தமிழுக்கோர் பல்கலைக்கழகம்… உமாமகேசுவரனார்….

               2006ஆம்ஆண்டு நான் மூன்றாவது முறையாக அமெரிக்கா சென்றபோது வழக்கப்படி தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) காலை மாலை சில நேரங்களில் இரவு என இரண்டு மூன்று நிகழ்;ச்சிகளில் பங்கேற்பேன். அத்தோடு வெள்ளிக்கிழமை நியூஜெர்ஸி என்றால் சனிக்கிழமை வாஷிங்டன். ஞாயிற்றுக்கிழமை ஃபுளோரிடா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு நண்பர்கள் வீட்டிலும் தங்கியிருப்பேன்.

               அப்படி நான் தங்கியிருக்கும்போது ஒருநாள் என்னை அழைத்து வந்தவர்கள் காலை உணவை எனக்குத் தந்துகொண்டே பேசத் தொடங்கினர். நான் என் பேச்சின் நடுவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைப் பற்றி தற்செயலாகக் குறிப்பிட, அவர்கள் மிக மகிழ்ச்சியாகத் ‘திரு. உமாமகேசுவரனார் அவர்கள் எங்களுடைய தாத்தாதான்’ என்று சொன்னவுடன் நான் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தினேன். அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

               அப்போது நான் சொன்ன வார்த்தைகள் இவைதான், ‘தஞ்சைத் தரணியில் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியதோடு தமிழ்மொழிக்கென ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டுமென்று நினைத்த பெருமகனார்தான் திரு.உமாமகேசுவரானர் ஐயா அவர்கள். அவரது கனவைத்தான் தமிழகத்தின் முதல்வராக இருந்த திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் 1981ஆம் ஆண்டு நனவாக்கினார். எனவே கனவு மெய்ப்பட காரணமாக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கும், அத்தகைய கனவை உலக மக்களுக்குச் சொன்ன உமாமகேசுவரானர் அவர்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவிப்பதற்காகவே நான் உங்களை வணங்கினேன். இப்போது நான் உண்ட உணவு தமிழ் தந்த உணவாக நான் உணர்கிறேன்’ என்றேன்.

               அவர்களும் என்னை வாழ்த்தியதோடு ‘நீங்கள் கற்ற தமிழால்தான் நீங்கள் அமெரிக்கா வந்திருக்கிறீர்கள். எனவே நம் அனைவரையும் ஒருங்கிணைத்தது தமிழ்தானே’ என்று மகிழ்வோடு கூறினார்கள். இத்தகைய பெருமைமிகுந்த திரு. உமாமகேசுவரானர் அவர்களைப் பற்றிய அரிய செய்திகளை மேலும் காண்போம்…

தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவரும், தமிழறிஞரும், வழக்குரைஞரும், சமூகசேவையாளருமான ‘தமிழவேள்’ உமாமகேசுவரனார் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கருந்திட்டைக்குடி என்னும் ஊரில் 1883ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிறந்தார். வல்லத்திலும், கும்பகோணத்திலும் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற உமாமகேசுவரனார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.

               பின்னர், சட்டப்படிப்புப் படிக்கச் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்வியில் தேர்ச்சிபெற்ற பின்னர், தஞ்சை கே.சீனிவாசப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.

               உமாமகேசுவரனாரின் பேச்சாற்றல் வளர வளர, அவரது வழக்குரைஞர் பணிக்கு மிகவும் உதவியாக இருந்தது. பணம் கொடுக்க இயலாத நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக வழக்காடி வெற்றி தேடித்தந்தார். இவருடைய நேர்மையை அறிந்த அன்றைய அரசு, இவரை அரசு கூடுதல் வழக்குரைஞர்” பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.

               கரந்தைத் தமிழ்ச்சங்கம் தொடங்கியபோது, அதன் உறுப்பினர்களாக வி.சாமிநாதப்பிள்ளை, எல்.உலகநாதப் பிள்ளை, ஆர்.வேங்கடாசலம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நீ.கந்தசாமிப் பிள்ளை, த.வே.உமாமகேசுவரனார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் புரவலர்களாக பெத்தாச்சி செட்டியார், கோபாலசாமி இரகுநாத இராஜாளியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். பின்னர் த.வே.உமாமகேசுவரனார் சங்கத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்று செயல்பட்டார்.

               தொண்டு – தமிழ் – முன்னேற்றம் ஆகிய மூன்றும் சங்க இலச்சினையில் பொறிக்கப்பட்டு, சங்கத்தின் குறிக்கோளாக “உலக மக்களிடையே தமிழின் பெருமையை பரப்புவது” என்று பறைசாற்றப்பட்டது.

               கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தனிப்பெரும் தலைவராக விளங்கிய உமாமகேசுவரiனார், ‘இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சமஸ்கிருத ஆதிக்கம் காரணமாகத் தமிழ் தன் பெருமை இழந்து நின்றது. உயர்ந்த பதவியில் இருந்தவர்களுக்குத் தமிழ் தெரியாது. தூய தமிழும் பலருக்கு எழுதவோ, பேசவோ வராது. இந்நிலையில்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ் வளர்க்கத் தோன்றியது” என்பார்.

