திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள்

               இந்தியத் திரைப்பட வரலாற்றில் தமிழ்த் திரையுலகிற்கு ஒரு தனியிடம் உண்டு. அமெரிக்காவில் ஹாலிவுட், பம்பாயில் பாலிவுட், தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தை கோலிவுட் என்று வேடிக்கையாகப் பத்திரிக்கையாளர்கள் குறிப்பிடுவது உண்டு.

               1931இல் தமிழ் சினிமா பேசவும், பாடவும் தொடங்கியது. அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் இத்திரையுலகில் புகழும், பணமும், பதவியும் பெற்று உயர்ந்தோர் பலர். அதைப்போலத் தங்கள் நடிப்பால் இசையால், கவிதைகளால் தமிழ்த்திரைக்குப் பெரும்புகழை உலக அரங்கில் எடுத்துச் சொல்லுமளவிற்குப் பெருமை சேர்த்தவர்களும் உண்டு.

               இத்தகு புகழ்மிக்க தமிழ்த் திரைப்பட உலகில் காலம்காலமாகத் தங்களது நகைச்சுவை நடிப்பால் வாழ்ந்த காலத்திலும், மறைந்தபோதிலும் மக்களை மகிழ்வித்து, தற்போதும் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்ற நகைச்சுவை நடிகர்கள் ஒரு தனியிடத்தைப் பெறுகிறார்கள்.

               திரு. காளி என்.ரத்தினம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஏ.கருணாநிதி, காகா ராதாகிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, ஜே.பி.சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், சோ, கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், விவேக், வடிவேலு, சின்னி ஜெயந்த், தாமு, வையாபுரி, கருணாஸ் போன்ற அதிக எண்ணிக்கையிலான நகைச்சுவை நடிகர்களை இந்தியமொழி சினிமாக்களில் – தமிழ் சினிமாக்களில் மட்டுமே காணமுடியும்.

               இவர்கள் தவிர, பல்வேறு வேடங்களை ஏற்றாலும் தங்கள் நகைச்சுவையால் மக்களின் மனம் மகிழச் செய்தவர்கள் டி.எஸ். பாலையா, வி.கே.இராமசாமி, எம்.ஆர்.ராதா போன்றவர்களும், கதாநாயகனாக அறிமுகமாகி நகைச்சுவை நடிகராக மிளிர்ந்த டி.ஆர்.இராமச்சந்திரனும், தமிழ்த் திரையுலகில் என்றும் நீங்காத இடம் பெற்றவர்கள் ஆவார்கள். மேலும் கதாநாயகர்களாகச் சிறந்து விளங்கிய சிவாஜி கணேசன் மற்றும் கமலஹாசன், ரஜினிகாந்த், போன்றோர்களின் நகைச்சுவை நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

               நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் அந்தக்காலத்தில் சொந்தக்குரலில் பாடவும், ஆடவும் தெரிந்த நடிகர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் கோமாளிகள் அல்லது பபூன்கள் என்று நாடகங்களில் அழைக்கப்பட்ட பெயர்களை மாற்றி, நகைச்சுவைக் கலைவாணர்கள்’ என்ற அருமையான பட்டத்தை வாங்கித் தந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான்.

               அதோடு அந்தக்காலத்தில் திரையிடப்பட்டு ஓடாத படங்களைக்கூட பின்னர் நகைச்சுவைப் பகுதிகளைத் தனியே சேர்த்து ஓடவைத்த பெருமை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு உண்டு.

               நாடக உலகின் தந்தை என்றழைக்கப்படுகின்ற பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய சபாபதி’ நாடகத்தில் கல்வியறிவு குறைந்த வேலைக்காரனாக திரு.காளி என்.ரத்தினம் நடித்து, பாடி அப்படத்தின் கதாநாயகனாக நடித்த டி.ஆர். இராமச்சந்திரனுக்கு இணையாகப் புகழ்பெற்றார். அந்தப்படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகனாகிய டி.ஆர்.ராமச்சந்திரன் தன் வேலைக்காரனான காளி என்.ரத்தினத்தை அழைத்து ‘இந்தாப்பா! நாலணாவுக்குப் பாதாம் அல்வாவும், நாலணாவுக்கு பக்கோடாவும் வாங்கிட்டு வா!’ என்று அனுப்பி விடுவார். ‘சரி’ என்று கடைவரை சென்ற காளி என்.ரத்தினம் திரும்ப வந்து ‘ஏம்பா! எந்த நாலணாவுக்குப் பாதாம் அல்வா, எந்த நாலணாவுக்குப் பக்கோடான்னு சொல்லாம விட்டேயப்பா!’ எனக் கேட்பார்.

               ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ என்ற படத்தில் பேசமுடியாத ஊமைபோல் நடித்து ஒரு பாடலையே பாடிக் காட்டுவார் திரு. காளி என்.ரத்தினம்.

               நாடக நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய திரு. காளி என்.ரத்தினம் ஒரு நாடகத்தில் காளி வேடம் இட்டு நடித்ததால் இந்தப் பெயர் பெற்றதாகக் கூறுவார்கள்.

               தமிழகத்தின் முன்னாள் முதல்வராக விளங்கிய திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் தனக்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்த குருநாதர் என்று திரு. காளி என்.ரத்தினத்தைக் குறிப்பிடுவார்.

               கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தக்குரலில் பாடியதோடு, பாடலை இயற்றும் வல்லமையும் உடையவராக இருந்தார். இவருடைய நகைச்சுவையில் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களும், மூடநம்பிக்கை ஒழிப்பும், நல்ல தமிழ் உணர்வும் காணப்பெறும்.

               இவர் கடைசியாக நடித்தது, திரு.சிவாஜி கணேசனும், பானுமதியும் இணைந்து நடித்த அம்பிகாபதி’ என்ற படம் எனச் சொல்வார்கள். இப்படத்தில் இவர் இலங்கைத் தமிழராக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் மத்தளம், தபேலா, கஞ்சிரா, கடம் போன்ற இசைக் கருவிகளைச் சுற்றிலும் வைத்துக்கொண்டு இசையமைத்துக் கொண்டிருப்பார். அப்போது அந்தப் பக்கம் வந்த டி.ஏ.மதுரம் அவர்கள் கலைவாணரைப் பார்த்து ‘இதெல்லாம் என்ன?’ என்று கேட்பார்கள். உடனே கலைவாணர் பெருமையாக, ‘இதெல்லாம் கலை!’ என்பார். உடனே அம்மையார் அந்தக் கருவிகளையெல்லாம் கலைத்துத் தனித் தனியாக எடுத்து வைப்பார். உடனே கலைவாணர் பதறிப்போய், ‘என்ன? என்ன?’ என்று கேட்பார். அதற்கு அந்த அம்மையார், ‘நீங்கதான, இதெல்லாம் கலைன்னீங்க. அதான் கலைச்சிட்டேன்’ என்பார். உடனே கலைவாணர் வியப்போடு, ‘ஆஹா! கலை என்றால் கலையும் ஆகும், கலைத்தலும் ஆகும்.

               மலை என்றால் மலையும் ஆகும் மலைத்தலும் ஆகும்

                நிலை என்றால் நிலையும் ஆகும் நிலைத்தலும் ஆகும்”

               எனத் தமிழ்மொழியின் தன்மையை வியந்து பாராட்டுவார். நகைச்சுவை நடிகரான திரு.ஏ.கருணாநிதியின் வசன உச்சரிப்பும், முகபாவமும் தனியான ஒரு பாணியாக இருக்கும்.

               இவர்களுக்குப் பிறகு சொந்தக்குரலில் பாடாவிட்டாலும், உடம்பை அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தன் குரலின் ஏற்ற இறக்கத்தால் பல ஆண்டுகள் நகைச்சுவையை மக்களுக்கு வழங்கியவர் கே.ஏ.தங்கவேலு. கல்யாணப் பரிசும், அடுத்த வீட்டுப் பெண்ணும், கடன் வாங்கிக் கல்யாணம் போன்ற படங்களும் டணால் தங்கவேலு’ என்ற பட்டத்தை அவருக்குத் தந்தன.

               தமிழ் நகைச்சுவை உலகில் மேற்கத்திய பாணியைப் புகுத்தி மிகச் சிறப்பாக நடனம் ஆடவும், அருமையான குரலில் பாடவும் தெரிந்த ஒரே நடிகர் ஜே.பி.சந்திரபாபு. இவரது நகைச்சுவைப் பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது இவரது புகழுக்கொரு அடையாளம்.

               தெருக்கூத்துக்களிலும், நாடகங்களிலும் நகைச்சுவை நடிகர்களாகத் தொடங்கி, திரையுலகிலும் புகழோடு விளங்கிய நடிகர் பரம்பரையை அடுத்து வந்தவர் நாகேஷ்.

               அமெச்சூர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கி பின்னர் தமிழ்த் திரையில் அதிகப் புகழும் சம்பாதித்து இன்றைக்கு வரைக்கும் தன் நகைச்சுவையால் வாழ்ந்து கொண்டிருப்பவர் திரு. நாகேஷ்அவர்கள். தில்லானா மோகனாம்பாள் வைத்தியும், திருவிளையாடல் தருமியும், இவரது நகைச்சுவை உலகில் மைல்கற்கள்.

               சர்வர் சுந்தரமும், எதிர் நீச்சலும் இவருக்குக் கதாநாயகன் தகுதியைப் பெற்றுத் தந்த படங்களாகும். இந்த வெற்றிக்கு இயக்குநர் கே.பாலச்சந்தரே வழிவகுத்தவர் ஆவார்.

               சமீபகாலத்தில் எந்தப் படமாக இருந்தாலும் நகைச்சுவைக்குப் பெரும் பங்கு இருப்பதும், கதாநாயகர்களே காமெடியோடு கலந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பதும் நகைச்சுவைக்குக் கிடைத்த வெற்றி.

               மகிழவும், மகிழ வைக்கவும் தெரிந்துகொண்டால் வன்முறைக் கலாச்சாரம் விடைபெற்றுச் செல்லும். தமிழ் நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து வெற்றி பெறட்டும்.

               இன்றுவரையில் நகைச்சுவை நடிகர்களுக்கான உயரம் என்பது தனிதான். சான்றாக, திரு. யோகிபாபு அவர்களுடைய தேதிகளுக்கு ஏற்பத்தான் பல படங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன என்பது நகைச்சுவை நடிகர்களுக்குக் கிடைத்த மகுடம் என்றே நாம் பாராட்டலாம்.

தொடரட்டும் இந்தப் பயணம். தமிழ் நகைச்சுவை நடிகர்களின் அணிவகுப்பை ஆவலோடு எதிர்பார்ப்போம்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.