தாடிக்கொம்பு சிற்பங்கள்

               தமிழகத்தின் பழம் பெருமைகளில் ஒன்று சிற்பக்கலை. தற்காலத்தில்கூட இயல், இசை, நாடகம் என்றிருந்த முத்தமிழை அறிவியல், நுண்கலை என ஐந்தமிழாகவும், மிகச் சமீப காலத்தில் கணினித் தமிழ் என்ற ஒன்றையும் இணைத்து, தமிழை ஆறு பகுப்புகளாகச் சொல்லி வருகிறார்கள். தமிழகத்தில் இத்தனைக் கோயில்கள் தேவையா எனச் சிலர் கேட்கிறார்கள். கோவிலென்பது வெறும் வழிபாட்டுத் தலம் என்று மட்டும் நினைக்கலாகாது.

               அக்காலங்களில் தனியாக மருத்துவமனைகள் இல்லாததால் கோவில் நந்தவனங்களில் மலர்கள், மூலிகைகள், பச்சிலைகள் முதலானவற்றைத் தரும் செடிகளைப் பயிரிட்டு அவற்றின் மூலம் மருந்துகளைத் தயாரித்து நோயுற்று நலிந்து வந்தவர்களுக்கு அரசனின் ஆணைப்படி தந்துதவியிருக்கிறார்கள். இதற்கு ஆதூர சாலை’ என்று பெயர். அடுத்தபடியாக உடல் குறையுற்றோர், முதியோர், வறியவர்கள் ஆகியோர்க்கு உணவைத் தானமாகக் கொடுக்கின்ற அன்னசத்திரமாகவும் கோவில்கள் விளங்கியிருக்கின்றன. மூன்றாவதாக இசை, ஓவியம், நாட்டியம், நாடகம், சிற்பம், பண்ணிசை எனப் பல்வகையான கலைகள் சிறந்து விளங்கும் இடங்களாகவும் கோவில்கள் அமைந்திருக்கின்றன.

         நான்காவதாக மனிதர்களை ஒழுக்க நெறியில் பயிற்றுவிக்கும், பக்தி நெறியில் நடக்கவைக்கும் கல்விக்கூடங்கள் போலவும் இக்கோயில்கள் விளங்கி வந்திருக்கின்றன. இத்தகைய நான்கு குறிக்கோள்களோடுதான் கோயில்களை மன்னர்களும், செல்வந்தர்களும் உருவாக்கியிருக்க வேண்டும்.

               தமிழ்க் கோயில்களில் சிற்பக் கலையால் பெருமைபெற்ற கோயில்கள் பல இன்றைக்கும் சிறந்து விளங்குகின்றன. மாமல்லபுரம, தாராசுரம், தாரமங்கலம், பேரூர், தாடிக்கொம்பு, கொடும்பார், மூவர் கோயில், கிருஷ்ணாபுரம் எனக் கூறிக்கொண்டே செல்லலாம். சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு, திண்டுக்கல் வரும் வழியில் வேடசந்தூருக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையில் அமைந்துள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோவிலைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

               தாடிக்கொம்பு என்பது அந்த ஊரின் பெயர். இதற்கு என்ன பொருள் என்று அங்கிருந்த கோவில் அர்ச்சகர் திரு.ராமமூர்த்தி என்பவரிடம் கேட்டபோது, தாட்டே கொம்பே” என்ற தெலுங்குப் பெயரினுடைய திரிந்த வடிவம்தான் தாடிக்கொம்பு என்று வந்திருக்கிறது. இதற்குப் பனை மரங்கள் மிகுந்த பகுதி என்பது பொருள். கிருஷ்ணதேவராயருடைய பிரதிநிதிகள் மதுரையை ஆளத் தொடங்கியபோது இந்தப் பகுதிகளில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இதற்கான சான்று என்னவென்றால், இங்கிருக்கின்ற தூண்களில் ஒன்றில் கிருஷ்ணதேவராயருடைய தம்பியின் சிற்பம் காணப்படுவதுதான்’ எனக் கூறினார். இக்கோயிலில் அமைந்துள்ள மூலவரின் பெயர் சௌந்தரராஜப் பெருமாள். எம்பெருமான் திருப்பதியிலே காட்சி தருவதுபோல, நின்ற கோலத்தில் இங்கு காட்சி தருகிறார். இக்கோவிலில் முதலில் தாயார் சன்னதிக்குப் பக்தர்களை அழைத்துச் செல்கிறார்கள். அதற்கான காரணம் என்னவென்றால் இங்குதான் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சிற்பக் கூடங்களில் ஒன்று அமைந்துள்ளது.

         14தூண்களில் எதிரெதிராகப் பல்வேறு கலைநயம் ததும்பும் சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன. இக்காலத்துச் சிற்பிகளை வேலை செய்ய அழைக்கிறபோது ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வார்களாம். ‘திருப்பெருந்துறை கொடுங்கை, தாராசுரம், தாடிக்கொம்புச் சிற்பங்கள் நீங்கலாக நாங்கள் வேலை செய்வோம்’ என ஒப்பந்தம் செய்து கொள்வார்களாம்.

