தமிழ் கற்போம்…தரணியை வெல்ல….!

‘கண்ணுதற் பெருங்கடவுள் கழகமோடமர்ந்து
பண்ணுறத் தெளிந்து ஆய்ந்த இப்பசுந் தமிழ்’
–திருவிளையாடல் புராணம்
உலகில் தோன்றிய பழைய மொழிகளுள் செம்மொழி உயர்வினைப் பெற்றிருக்கக் கூடிய தமிழ்மொழிக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இம்மொழி பக்தி உணர்வினை உணர்த்தும் பெருமையுடையது. கடவுளர்களையும் இம்மொழி பூமிக்கு இறங்கி வரவழைத்ததாகப் புராணங்களில் படிக்கின்றோம்.
‘திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்’ மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவனாக இருந்ததும், குறிஞ்சிக் கடவுளாம் முருகப்பெருமான் தமிழ்ப் பாடல்களை விரும்பி அவ்வையோடும் அருணகிரியோடும் விளையாடியதும், மீனாட்சியம்மை, பிள்ளைத் தமிழில் வருகைப் பருவத்தில் வந்து தோன்றி குமரகுருபரனை உலகறியச் செய்ததும் தன் பக்தன் கணிகண்ணனுக்கு அவனின் தமிழிசைக்காக உலகளந்த பெருமாள் படுத்திருந்த பாய் சுருட்டி உடன் சென்றதும், வேழமுகக் கடவுள் தந்தம் ஒடித்துப் பாரதம் தந்ததும், தமிழ்மொழிக்கும் இறை உணர்வுக்குமான ஒரு தொடர்பான வரலாறாகக் கொள்ளலாம்.
இத்தகைய பழம்பெருமை வாய்ந்த செம்மொழியை, அடுத்துவரும் தலைமுறைக்குத் தயாராக இருக்கும் இளைய மாணாக்கர்கள் ஆர்வத்துடன் கற்கிறார்களா? இம்மொழியைக் கற்பதால், மறுமைக்குப் பயன்கிடைப்பது இருக்கட்டும் இம்மை வாழ்க்கைக்கு இவ்வுலக வாழ்க்கைக்குக் குறிப்பாக வேலை வாய்ப்புக்கு வழியுண்டா? எனக் கேட்கிறார்கள். சற்றே சிந்திப்போம்.
கற்றது தமிழ்….பெற்றது…?
தற்காலப் பெற்றோர்களிடத்தும் மாணவர்களிடத்தும் வினா ஒன்று எழுந்த வண்ணமிருக்கிறது. மருத்துவம் கற்றால் மருத்துவராகலாம். சட்டம் பயின்றால் வழக்கறிஞராகலாம். பொறியியல் படித்தால் பொறியாளராகலாம். கணினி படித்தால், கணிப்பொறியாளராகலாம் என்றால் தமிழை மட்டும் படித்தால் என்னவாகலாம்?
இதையே அறிவார்ந்தவர்களான அரசியல்வாதிகளும் தமிழை மட்டும் படித்துவிட்டு, தமிழ்நாட்டு எல்லையை, இந்திய எல்லையைத் தாண்டி வேலைக்குச் செல்ல முடியுமா? என்று வீராவேசமாய்க் கேட்கிறார்கள். தவிரவும், தமிழ் (தாய்மொழி) வழிக் கல்வி கற்றால் எந்தப் பயனும் இல்லை என்று ஏளனமாய்ச் சிரிக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்வதானால், தமிழ்மொழியாகிய இலக்கியம் படித்தவர்களே கற்பனை மிகுந்த கலைஞர்களாக, படைப்பாளர்களாக, மனிதப்பண்பு மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
‘அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பில் லாதவர்’
எனத் திருவள்ளுவர் மக்கட்பண்பின் மாண்பினைக் கூறுகிறார்.
தாய்மொழி வழிக்கல்வி கற்கின்றவன் தனிப்பெரும் தலைவனாக உயர்நிலைக்கு வரமுடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு, அணு விஞ்ஞானத்தில் சாதனை படைத்த நம் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் ஆவார். இவர் தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் எளிய மீனவக் குடும்பத்தில் பிறந்து தமிழ் வழிக்கல்வி கற்றவர். இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளும் தாய்மொழி வழிக்கல்வியே மனிதனை மனிதனாக்கும் என உணர்த்தியுள்ளார்.
தமிழுக்கும் உண்டோ எதிர்காலம்?
தமிழகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழ் கற்றால், அம்மாணவன் ஆசிரியனாகப் போகலாம். அது தவிர வழியில்லை என்றார்கள். “சேர்ந்தே இருப்பது வறுமையும், புலமையும்” என்றெல்லாம் வேடிக்கை செய்தார்கள். ஆனால் இன்றைக்குத் தமிழின் வளர்ச்சி நிலை என்ன?
