தமிழ்போன்ற இளங்குமரனார்…

தமிழ் இலக்கண இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுத்த சான்றோர் பலரைப் பற்றி படித்திருக்கிறோம். அத்தகைய பெருமக்களுள் ஒருவரோடு வாழ்ந்த காலத்தை எண்ணி மகிழ்கிறோம். ஆம், சமீபத்தில் நம்மைவிட்டு மறைந்த திரு.இரா.இளங்குமரனார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குக் கிடைத்தப் பெருமை.
மதுரை அருகே அமைந்துள்ள திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியில் அவர் பணிபுரிந்த காலத்தில் என் தந்தையார் புலவர் கு.குருநாதன் அவர்களுக்கு நெருங்கிய நண்பராய்த் திகழ்ந்தார். நான் பள்ளியில் படிக்கிற காலங்களிலேயே அவரின் அருந்தமிழைக் கேட்டு வியந்திருக்கிறேன்.
திரு.வி.கல்யாணசுந்தரனார், மறைமலையடிகள், பேரறிஞர் அண்ணா, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கலைஞர் கருணாநிதி போன்றோரின் எழுத்துநடையும், பேச்சுநடையும் அழகுமிகு இலக்கியத் தமிழிலேயே அமைந்திருக்கும். அவர்களைப்போன்றே எழுத்துநடையும், பேச்சுநடையும் கொண்டவர் நம் இளங்குமரனார் அவர்கள்.
1983ஆம் ஆண்டில் நான் இளங்கலை (எம்.ஃபில்.,) பட்டம் முடித்தபிறகு, ‘சோழவந்தானூர் அரசஞ்சண்முகனாரின் தமிழ்ப்பணி’ என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினை மேற்கொள்ளுமாறு என் தந்தையார் என்னைப் பணித்தார். அரசஞ்சண்முகனார் அவர்களின் நூல்கள் பல நான் என் ஆய்வுகளுக்காத் தேடியபோது கிடைக்கவில்லை. அப்படி இருந்த சமயத்தில் திரு.இளங்குமரனார் அவர்களைச் சந்திக்குமாறு என் தந்தை கூறினார்.
அதன்படி திருநகரில் திரு.இளங்குமரனார் அவர்கள் நூலகத்தில் அவரைச் சந்தித்தேன். என்னை அன்போடு வரவேற்ற அவர், என் தந்தையார் குறித்து நலம் விசாரித்த பின், தன் நூலகத்தை என் ஆய்விற்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்ததோடு அரசஞ்சண்முகனாரின் கிடைத்தற்கரிய நூல்கள் சிலவற்றின் பிரதிகளை எனக்குத் தந்து என் ஆய்விற்குப் பேருதவியாக இருந்தார். இதை என் ஆய்வு நூலின் நன்றியுரையில் நான் குறிப்பிட்டிருப்பேன்.
பின்னர் நான் ஆய்வுப்பட்டம் பெற்ற பின்பு, திரு.இளங்குமரனாரைச் சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் அவரோடு பல்வேறு தமிழ் அரங்குகளில் இணைந்து பேசும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். ஒருமுறை அமெரிக்காவிலும் நானும் அவரும் ஒரேமேடையில் பேசினோம் என்பதைத் தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்.
அவருடைய இறுதிக்காலத்தில் மதுரையைச் சேர்ந்த திராவிட கழக இயக்கப் பற்றாளர் திரு. பி.வரதராசன் அவர்கள் திரு.இளங்குமரனார் அவர்களைத் தொடர்ந்து பேசச்செய்து, அச்சொற்பொழிவுகளைப் பதிவேற்றமும் செய்து நூல்களாகவும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இளங்குமரனார் அவர்கள் தன்னுடைய முதிர்ந்த வயதிலும் தளராது தமிழ்ப்பணி செய்த தண்டமிழ்ச் சான்றோர் என்பது உண்மை. அவரைக் குறித்து மேலும் சில செய்திகள்…..
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் ‘தமிழ்க்கடல்’ என்றழைக்கப்படுவர் இரா.இளங்குமரனார் அவர்கள். இவர் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் கிராமத்தில் 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி பிறந்தார்.
