திரைவானில் ஒரு சந்திரன்… கே.பாலச்சந்தர்

தமிழ்த் திரையுலகில் புதிய மாற்றங்களை உருவாக்கிய இயக்குநர் வரிசையில் டைரக்டர் ஸ்ரீதர் அவர்களுக்கு எத்தனை பங்குண்டோ அத்தனை பங்கு இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரைத் தொடர்ந்து வந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும் உண்டு.
திரு.கே.பாலச்சந்தர் அவர்கள் அரசுப்பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கியபோதும் அவரிடத்தில் இருந்த நாடகத் தாகம் அவரை நாடக உலகிற்கும் திரையுலகிற்கும் அழைத்து வந்தது. சென்னை ஏ.ஜி. அலுவலகத்தில் (அக்கவுண்டண்ட் ஜெனரல்) பணிபுரிந்தபோது உணவு இடைவேளை நேரத்தில் நாடகத்திற்கான கருவை உருவாக்கி நடிக்க விருப்பமுள்ளவர்களைத் தன் குழுவில் இணைத்துக்கொண்டு ஆங்கில நாடகங்களை, மேடை நாடகங்களாக இயக்கிக்கொண்டிருந்தார் பாலச்சந்தர்.
அவரது ஆற்றலைக் கேள்விப்பட்ட திரையுலகைச் சார்ந்த திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் பாலச்சந்தரை இணைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் அவர்கள் கதாநாயகனாக நடித்த ‘தெய்வத்தாய்’ படத்திற்குக் கதை வசனம் எழுத வாய்ப்புக் கொடுத்தார்.
அந்தப் படம் வெற்றிபெற்ற போதிலும் அதற்குப் பிறகு அவர் எம்.ஜி.ஆரோடு பணிபுரியவில்லை. (இதேபோல் பிற்காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து ‘எதிரொலி’ என்றொரு படத்தையும் பாலச்சந்தர் இயக்கியிருந்தார்)
பாலச்சந்தரது ‘சர்வர் சுந்தரம்’ நாடகம் சிறப்பாக வெற்றி நடைபோடுவதை அறிந்த ஏ.வி.எம். நிறுவனத்தார், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் பாலச்சந்தர் கதை வசனத்தில் அந்தப் படத்தைத் தயாரிக்கச் ‘சர்வர் சுந்தரம்’ பாலச்சந்தர் அவர்களுக்கு மிகப்பெரிய புகழைத் தேடித் தந்தது.
பின்னர் திரு.நாகேஷ் அவர்களை முக்கியப் பாத்திரமாக வைத்து அவர் முதன்முதலில் இயக்கிய படம் ‘நீர்க்குமிழி’ அப்படி அந்தப் படத்திற்கு அவர் பெயர் வைத்தபோது பலர், ‘முதல் படத்திற்கே இப்படிப் பெயர் வைப்பதா? இந்தப் படத்தில் கதாநாயகன் வேறு இறந்துவிடுகிறாரே’ என்று கூறியபோதும், பாலச்சந்தர் தன்னம்பிக்கையோடு அப்படத்தை இயக்கி வெளியிட்டார், அந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதுவே அவர் திரையுலகில் இயக்கிய முதல் படம். அது முதல் அவருடைய வெற்றிப்பயணம் தொடங்கியது.
நாணல், மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், இருகோடுகள், எனப் பாலச்சந்தர் பாணி படங்கள் வெற்றிநடைபோடத் தொடங்கின. அத்தனை பேரையும் புதுமுகமாக வைத்து அவர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’யும், ‘அரங்கேற்றம்’ படமும் அவரது வெற்றிப்படிக்கட்டுகள் எனலாம்.
திரையுலகில் கலைஞானி கமலஹாசனையும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும், வெள்ளித்திரையில் துருவநட்சத்திரங்களாக மாற்றிய பெருமை பாலச்சந்தருக்கே உண்டு.
சிந்து பைரவி, புன்னகை மன்னன், போன்ற படங்கள் அவரது திரையுலக வாழ்க்கைக்கு விருதுத் தோரணம் கட்டின. நான் அவரைப் பல மேடைகளில் சந்தித்திருந்தாலும், கிரேஸி மோகன் அவர்களின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தின் 600ஆவது மேடையில் திரு.பாலச்சந்தர் அவர்களும், கமல் அவர்களும், கிரேஸி மோகன் அவர்களும் வீற்றிருக்க, நான் பேசிய பேச்சு அவர்கள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. அந்தப் பேச்சினை இப்போதும்கூட யூ-ட்யூப்பில் காணலாம்.
திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கு இரசிகனாக இருந்த நான், அவரோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பினை என் இனிய நண்பர் பத்மஸ்ரீ கமல் அவர்கள் மூலம் பெற்றேன். ‘உத்தம வில்லன்’ படத்தில் நானும் அவரும் சேர்ந்து நடித்தோம். அப்போது பெங்க௵ருவில் நடைபெற்ற அப்படப்பிடிப்பின் இடைவேளையின் போது பாலச்சந்தர் அவர்களோடு பலமுறை உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அப்போது ஒருநாள் அவர் என்னிடத்தில், ‘பேராசிரியர், நீங்களும் ரேணுகா அவர்கள் நடித்த ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படம் பார்த்தேன். எஸ்.எஸ்.குமரன் இயக்கியிருந்தார். அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடித்தது. உங்களுடைய அப்பாவித்தனமான நடிப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது’ என்று அவர் என் கையைப் பிடித்துக்கொண்டு பாராட்டிய நிகழ்ச்சி என்றும் என் மனக்கண்ணை விட்டு அகலாது.
