திரைக்கவித் திலகம்… மருதகாசி

தமிழ்த்திரையிசை உலகில் தனக்கென ஒரு தனித்தடம் பதித்தவர் கவிஞர் மருதகாசி. இவருடைய புகழ்மிக்கப் பாடல்களை இன்றைய தலைமுறையினர் பலர் அறியமாட்டார்கள். ‘வண்ணக்கிளி’ படத்தில் வருகின்ற ‘சித்தாடை கட்டிக்கிட்டு’ என்ற பாடலும், ‘குமுதம்’ படத்தில் வரக்கூடிய ‘மாமா மாமா மாமா….’ என்ற பாடலும் குறிப்பிடத்தகுந்தன.
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இவர் எழுதிய பல பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினுடைய பாடல்களோ என்று எண்ணத் தோன்றும். ‘ரம்பையின் காதல்’ படத்தில் வரக்கூடிய புகழ்பெற்ற தத்துவப்பாடலான ‘சமரசம் உலாவும் இடமே.’ என்ற பாடல் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. ‘அலிபாபாவும் 40திருடர்களும்’ படத்திலும் இவருடைய பாடல்கள் மக்கள் மனதைக் கவர்ந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இவர் ‘விவசாயி’ படத்தில் எழுதிய,
‘விவசாயி… விவசாயி…
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி…
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல்காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்…
‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி…’
என்கிற இவரது பாட்டு எந்தக் காலத்துக்கும் பொருந்தி வரும் பாட்டு.
இதேபோல் எம்.ஜி.ஆர்.அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இவர் எழுதிய ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்’ என்ற பாடல்தான் இவரது கடைசிப்பாடல். இந்தப் பாடலை எழுதுவதற்காகவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் மருதகாசி அவர்களைச் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வரவழைத்தாராம்.
இவருடைய நீண்ட திரையிசைப் பயணத்தில் 4000பாடல்களுக்கும் மேல் இவர் எழுதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘வண்ணக்கிளி’ படத்தில் வரும் ‘சின்னப்பாப்பா எங்க செல்லப் பாப்பா’ என்ற பாடலும், ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பாடலும், ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில் வருகின்ற ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்’ போன்ற பாடல்களும் என்றைக்கும் இவர் புகழைச் சொல்லிக்கொண்டே இருக்கும். இவருக்குப் பிறகு இவரது மகனாகிய திரு.மருதபரணி அவர்கள் தெலுங்கு, மற்றும் ஆங்கிலப் படங்களுடைய தமிழ் வடிவத்திற்கு வசனம் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மருதபரணியின் வசன அருமையைத் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் 300 பருத்தி வீரர்கள் (300 Warriors) என்ற படத்தைப் பாருங்கள்.
என்னிடத்தில் பயின்ற மாணவர் ஒருவர் மருதகாசியின் பாடல்கள் பற்றி இளநிலை ஆய்வு செய்து (எம்.ஃபில்) பட்டம் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகவதத் தமிழுக்குப் பதில் பாமரத் தமிழை திரையில் ஒலிக்கச் செய்த கவிஞர் மருதகாசி திரைக்கவித் திலகம் என அழைக்கப்பட்டார். இவர் 1920ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர்.
இவர் சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் “தேவி நாடக சபை”யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார். மேலும் மு.கருணாநிதி எழுதிய மந்திர குமாரி போன்ற நாடகங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். கவிஞர் கா.மு.ஷரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். மேலும் பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார் மருதகாசி அவர்கள்.
மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாச்சாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர் இவர்.
தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.இராமநாதன் “மாடர்ன் தியேட்டர்ஸ்” படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாடகப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர். சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.
1949ஆம் ஆண்டு வெளிவந்த “மாயாவதி” என்ற படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி.
“பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ” (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல். அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கும் மேல் பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டும்.
மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு, மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.
‘நீலவண்ண கண்ணா வாடா’ என்று ‘மங்கையர் திலகம்’ படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கானத் தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கவேண்டும்.
தேவரின் ‘தாய்க்குப்பின் தாரம்’ படத்துக்காக எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் “மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே” என்ற பாடலை எழுதினார்.
இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார் மருதகாசி. அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘தாய் மீது சத்தியம்’ என்னும் படம்.
கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில் ‘நல்லவன் வாழ்வான்’ படத்துக்காக “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்” என்ற பாடலை எழுதினார். இயற்கைத்தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை. எனவே மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர். மாற்றுப்பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.
‘புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டாராம். வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது “நானும் இந்த நூற்றாண்டும்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
டி.எம்.சௌந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை மருதகாசியையே சேரும்.
மருதகாசியின் திரையிசைப் பாடல்களையும் புத்தகங்களையும் 2007ஆம் ஆண்டு மே மாதம், தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியுள்ளது. இவரின் திரையிசைப் பாடல்கள் புத்தகமாகவும் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தனிமுத்திரை பதித்த மருதகாசி, 29.11.1989இல் காலமானார். தமிழ் சினிமாவைப் பற்றிய பதிவுகளில் தவிர்க்க முடியாத பங்களிப்பு மருதகாசியுடையது.
பழைய பாடல்களை விரும்பும் நேயர்களுக்கு இவரது பாடல்கள் எப்போதும் இசை விருந்துதான். ‘வண்டி உருண்டோட அச்சாணி தேவை’ என்பதுபோல திரையுலகத்திற்கு அன்றைக்கு மிகத் தேவையாக இருந்தவர் மருதகாசி என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
வடகாசி புண்ணிய ஸ்தலம், மருதகாசி கவிதைத் தலம்.