இயல், இசை, நாடகம் என முத்தமிழாக இருந்த தமிழ், அறிவியல், நுண்கலை என ஐந்தமிழாக மாறியது. பின்னர் கால வளர்ச்சிக்கு ஏற்பக் கணினியின் (Computer) வருகைக்குப் பிறகு கணினித் தமிழும் சேர்ந்து தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானின் ஆறுமுகம் போல ஆறு தமிழாக அருந்தமிழ் வளர்ச்சி பெற்றுள்ளதை அறிகிறோம்.
தற்காலத் தமிழ்ப் பாடத்திட்டங்களிலே அடிப்படை இலக்கண இலக்கியங்களோடு,
1. இதழியல்
2. மக்கள் தகவலியல் (வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்)
3. சுற்றுலாவியல்
4. கோவிற்கலை
5. நாட்டுப்புறவியல்
6. ஆட்சித்தமிழ்
7. மேடைத் தமிழ்
8. கணினித் தமிழ்
எனப் பலவகையான விரிந்த பரப்புகள் தமிழ் கற்கும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன.
இதனால் மேற்கூறிய விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்றைப் பயில்கிற மாணாக்கர்கள்….
- நல்ல இதழாளராக (பத்திரிக்கை ஆசிரியர், நிரூபர், பிழை திருத்துநர்)
- வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக (வசனம், பாடல், கவிதை, சிறுகதை, நாடகம்)
- இரண்டாயிரமாண்டுப் பழமையுடைய கோயில்கள் நிறைந்த சுற்றுலாத் தலங்கள் அமைந்த தமிழகத்தில் நல்ல வழிகாட்டுபவராக (Guide)
- பண்பாடுமிக்க பழம் கலைகளான கரகம், கும்மி, காவடி, ஒயில் வில்லுப்பாட்டு, வழக்காற்றுக் கதைகள் முதலியவற்றை உலகுக்கு அறிவிக்கும் கலைஞராக.
- அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் இவற்றில் கலைச்சொல் கற்றறிந்த மேலாளராக, கோவில் நிர்வாக அதிகாரியாக,
- “சொலல்வல்லன் சோர்விலான்” என்பதற்கேற்ப மேடைப் பேச்சால் ஆட்சியாளராக மாறமுடியும் என்ற தன்னம்பிக்கையோடு பேச்சாற்றல் மூலம் தனி வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் புகழ்மிக்க பேச்சாளராக,
- தமிழ்க் கணினி கற்று புதிய மென்பொருள் வல்லுநராக, உலகெங்கும் இருக்கின்ற தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் பணியாற்றும் தமிழ்க் கணினி அறிஞனாக,
என இத்தகைய திறமையாளர்களாகத் திகழ்வதற்கு விரிந்து செல்லும் தமிழுலகம் ஒளிமயமாகக் காத்திருக்கிறது. எனவே, பழந்தமிழால் பயனென்ன எனப் பழங்கதைகள் பேசாமல், புதிய பாதைக்குத் திரும்புவோம்! இளம்தலைமுறையினரைத் தமிழ் கற்றால் பயனுண்டு எனக் கற்கத் தூண்டுவோம்.
நிறைவாகத், தமிழ் மொழியைக் கற்கும்போது விருப்பத்தோடும், ஈடுபாட்டோடும், கற்றுணர்ந்த சான்றோர்களின் வழிகாட்டுதலோடும், நம் மொழியைக் கற்போம்.
பாடத்திட்டப் பாடங்களை மட்டும் கற்றுப் பெயருக்குப் பின்னால் பட்டங்களைப் போட்டுக் கொள்வதால் பயனில்லை. ‘கண்டது கற்கப் பண்டிதனாவான்’ ஆர்வம் இருந்தால், தேடுதல் உள்ளம் கொண்ட திறனாய்வுத் திறன் இருந்தால் காலம் அவர்களைத் தேர்ந்த அறிஞனாக்கும்.
பிறமொழிகளைக் கற்றுக்கொள்வதால் உலக அறிவு நமக்குக் கிடைக்கும் என்பது உண்மைதான். எந்தமொழியையும் விருப்பத்தோடு கற்றுக்கொள்ளலாம். ஆனால் தாய்மொழியை நாம் பேசாவிட்டால் நம்மொழியை யார் கற்பார்? யார் பேசுவார்?
வீட்டில் ஆயிரம் ஜன்னல்கள் இருந்தாலும் வாசற்படி ஒன்றுதான். பிறமொழிகள் எல்லாம் ஜன்னல்களைப்போல, வாசற்படி தாய்மொழியைப்போல.
நம் தமிழ்மொழியின் பெருமையை நாம் அறிவோம். உலகறியச் செய்வோம்.