புராணத் திரைப்படங்களையும், வரலாற்றுத் திரைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குப் பயணிக்கச் செய்து, மனித உறவுகள் சந்திக்கும் சிக்கல்களையும், பெண் உரிமைகளையும், பெண் விடுதலையையும் பேசவைத்தவர் கே.பாலச்சந்தர் .
நாடகத்தைத் தொடங்கும்போது, கடவுள் வாழ்த்து போடுவார்கள். பிறகுதான் நாடகம் ஆரம்பமாகும். ஆனால் தன்னுடைய நாடகங்களைத் திருக்குறளில் இருந்து தொடங்குவதுதான் பாலச்சந்தரின் வழக்கம். இதுவே பின்னாளில், திரையிலும் எதிரொலித்தது. படத்தை எந்தக் கம்பெனி தயாரித்தாலும் பாலச்சந்தர் இயக்கிய படங்களில் மட்டும், திருவள்ளுவர் வந்துவிடுவார். ‘அகர முதல எழுத்தெல்லாம்….’ என்ற குறளும், குரலும் ஒலித்துவிடும். பின்னர் அது கவிதாலயாவின் அடையாளச் சின்னமாகவும் திகழ்ந்தது.
மருத்துவமனைக்குள்ளேயே இருக்கும் ‘நீர்க்குமிழி’. அதேபோல், ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர் நீச்சல்’ ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் வேறுபாடு காட்டியிருப்பார் பாலச்சந்தர். தன் நாடகத்தில் இசையமைத்து வந்த வி.குமாரை இசையமைப்பாளராக ‘நீர்க்குமிழி’யில் அறிமுகம் செய்தார் பாலச்சந்தர். (ஆடி அடங்கும் வாழ்கையடா… ஆறடி நிலமே சொந்தமடா… எனும் தத்துவப்பாடலைக் கவிஞர் சுரதா எழுதியிருப்பார்)
தன் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுக்க, நாகேஷ் போல் அடுத்து அவர் தேர்வு செய்தவர் மேஜர் சுந்தர்ராஜன். சுந்தர்ராஜனுக்கு முன்னே ‘மேஜர்’ எனும் அடைமொழிக்குக் காரணமே பாலச்சந்தர்தான். ‘மேஜர் சந்திரகாந்த்’ படமும் பாத்திர வார்ப்புகளும் புது தினுசு என்று கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தில் இவர் பயன்படுத்திய ‘ரஜினிகாந்த்’ என்ற பெயரைத்தான் பின்னாளில் சிவாஜி ராவாக வந்தவருக்கு ரஜினிகாந்த் எனப் பெயர் சூட்டினார்.
பாலச்சந்தரின் படமும், கதையும், கதாபாத்திரங்களும் ஒரு நாவலைப்போல் கட்டமைக்கப்பட்டிருக்கும். கதை சொல்லவேண்டியதை, காட்சிகள் சொல்லவேண்டும், காட்சிகள் உணர்த்த வேண்டியதை வசனம் சொல்ல வேண்டும், வசனம் சொல்ல வேண்டியதை ஒரு பாடலே சொல்லிவிட வேண்டும். சில சமயங்களில், மௌனத்தையும், இசையையும் கொண்டு கூட உணர்வுகளைச் சொல்லிவிடுவார் பாலச்சந்தர். ஒரு காட்சியை ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் ஆரம்ப – இறுதிக்கு நடுவேயும் நகாசு பண்ணிக்கொண்டே இருப்பார். இவையெல்லாம் ‘பாலச்சந்தர் டச்’ என்று பிரிமிக்கவும் ரசிக்கவும் வைத்தன.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ்ச் சினிமாவின் கலைத்துறையில் பிதாமகனாக விளங்கிய பாலச்சந்தர், ஏழு முறை தேசிய விருதுகளாலும், 13முறை ஃபிலிம்பேர் விருதுகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளுள் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருதும், மேலும் அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி விருது எனப் பல விருதுகளையும் வென்றுள்ளார்.
எத்தனையோ விருதுகளைப் பெற்ற அவர், இந்தியாவின் மிக உயரிய விருதான ‘தாதா சாஹேப் பால்கே’ விருதைப் பெற்றது அவருக்குக் கிடைத்த பெருமை மட்டுமன்று தமிழ்த் திரையுலகத்திற்கே கிடைத்த பெருமை.
நன்னிலம் என்ற ஒரு சிறிய கிராமத்தில், எளிய குடும்பத்தில் பிறந்த திரு.பாலச்சந்தர் அவர்கள் தம் உழைப்பாலும், கற்பனைத் திறத்தாலும் பலரை உருவாக்க வேண்டும் என்ற மனஊக்கத்தாலும் உயர்ந்தார், தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தினார். அவர் திரையுலகின் பாலச்…சந்திரன் மட்டுமில்லை, பூரண நிலவு. அது என்றைக்கும் திரைவானில் ஒளிவீசிக் கொண்டிருக்கும்.