நட்புக்காலம்

               நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது ஆனால் அப்படிப்பட்ட நண்பன் கிடைப்பது அரிது!

                                                                                            மதுரை ஆட்டோவில் பார்த்த வாசகம்

               ‘உன் மார்க் அவனைவிட அதிகம் இருக்க வேண்டும்’ – அப்பா.

               ‘என் பேரனுக்கு எவன் தயவும் வேணாம், அவனே முன்னுக்கு வருவான். என்னைப் போல’ – தாத்தா

               ‘நீ எவன் கூடவும் சேரக்கூடாது. உன்னை எவனும் பார்க்கவும் வரக்கூடாது’ – அம்மா

               இப்படிப்பட்ட வார்த்தைகள் எல்லாக் குடும்பங்களிலும் கேட்டபடி இருக்கின்றன.

               தங்கள் மகன் தீயவர்களுடன் சேர்ந்து கெட்டுவிடக்கூடாது என்பது நல்லெண்ணம்தான். ஆனால், நண்பன் இல்லாத ஒரு மனிதனுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா? முடியாது. ஏனென்றால், நட்பின் பெருமையும் நண்பர்களின் அருமையும் கிடைக்க முடியாத ஒன்று.

               மனித உறவுகளில் தாய் என்னும் உறவே உன்னதமானது. அதையடுத்து நட்புமிக்கது – மனைவி உறவு. அதனால்தான் நம் முன்னோர் ‘தாய்க்குப் பின் தாரம்’ எனப் பழமொழி வைத்தார்கள்.

               ‘தாய் – தாரமாகிய, வந்த உறவுகளில்கூட உடைமையும், உரிமையும் இணைந்தே காணப்படும். ஆனால் நல்ல நண்பர்களின் நட்புக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, தற்செயலாகச் சந்தித்து, நண்பர்களாக மாறுவார்கள். தங்களுடைய மரணகாலம் வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகி வருவதைப் பார்க்கிறோம்.

               நட்பு என்னும் உறவில்தான் எதிர்பார்ப்புகள் இருக்காது. ஏற்றத்தாழ்வுகளும் இருக்காது. ஒருவரையொருவர் பெயர் சொல்லிக் கூப்பிடும் உரிமையும் ஒருவருக்கொருவர் கேலிசெய்து சந்தோ~ப்படும் பெருமையும் நட்புக்குத்தான் உண்டு.

               இன்றைக்கும் சிலர் தமது இளமைக்கால நண்பர்களைப் பார்த்தவுடன் அந்த நாட்களுக்கே திரும்பிப் போய்விடுவார்கள். அந்த மகிழ்ச்சியைத் தருவதுதான் நட்பின் சிறப்பு.

               கண்ணபிரானும், அர்ச்சுனனும் மாமன் – மைத்துனன் உறவுக்குள் இருந்தாலும், நண்பர்களாகவே பழகியதைப் படித்திருக்கிறோம்.

               சங்ககாலத்தில் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருந்தாலும், தங்கள் மரணகாலத்தில் ஒருவருக்கொருவர் கொண்ட நட்புறவை இலக்கியங்கள் சொல்கின்றன.

               ‘தம்பிரான் தோழன்’ என்று அழைக்கப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாருக்காக, முக்கண்ணனாகிய சிவபெருமான் காதலுக்குத் தூது சென்றதைப் பெரிய புராணத்தில் படித்து ஆச்சரியப்படுகிறோம்.

               மகாகவி பாரதியார், கண்ணனை நண்பனாய், மந்திரியாய், சேவகனாய், ஆசிரியனாய் நினைத்துப் பார்க்கிறேன் என்கிறார். இருந்தாலும், நண்பனாய் என்ற சொல்லுக்கு அவர் முதலிடம் கொடுப்பதைக் காண்கிறோம்.

               ஜெர்மனியில் ஒரு செல்வக்குடும்பத்தில் பிறந்து, வியாபார நிமித்தமாக மான்செஸ்டர் நகருக்கு வந்தார். ‘பிரடெரிக் ஏங்கல்ஸ்’ என்ற சிந்தனையாளர். அவர், புதுமைச் சிந்தனையை உலகிற்குத் தந்த காரல்மார்க்ஸை சந்தித்து நட்பு கொண்டார். அதன்பின் வாழ்ந்த நாளெல்லாம் தன் நண்பருக்காக வாழ்ந்த வரலாறு உலகறிந்தது.

               இன்று நம் நெருங்கிய நண்பர் யார்? என்று கேட்டால் சொல்லத் தயங்குகிறார்கள் அல்லது அவர்களுக்கே தெரியவில்லை. ‘உன் நண்பன் யாரென்று சொல்! நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.

               மொழி, இனம், நிறம், கடந்து நம்மை வாழச் செய்வது மனிதனோடு மனிதன் கொள்கிற நட்புறவுதானே!

               மனிதவாழ்வில் நட்புக்காலமே வசந்தகாலம்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.