந்தாத் தெரியும் இந்தக் கிருஷ்ணசாமி யார்ன்னு?’
இதைத் தொடர்ந்து யாருக்கோ அடி விழும் ஓசையும் குய்யோ,முறையோ என்ற கத்தலும் கேட்டது. நாங்கள் அப்படியே பின் வாங்கினோம். கடைசியில் சுப்பிரமணி வீட்டு மொட்டை மாடியில் ரிகர்சல் தொடங்கியது. ‘திருடாத திருடர்கள்’ நாடகப் பெயர். ‘நீ தான் கதாநாயகனுடைய அப்பா’ என்றேன் ஸ்ரீதரைப் பார்த்து.
‘என்ன… கிழவன் வேஷமா? என் ‘இமேஜ்’ என்ன ஆகும். முடியாது’ என்றான். பிறகு பலருடைய வேண்டுதலால் (மிரட்டலால்) அவன் அப்பாவானான்.
அம்மா லட்சுமியாக – யார் வருவது? என்ற கேள்வி எழுந்தது.
‘பேசாம அந்தக் கோமளத்தைப் போடலாம்’ என்றான் வரதன்.
‘இதப்பாரு…. பொம்மனாட்டிக யாரும் வேணாம் பின்னால ரகளை வரும்’ – என்றான் அப்பு.
‘சரி, ராஜு தான் அம்மா லட்சுமி’ என்றபோது அவனும் ஏத்துக்கொண்டான். ஆனால் அவன் பெண் குரலில் பேசியபோது சிங்கம் கர்ஜிப்பதுபோல இருந்தது. அதை வசனத்தில் சமாளித்தோம்.
பையன்: அம்மா உன் குரல் ஏன் இப்படி ஆம்பளை குரல் மாதிரி இருக்கு?
லட்சுமி: அதையேன் கேக்ற எம்.எஸ்.சுப்புலெட்சுமி மாதிரி நல்லாப் பாடுவேன், ஆடுவேன், ஒருநாள் தொண்டையில ‘டான்சில்’ ஆப்ரேசன் பண்ற டாக்டர் வரலை கம்பவுண்டர் பண்ணினான். அதுல இருந்து இப்படிப் போச்சு.
இதை அவன் நாடகத்தில் நீட்டி முழக்கிப் பேசியபோது சிலர் சோகமாகச் சிரித்தார்கள். இரண்டுபேர் விடாமல் கை தட்டினார்கள். அவன் அப்பாவும், அம்மாவும் தான் அது.
நாடகத்திற்கு மேக்கப் வேண்டுமா வேண்டாமா? என்று சபை கூடி யோசித்தோம். கடைசியில் துரைப்பாண்டி தனக்குத் தெரிந்த ‘மேக்கப் மேனை’க் கூட்டி வருவதாகக் கூறினான்.
நாடக நாள் நெருங்க நெருங்க எல்லோருக்கும் எல்லார் வசனமும் மறந்து போனது. நாடகத்தன்று…. நாங்களே பெஞ்சு தூக்கினோம்… மேடை போட்டோம், லைட் இழுத்தோம், திரைகட்டினோம். உள்ளுர் ‘ஹெட் மாஸ்டர்’ தலைமை தாங்கிப் பேசினார்… பேசினார்… பேசிக்கொண்டே இருந்தார்.
அடுத்து எங்களின் நாடக எதிரியான சாம்பு சமஸ்கிருதம் பற்றிப் பேசத் தொடங்கினார். நாங்கள் மேக்கப் போடப் போனோம். எப்படியும் ரெண்டு மணிநேரம் ஆகும்.
‘மேக்கப் மேனைப்’ பார்த்து அரண்டு போனோம். அவன் கொண்டு வந்த பெட்டி மிகப்பெரிய சவரப்பெட்டி போல இருந்தது.