இவர் பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர், தமிழ்நெறி பரப்புநர், தமிழியக்கச் செயற்பாட்டாளர் எனப் பல முகங்களைக் கொண்டவர்.
இரா.இளங்குமரனார் அவர்கள் தம் இளம் வயதிலேயே சொந்தமாகப் பாடல் இயற்றும் அளவுக்குத் தமிழ் ஆர்வமும், புலமைத்திறனும் பெற்றிருந்தார். இவர் கொண்டுவந்த ‘செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்’ நூல் மட்டுமே நாலாயிரத்துத் தொண்ணூறு பக்கங்களைக் கொண்டதாகும்.
‘காக்கை பாடினியம்’ என்னும் இலக்கண நூலை மீட்டுருவாக்கம் செய்து அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் முழுமையாகக் கிடைக்கப்பெறாமல், காலத்தால் செல்லரித்துப்போன குண்டலகேசி காப்பியத்தைத் தன்னுடைய கற்பனைத் திறனாலும், கவிதை இயற்றும் ஆர்வத்தாலும் முழுமைபெறச் செய்தவர். அந்நூலினை 1958ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அரங்கேற்றம் செய்தார்.
இளங்குமரனார் எழுதிய ‘திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு’ எனும் நூலை 1963ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் வெளியிட்டார். பின்னர் ‘சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு’ எனும் நூலை 2003ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் வெளியிட்டார்.
தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், தொல்காப்பியர் ஆகியோரின் முழுபடைப்புகளையும் தொகுக்கிற பணியும் இளங்குமரனார் செய்தார். இவர் 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்திலேயே, மதுரை மாவட்ட தமிழாசிரியர் கழகச் செயலாளர், தமிழ்க் காப்பு கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் கவனித்து வந்தார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய தமிழண்ணல், பள்ளி ஆசிரியராக இருந்த இளங்குமரனாரை பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கும் பணிக்கும் பயன்படுத்திக்கொண்டார்.
தமிழ் முறைத் திருமணங்கள், தமிழர்கள் நீண்டகாலமாக கடைபிடித்து வந்ததும், பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டதுமான முறையில் திருமணங்களை நடத்தி வைப்பதில் ஆர்வம் காட்டினார் திரு.இரா இளங்குமரனார் அவர்கள். 1951ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பணியைத் தனது 92ஆவது வயது வரையில் அவர் தொடர்ந்தார்.
வயது முதிர்வு காரணமாக மதுரை திருநகருக்கே திரும்பிய பின்னரும்கூட அவர் தமிழ்ப்பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாதந்தோறும் நடைபெறுகிற கருத்தரங்குகளில் ஐயா அவர்கள் பங்கேற்றார். கூடவே, இளம் பிள்ளைகளுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் தொல்காப்பியம், திருக்குறள், திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு என்று எழுதினார். சுமார் 20, 30 பக்கங்களே கொண்ட இந்தக் குறுநூல்களை மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் மாதந்தோறும் வெளியிட்டு தமிழ் கற்போருக்குக் கொண்டு சேர்த்தது.
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் மிகமூத்த ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் இளங்குமரனார் அவர்களே. மதுரைத் தமிழ்ச்சங்கம் குறித்த வரலாற்று நூலையும் இவர் எழுதியிருக்கிறார்.
திரு.வி.க.போல இறுதிக்காலத்தில் கண்பார்வை பறிபோய்விட்டால், தன்னுடைய எழுத்துப்பணி பாதிக்கப்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக கண்களை மூடியே எழுதும் திறனை வளர்த்துக்கொண்டாராம் இளங்குமரனார்.
1978ஆம் ஆண்டு ஆளுநர் கையால் நல்லாசிரியர் விருதுபெற்ற இளங்குமரனார் அவர்கள், அதன் பிறகு எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
முதுமை அவரைத் தழுவினாலும் வளம் குன்றாத தமிழை உயிர்மூச்சாக கொண்டிருந்ததால் அவர் என்றைக்குமே இளங்…குமரனார்தான். தமிழ்ச்சான்றோர் உலகில் அவருக்குத் தனியிடம் எப்போதும் உண்டு.