               மேலும் இவர் திருவையாறு கல்லூரியைத் தமிழ் மயப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அவர் தமிழ்க்கல்வி பாடத்திட்டத்தை தமிழறிஞர் கா.நமச்சிவாயர் அவர்களைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்டார். அத்தோடு திருவையாறு கல்லூரியை அரசர் கல்லூரி எனப் பெயர் மாற்றினார். தமிழ்ப் பட்டப்படிப்பை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கற்றுத் தரவும் ஏற்பாடு செய்தார் உமாமகேசுவரனார்.

               அந்நாளில் ஒருவரது பெயருக்கு முன் மரியாதை தரும் பொருட்டு வடமொழியில் ஸ்ரீமான் என்றும், ஸ்ரீமதி என்றும் அழைக்கப்பட்டு வந்தது. வடமொழி எதிர்ப்பில் என்றும் உறுதி காட்டி வந்த உமாமகேசுவரனார் இதிலும் உறுதியாய் நின்று திருமகன், திருவாட்டி என்று தனித்தமிழில் மாற்றிக் காட்டினார்.

               உமாமகேசுவரனார் அரசுப் பதவியில் இருந்தபடி சமூகநலத் தொண்டுகள் புரிந்தபோதிலும் அவரது சிந்தனை முழுவதும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நோக்கியே இருந்தது.

               மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் “செந்தமிழ்” இதழ்போல கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற்கும் ஓர் இதழ் வெளிக்கொணர முடிவு செய்தார். இதழ் வருவதற்குப் பணம் போதாமை காரணமாக இருந்தது.  பெருமுயற்சிக்குப் பின்னர் 1919ஆம் ஆண்டு இதழுக்குத் தமிழ்ப்பொழில்” என்று பெயர்ச் சூட்டப்பட்டும் இதழ் தொடங்கப்படாதது கண்டு மனம் வருந்தினார். ஒருவழியாக பதினோரு ஆண்டுகள் கழித்து 1925ஆம் ஆண்டு தமிழ்ப்பொழில் இதழ் வெளிவந்தது.

தூய தமிழ்ச்சொற்களை அவ்விதழில் பயன்படுத்தினார். இதழாசிரியர் என்பதை ‘பொழிற்றொண்டார்’ என்றும், தனியிதழ் ‘மலர்’ என்றும், பன்னிரு மலர்கள் கொண்ட ஓராண்டுத் தொகுப்பை ‘துணர்’ (பூங்கொத்து) என்றும், உறுப்பினர் கட்டணம் என்பதை ‘கையப்பத் தொகை’ என்றும், விலாசம் என்பதை ‘உறையுள்’ என்றும் ஆங்கிலத்தில் வி.பி.பி. என்பதை ‘விலை கொளும் அஞ்சல்’ என்றும் அச்சிட்டு வெளியிட்டார் உமாமகேசுவரனார்.

நக்கீரன், யாழ் நூல், தொல்காப்பிய உரை, நெல்லை வருக்கக் கோவை, தமிழரசி குறவஞ்சி, பரத சாத்திரம், சிலப்பதிகார புகார்க் காண்டம், சிவமும் செந்தமிழும் ஆகிய நூல்களையும் அச்சிலேற்றி வெளிக்கொணர்ந்தார் உமாமகேசுவரனார்.

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய ‘நீராருங் கடலுடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் முதன்முதலில் அறிமுகம் செய்துவைத்த பெருமை உமா மகேசுவரனாருக்கே உரியதாகும்.

26.12.1937ஆம் ஆண்டு திருச்சியில் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒருங்கிணைப்பில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை வகித்தார். உமாமகேசுவரனார் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில்தான் பெரியார் தமிழறிஞர்களோடு முதன்முறையாகத் தன்னை இணைத்துக்கொண்டு இந்தித் திணிப்பைக் கண்டித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

15.04.1938ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவில் உமாமகேசுவரனாருக்குத் ‘தமிழ வேள்’ எனும் பட்டத்தை நாவலர் சோமசுந்தர பாரதியார் வழங்கினார்.

உமாமகேசுவரனார் அவர்களுக்கு 1935ஆம் ஆண்டு அன்றயை சென்னை மாகாண அரசால் ராவ் பகதுர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இரவீந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்ட ‘சாந்தி நிகேதன்’ போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச்சங்கமும் விளங்க வேண்டும் என எண்ணினார் உமாமகேசுவரனார். அதன் பொருட்டுத் தம் நண்பர் அ.கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

கொல்கத்தா சென்று சாந்தி நிகேதனைப் பார்வையிட்டார். பிறகு காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். அப்போது அவரது உடல்நிலை குன்றி, காய்ச்சல் கண்;டதால், அயோத்தியின் அருகேயுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 1941ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் நாளன்று தமிழாகவே வாழ்ந்த தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

பாண்டியநாட்டில் (மதுரையில்) முச்சங்கங்கள் இருந்தன என்பதை நாம் அறிகிறோம்.

இதேபோல் சோழநாட்டில் தமிழுக்கு ஒரு சங்கத்தைத் தொடங்கிய பெருமை உமாமகேசுவரனாருக்கே உண்டு.

உமாமகேசுவரன் என்பது கண்ணுதற் பெருங்கடவுளான சிவபெருமானையே குறிக்கும் என்பதுதான் வியப்பான செய்தி.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.