‘ஸ்சாமி ஒவ்வொருத்தரா வாங்க’ வெட்டப்போகிற கசாப்புக் கடைக்காரன் போலக் கூப்பிட்டான். ஒரு இரும்புச் சட்டியில் வெள்ளையாய் மாவைக் கரைத்து வரிசையாக எல்லோர் முகத்திலும் பூசினான். யார் எந்த நடிகர் என்று யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
எங்களைக் காட்டிலும் ‘அம்மா’ வேடம் போட்ட ராஜு அவன் கதி… அவனுக்குப் பெண் வேடத்திற்காகச் சவுரி முடிக்குப் பதிலாகச் சடாமுடி வைக்கப்பட்டு ‘ரண பத்திரகாளி’ போல இருந்தான்.
லைட் அணைத்து விசில் அடிக்க நாங்கள் மேடை ஏறினோம்.
நாடகத்தின் நடுவில் சுப்பிரமணி வந்து கத்தியோடு மிரட்ட வேண்டும், அவனைக் காணவில்லை. நாங்களும் நேரத்தைக் கடத்த சொந்த வசனம் பேசிப் பார்த்தும் அவனைக் காணோம். ஒரு வழியாக அவனைத் தேடி நாங்கள் கீழே இறங்க (உள்பக்கம் தான்) அவன் கத்தியைத் தேடி வீடு வீடாக அலைந்து கடைசியில் ஒரு அரிவாள்மனையோடு முன் பக்கம் மேடை ஏறி எங்களைத் தேட… நாடக முடிவு ஒன்றும் சுபமாக இல்லை.
இருந்தாலும் எங்கள் முதல் நாடகம். அந்த மேக்கப்பை கலைக்க மூன்று நாள் முயன்றும் நடக்கவில்லை.
ஒருவாரம் கழித்து ஒருவர் என்னை நடுத்தெருவில் சந்தித்துக் கேட்டார். ‘நீ அந்த நாடகத்தில் பபூனா வந்தியாமே?’ என்று ஆர்வமாகக் கேட்டார்.
நான் எரிச்சலோடு அவரைத் திட்டப் போனேன். அவர் அதற்குள் எதிரில் வந்தவரிடம்,
‘சார்’ இந்தப் பையன் தான் அன்னிக்கு நாடகத்திலே பபூன்… அவர் ‘ஹெக்கே ஹெக்கே’ என்று சிரிக்க… நான் சில நாட்களாக நாடகம் எழுதவில்லை.
அடுத்தமுறை ‘பாதையோரப் பட்டதாரிகள்’ என்று ஒரு நாடகம் போட்டோம். அதில் அரை லூசாக ஒரு பையன் சிறப்பாக நடிக்க, எல்லோரும் அவன் இயல்பாகவே அப்படித்தான் என்று பாராட்ட அடுத்து வந்த நாடகங்களில் ‘அரை லூசா’ கூப்பிடு அவனை என்ற அளவிற்கு வந்து விட்டது.
‘ஓடாதே நில்’ என்று ஒரு நாடகம். அதில் எனக்கு சோகமான ஒரு பாட்டு. பின்னணியில் பாட்டு ஒலிக்க நான் சோகமாக மேடையில் நடந்தபடி இருக்கவேண்டும். பின்னணி பாடியவருக்கு வெகுநாட்களாகச் ‘சான்ஸ்’ இல்லாததால் அவர் அந்தப் பாட்டை ராகம், தாளம், பல்லவி, கமகம் என்று கால்மணி நேரம் பாட நான் மேடையில் அங்கும் இங்குமாக ஒரு மைல் நடந்திருப்பேன். பாட்டு முடியவில்லை. கையில் சூட்கேஸ் வேறு. அந்தக் காட்சிக்கு ஒருவன் சொன்ன ‘கமண்ட்’ … ‘பேசாம நீ அப்ப பட்டாணி தின்னுக்கிட்டே நடந்திருக்கலாம்.
அந்த நாடகத்தில் கடைசிக் காட்சியில் கதாநாயகன் தன் இறந்துபோன தாயாரின் படத்தை எல்லோரிடமும் காட்ட எல்லோரும் அதை பார்த்து ‘ஹோ’ என்று கதறி அழவேண்டும்.
