நகைச்சுவைக்கோர் கலைவாணர்… என்.எஸ்.கே…

திரைப்பட உலகில் தங்கள் நடிப்பால், பாடல்களால் புகழ்பெற்ற நடிகர்கள், மிகுந்த செல்வமும், புகழும் பெற்றதோடு உலக மக்களின் மனதில் நீங்காத இடத்தையும் பெற்றனர்.

ஆனாலும் தங்கள் நகைச்சுவையால் சிறந்த கருத்துக்களை மக்களின் மனங்களில் விதைத்து, சிரிப்பு என்னும் பயிரை வளர்த்தவர்களில் இருவர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஒருவர் இங்கிலாந்திலே பிறந்து அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களில் நகைச்சுவை வேந்தராக விளங்கிய சார்லி சாப்ளின். மற்றொருவர் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி என்ற ஊரில் பிறந்து, நாடகங்களில், திரைப்படங்களில் புகழையும், பொருளையும் ஈட்டிய, கலைவாணர்’ என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ற திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.

இந்த இரு நடிகர்களுக்கும் ஓர் ஒற்றுமையும், பெருமையும் உண்டு. அப்பெருமை, திரையுலகைச் சார்ந்த இந்த இருவருக்கு மட்டுமே சிலை வைத்துப் போற்றியிருக்கிறார்கள் இவர்களால் மகிழ்ந்த மக்கள்.

சார்லி சாப்ளினுக்கு இங்கிலாந்திலும், திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு அவர் பிறந்த ஊரான நாகர்கோவிலும், சென்னையிலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கலைவாணர் தம் வாழ்நாளில் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் இளம் வயதிலேயே நாடகத்தில் நடித்துப் பிறகு திரைப்படங்களில் தமக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றி கண்டவர்.

திரைப்படம் தவிர என்.எஸ்.கே நாடக மன்றம் என்ற ஒன்றை ஏற்படுத்தித் தமிழகம் முழுவதும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று நாடகங்களை நடத்தி வெற்றி கண்டவர்.

கதாகாலட்சேபம், வில்லுப்பாட்டு போன்ற நாட்டுப்புறக்கலை வடிவங்களிலும் ஈடுபாடு கொண்டு கிந்தன் கதை, காந்தி மகான் கதை’ போன்றவற்றை நடத்திக் காட்டினார். பிறர் எழுதிய வசனங்களைப் பேசி மகிழ்வித்ததோடு தாமே வசனங்களை எழுதியும், உடுமலை நாராயண கவி, பாரதிதாசன், பேரரறிஞர் அண்ணா போன்றவர்களுடன் பழகி, அவர்களின் சிந்தனைக்குரிய பாடல்களைப் பாடியும், எழுதியும் மக்களின் மனதில் நிலையான இடத்தைப் பெற்றார்.

ஒரு பள்ளிக்கூட விழாவிற்குக் கலைவாணர் அவர்கள் பேசச் சென்றார். அது ஆரம்பப் பள்ளிக்கூடம். ஆகையால் அந்தச் சிறிய குழந்தைகளுக்கு ஏற்றவாறு தன் பேச்சை ஒரு கதையோடு தொடங்கினார். ‘ஒரு ஊர்ல முயலும், ஆமையும் இருந்தன. அவை ரெண்டுக்கும் ஒருநாள் ஓட்டப்பந்தயம் நடந்துச்சு’, என்று அவர் சொல்லிக்கொண்டு வரும்போதே, பள்ளிப் பிள்ளைகள் எல்லாம் ‘தெரியும், தெரியும்’ என்று ஆரவாரமாகச் சத்தமிட்டார்கள்.

உடனே கலைவாணர் அவர்கள், ‘என்ன தெரியும் சொல்லுங்க?’ என்றார்.

