நலம் தரும் நகைச்சுவை

வளமான வாழ்வுக்குப் பொருள் தேவை. அதுபோல, நலமான வாழ்வுக்கு நகைச்சுவை உணர்வு மிகமிகத் தேவை.
“சிரிப்பு – அதன் சிறப்பைச்
சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு”
என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்தக்காலத் திரைப்படமான ‘ராஜாராணி’யில் கவிஞர் மருதகாசியின் பாடலில் எளிமையாகப் பாடியிருக்கிறார்.
ஒன்பது சுவைகளில் முதல் சுவை நகைச்சுவை என்பது 2000ஆண்டுகளுக்கு முன்னே நம் தமிழறிஞர்கள் உலகுக்குணர்த்திய உண்மை. வள்ளுவப் பெருந்தகைகூட, சிரிப்பவர்களுக்குத்தான் உலகம், ஒளிமயமாக இருக்கிறது. அப்படி இல்லாதவர்களுக்கு அது பகலாக இருந்தாலும் இருட்டுத்தான் என்பதை,
‘நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்”
என அழகாக எடுத்துரைக்கிறார். நகைச்சுவையிலும் பிறர் மனம் வருந்துமாறோ, சபையில் உள்ளவர் கூசித் தலைகுனியுமாறோ, அமங்கலமானவற்றைப் பேசி நகைக்க வைப்பதாலோ பெருமையில்லை. அது நகைச்சுவையும் ஆகாது.
கள்ளம் கபடமில்லாத சிரிப்பைக் ‘குழந்தைச் சிரிப்பு’ என்கிறோம். காரணம், குழந்தைகளுக்குச் சூது, வாது தெரியாது. எல்லா மனிதர்களும் குழந்தைகளாய் இருக்கிறபோது நன்றாகச் சிரித்து மகிழ்ந்தவர்கள்தான். நாளாக நாளாக வாழ்க்கைச் சூழலால் கரும்பாறையாக இறுகிப்போகிறார்கள். நல்ல புத்தகங்களைப் படிப்பது, மகிழ்ச்சியாகப் பயணம் செய்வது, குழந்தைகளோடு குழந்தைகளாகப் பேசுவது, நண்பர்களிடையே சத்தமிட்டுச் சிரித்து மனம் நோகாமல் கேலி செய்வது, அன்பான மனைவியிடத்தில் இனிமையாகப் பேசுவது என்பவற்றைப் புரிந்துகொண்டால் நகைச்சுவை, எங்கும் பூக்களாய் மலர்ந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
கணவன் – மனைவி இரண்டுபேரும் சோதிடர் ஒருவரைப் பார்க்கச் சென்றார்கள். அச்சோதிடர் இரண்டுபேரின் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு கணவனிடத்தில் சொன்னாராம். ‘இவங்கதான் உங்களுக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் மனைவியாய் வருவாங்க!’ உடனே கணவன் பதற்றத்தோடு கேட்டானாம், ‘இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?’ என்று.
உலகப்புகழ்பெற்ற பெரிய மனிதர்களுடைய வாழ்க்கையில், சில அரிய சம்பவங்கள் சிறந்த நகைச்சுவைகளாக அமையும்.
ரஷ்யநாட்டின் அதிபராக இருந்த குருச்சேவ் ஒருமுறை தம்முடைய காரில் ரஷ்யாவின் பெரிய கடைவீதி வழியாகச் சென்றாராம். அங்கே புகைப்படங்கள் விற்கும் கடை ஒன்றைக் கண்டு அப்படியே ஆச்சரியத்தில் காரை நிறுத்தி விட்டாராம். காரணம், அந்தக் கடையில் இருந்த அத்தனை படங்களும் அவருடைய படமாகவே இருந்தன. காரிலிருந்து இறங்கிய குருச்சேவ், அந்தக் கடைக்காரரைப் பார்த்து, ‘வணக்கம் தோழரே! என் மீது உங்களுக்கு அன்பிருக்கலாம். அதற்காகக் கடை முழுவதும் என் படத்தையா வைப்பார்கள். லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்கள் படத்தையும் வாங்கி விற்கலாமே’ என்றவுடன், அந்தக் கடைக்காரர், ‘ஐயா! அவர்கள் படமெல்லாம் வந்தவுடன் விற்றுப்போகும். இது மட்டும்தான் அப்படியே இருக்கும்,’ என்றானாம் எதார்த்தமாக.
அவசரமாகப் பேசுகிற சிலர் அவர்களை அறியாமல் நகைச்சுவையாய்ப் பேசுவது வழக்கம்,
ஒரு நண்பர் புதுக்காலண்டரைப் புரட்டிப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு சொன்னாராம். ‘இந்த வருஷமும் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-லதான் வருது’ என்று.
‘என் பையன் ‘கோமா’வில் இருக்கிறான்’ என்றாராம்! ஒரு பெரியவர் வருத்தத்தோடு. ‘அங்கென்ன பண்றான்’ என்று ஆர்வமாய்க் கேட்டாராம் விவரம் தெரியாத மற்றவர்.
சில சம்பவங்கள் கூட மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஒரு தொடர்வண்டி, ரயில் நிலையத்தில் நின்றது. அங்கொரு டிக்கெட் பரிசோதகர் வரவே, ரயில் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த ரெண்டுபேரில் ஒருவன் இறங்கி கிழக்குப் பக்கமாகத் தலைதெறிக்க ஓடியிருக்கிறான். அவன் ஓடுவதைப் பார்த்த டிக்கெட் பரிசோதகர் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவனை விரட்டி ஓடியிருக்கிறார். ஒரு மைல் ஓடி ஊருக்கு வெளியே அவனைப் பிடித்துவிட்டார். ‘உன் டிக்கெட் எங்கே?’ என்றார் கோபமாக. ‘இந்தா இருக்கு’ என்று அவன் எடுத்துக் காட்டினான். ‘பிறகு ஏன் ஓடினாய்?’ என்றார் அவர் எரிச்சலுடன். அதற்கு அவன் அது என் இஷ்டம் நான் எப்படி வேணாலும் ஓடுவேன். என் கூட வந்தவன் டிக்கெட் எடுக்கல. அவன் மேற்க ஓடிட்டான்’ என்றானாம்.
நல்ல நகைச்சுவை மனதுக்கு மருந்தாக, நட்புக்கு வழியாக, உறவுக்கு உறவாகக் கைகொடுக்கும்.
தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் 100வயதுக்கும் மேலான மூதாட்டி ஒருவர், பேட்டி கொடுக்கும்போது ‘தன் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் காரணம் தன் நகைச்சுவை உணர்வுதான்’ எனக் கூறினார்.
ஒன்று புரிகிறது. மரணத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாம். நகைச்சுவை ஆயுளைக் கூட்டும். ஒளவைக்குக் கிடைத்த நெல்லிக்கனி போன்றது. துன்பத்தைப் பிறரிடத்திலே சொல்லும்போது, அது பாதியாகக் குறையும். மகிழ்ச்சியைப் பிறரிடத்தில் சொல்லும்போது அது இரண்டு பங்காகக் கூடும். எனவே மகிழ்வோம், மகிழ வைப்போம்.