அதற்கு முதல் காட்சி வரை அப்படி ஒரு போட்டோவை யாரும் பார்க்கவில்லை. அதைப்பற்றி மறந்தும் போனோம். திடீரென்று கதாநாயகன் வந்து போட்டோ கேட்க நாங்கள் எல்லோரும் குழம்ப என்ன செய்வதென்று ஒருவருக்கும் புரியவில்லை. வெளியே பயங்கர விசில் சத்தம்…. பயங்கரக் கூட்டம்.
அதற்குள் ஒருவன் வெளியே ஓடி அருகில் இருந்த போட்டோ ஸ்டுடியோவிற்குள் புகுந்து கெஞ்சிக் கூத்தாடி ஒரு பெரிய போட்டோவைத் தூக்கிவர அதற்குள் நாங்கள் மேடை ஏற, கதாநாயகன் உணர்ச்சியோடு பேசிக்கொண்டே ‘இதோ என் தாய்…. என் தாய்’ என்று கதறினான்.
நாங்களும் படத்தைப் பார்த்து கதறத் தயாரானோம். ஆனால் அந்தப் படம்…அது கொத்தனார்கள் சங்க குரூப் படம். அதில் 21 பேர் மீசையோடும் முண்டாசோடும் காட்சியளித்தார்கள். அதைக்கண்ட ஒருவன் ஹோ என்று சிரிக்க… எல்லோரும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாய்த் திரும்பி அழுக, அந்தக்காட்சி மிக உணர்ச்சிப்பூர்வமாக அமைய வேண்டியது கோமாளித்தனமாக மாறி ஒரு வழியாக வாயைப் பொத்திக்கொண்டு உள்ளே ஓடிவந்தோம்.
இன்றைக்கும் ஏதாவது குரூப் போட்டோவைப் பார்த்தால் எனக்கு அந்த நினைவு கட்டாயம் வரும்.
பிறகு கல்லூரியில் முத்தமிழ் விழா வந்தது. அப்போது பாரதி நூற்றாண்டு விழா. எனவே ‘பாஞ்சாலி சபதம்’ நாடகம் போட முடிவு செய்தோம்.
நான் தான் சகுனி. எல்லோரும் அதைப் பாராட்டினார்கள்.
நண்பர் ஆவுடையப்பன்… துரியோதனன்! தூய தமிழ் வசனம்.
இதிலும் பெண்கள் கிடையாது. பையனே பாஞ்சாலி.
சரித்திர நாடகம். பயங்கரமான மேக்கப். 2கிலோ 3கிலோ கிரீடங்கள்.
எனக்கு முகமெல்லாம் தாடி மீசை. வாய் எங்கே என்றே எனக்குத் தெரியவில்லை. நரைத்த மீசை மூக்குக்குள் போய் எப்போதும் தும்மல் வரலாம் என்ற நிலை.
மாலை ஆறு மணிக்கு நாடகம். பிற்பகல் 2மணிக்கே மேக்கப் போட்டு விட்டார்கள். பாஞ்சாலிப் பையன், ‘தம்’ அடித்துக் கொண்டு சேடிப் பெண்களோடு கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தான். மாணவர்கள் எல்லோரும் அங்கே போய் விட்டார்கள்.
பாஞ்சாலிப் பையனை ஒருவன் நடுகிரவுண்டில் துயிலுரிய முனைந்தான். துச்சாதனனும், கிருஷ்ணனும் சைக்கிளில் ‘டபுள்ஸ்’ ஏறி எங்கோ போய்க்கொண்டிருந்தார்கள்.
அதில் சகாதேவனாக வந்த மாணவர் காலையில் இருந்து ‘டென்சனாக’ இருந்தார் வசனம் மறந்து போய்விடுமோ என்று. அவர் தனது சுற்றத்தார்களையும், நண்பர்களையும், குடும்பத்தாரையும் வரவழைத்திருந்தார். பயங்கர மேக்கப் வேறு. ரெண்டு போட்டோ கிராபர்களும் வந்திருந்தனர். அவர் நாடகத்தில் தோன்றிப் பேசிய வசனம் இதுதான்…
‘வணக்கம் அண்ணா… அப்படியே செய்கிறேன்’ இதற்குத் தான் அத்தனை ஆர்ப்பாட்டம்.
நாடகம் தொடங்கிற்று. அதில்…
சிறிய இடைவேளை….
– தொடரும்…