          இந்தப் பதினான்கு தூண்களில் இன்னும் சில வியப்புக்குரிய சிற்பங்களும் உண்டு. இக்கோயில் வைணவக் கோவிலாக இருந்தாலும், சைவச் சிற்பங்கள் சில இத்தூண்களில் வடிக்கப்பட்டிருக்கின்றன. இதிலே விநாயகர் சிலை ஒன்று நின்ற நிலையில் உருவாக்கப்பட்டிருப்பது புதுமையான ஒன்றாக உள்ளது. மேலும் சிதம்பரத்திலே காணப்படுகிற சிவபெருமானும் – பார்வதி தேவியும் ஆடுகின்ற ஊர்த்துவ தாண்டவக் காட்சியும் இங்கு வடிக்கப்பட்டுள்ளது.

        மற்றொரு தூணில் இரணியனை மடியில் போட்டு அவனை இரண்டாகக் கிழித்து, அவனுடைய குடலை மாலையாகப் போடுகின்ற உக்கிரம் நிறைந்த நரசிங்கப் பெருமானுடைய சிற்பம் காண்போரை அஞ்ச வைக்கிறது. குறிப்பாக அந்த நரசிங்கத்தின் கையிலுள்ள விரல்களும், கூர்மைமிகுந்த நகங்களும் கண்டோரை வியப்பில் ஆழ்த்தும்.

      அடுத்து காமனும், ரதியும் இரண்டு தூண்களில் காட்சி தருகிறார்கள். காமன் தன் அழகான உருவத்தோடு தென்றலாகிய தேரில் கிளியாகிய குதிரையைப் பூட்டி, கரும்பு வில்லும், கரும்பு நாணுமாக நிற்க, எதிர்ப்புறத்தில் ரதியின் உருவம். ரதி எத்தனை அழகானவள் என்பதை இந்தச் சிற்பத்தைப் பார்த்து அறிந்துகொள்ளச் செய்திருக்கிறான் அந்தச் சிற்பி.

          அந்தக் கோவிலில் ஒரு வழக்கம் காணப்படுகிறது. திருமணம் செய்துகொள்ள வேண்டுபவர்கள் மங்களப்பொடியாகிய மஞ்சள் பொடியைக் கொண்டுவந்து காமனுக்கும் ரதிக்கும் அபிேஷகம் செய்து நேர்த்திக்கடன் தீர்க்கிறார்கள்.

           கோவிலின் மற்றொருபுறத்தில் ஆயுர்வேதத்துக்குரிய கடவுளாகிய தன்வந்திரி அங்கே காட்சி  தருகிறார். அந்த இடத்தில் வருகிறவர்களுக்கு சுக்கு – மிளகு – திப்பிலி இவை கலந்து செய்யப்பட்ட உணவுப்பொருளைப் பிரசாதமாகத் தருகிறார்கள்.

               இன்னொரு அதிசயம், இந்தச் சிற்பங்களை நம் விரல்களால் தட்டிப் பார்க்கிறபோது அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான ஓசையை எழுப்புகின்றன. ஒன்று நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அக்காலத்தில் சிலை வடித்த சிற்பிகள் கடவுளர் சிலைகளை வடிப்பதற்குப் பூமியில் மறைந்திருக்கும் தரமான கற்களைத் தேடி எடுத்திருக்கிறார்கள். அக்கற்கள் பல்வேறு விதமான குணங்களை உடையனவாக இருந்திருக்க வேண்டும். சற்றே நெகிழ்ந்து கொடுப்பனவாக, காலங் காலமாகப் பல்வேறு அபிேஷகங்களைத் தாங்கிக் கொள்வனவாக உள்ள கற்களைத் தேடி எடுத்திருக்கிறார்கள்.

   தற்காலத்தில் கனிவளம் மிகுந்த மலைகள் விற்பனைக்காக வெடி வைத்துத் தகர்க்கப்படுவதையும், அரிய கற்கள் நொறுக்கப்படுவதையும் காணும்போது நமக்கு வேதனை ஏற்படுகிறது.

      ஒவ்வொரு கல்லும் காலத்தை வென்று கலைநுட்பத்தோடு காட்சி தரும் அழகை எண்ணிப்பார்க்க வேண்டாமா? கல்லிலே கலைவண்ணம் கண்ட சிற்பிகளின் செயல்திறனைச் சிந்திக்க வேண்டாமா? கலைநயம் மிக்க சிற்பங்கள் நிறைந்த தாடிக்கொம்பு போன்ற கோவில்களைப் பாதுகாப்பது மிக அவசியம். சுற்றுலா என்றால் குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி என்பதோடு நின்றுவிடாமல், இத்தகைய கலைநயம் மிகுந்த இடங்களின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதும் நம் கடமைதான். வாய்ப்புக் கிடைத்தால் மறக்காமல் தாடிக்கொம்பு சென்று வாருங்கள்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.