‘ரெண்டுக்கும் போட்டி நடந்துச்சு. ‘சரி’. ‘எது ஜெயிச்சது?’ என்று கேட்டார். ‘ஆமை ஜெயித்தது. முயல் தோற்றது’என்றனர் பிள்ளைகள். அதற்குக் கலைவாணர், ‘அது அப்படிச் சொல்லக்கூடாது. ‘முயல் ஆமையால் தோற்றது. எங்க சொல்லுங்க முயல் + ஆமை = முயலாமை. முயலாமை என்பது முயற்சி செய்யாமை. முயற்சி இல்லாதவர்கள் வலிமையுடையவர்களாக இருந்தாலும் தோற்றுத்தான் போவார்கள். அதுக்குத்தான் இந்தக் கதையில முயலும், ஆமையும் போட்டி போட்டதாகக் காட்டுறாங்க. இல்லாட்டி வேற மிருகத்தைச் சொல்லியிருக்கலாம்’ என்று கூறினார்.

முயல், ஆமை கதை எழுதிய அல்லது சொல்லிய அந்தப் படைப்பாளிக்குக் கூட, இப்படி ஓர் உண்மை இந்தக் கதையில் மறைந்திருக்குமா என்பது தெரியாமல் இருந்திருக்கலாம்.

கூர்த்த மதியாளராகிய கலைவாணர் குழந்தைகளும் அறியுமாறு தம் சிந்தனையில் இதனை வெளிப்படுத்தினார்.

‘ஹரிதாஸ்’ என்ற படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த போது, அதில் நடித்துப் புகழ் பெற்றிருந்த எம்.கே. தியாகராஜ பாகவதரும், கலைவாணர் அவர்களும் ஒரு வழக்கில் சிக்கி சிறை செல்ல நேர்ந்தது. பின்னர் விடுதலையாகி இருவரும் படங்களில் நடிக்கத் தொடங்கினர். அப்போது கலைவாணர் அவர்கள் புதுவீடு ஒன்று கட்டி அதில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடத்தினார். ‘அந்த நிகழச்சிக்கு எம்.கே.தியாகராஜ பாகவதர்  வரமாட்டார், இருவருக்கும் மனக்கசப்பு’ என்று பலர் பேசினார்கள். ஆனால் அன்று மாலை எம்.கே.டி அவர்கள் என்.எஸ்.கே அவர்களுடைய வீட்டு நிகழ்ச்சிக்கு  வந்திருந்தார். அனைவரோடும் பேசி மகிழ்ந்தார். எம்.கே.டியையும், என்.எஸ்.கேயையும் படமெடுக்கப் புகைப்படக்காரர்கள் போட்டி போட்டனர். அவர்களையெல்லாம் அமைதிப்படுத்திய என்.எஸ்.கே அவர்கள் தம் துணைவியாராகிய மதுரம் அம்மையாரை மேடைக்கு வரவழைத்தார். எம்.கே.டி அவர்களையும் மேடைக்கு அழைத்தார். மூவரும் மேடையில் நின்று புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்தனர்.

அப்போது கலைவாணர் அவர்கள் ஒன்று கூறினார். “எம்.கே.டி அவர்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும், ஏதோ மனக்கசப்பு என்று எல்லோரும் பேசுகிறார்கள். அப்படியொன்றுமில்லை. எங்களுக்குள் அவர் எப்போதும் இருக்கிறார். அவருக்குள் நாங்கள் இருக்கிறோம். எப்படித் தெரியுமா? இதோ பாருங்கள். என் வலதுபுறத்தில் மதுரம், முதலெழுத்து என்ன M அடுத்து கிருஷ்ணனாகிய நான் இருக்கிறேன். எம் பேர்ல முதலெழுத்து K எனக்கு இடதுபுறத்துலே தியாகராஜ பாகவதர் நிக்கிறார். அவருக்கு முதலெழுத்து என்ன T?  M.K.T.சரியாப் போச்சா?” என்று சொன்னபோது சபையினர் அனைவரும் மகிழ்ந்து ஆரவாரித்துக் கைதட்டினர்.

கலைவாணர்  அவர்கள் நகைச்சுவையாளர் மட்டுமில்லை, மிகச்சிறந்த சிந்தனையாளரும் ஆவார்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.