தமிழில் கணக்கியல்

‘கணக்கு’ என்று சொன்னாலே ‘கசப்பு’ என்பதுபோல பலர் நினைப்பதுண்டு. மகாகவி பாரதி கூட பள்ளியில் படிக்கும்போது கணக்கு வகுப்பிலே,
‘கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்று கவிதை எழுதிக் கொண்டிருப்பாராம். தவிரவும் தற்காலத்தில் கணக்கு என்பதைத் (Mathematics) தனிப்பாடமாகப் பகுத்திருக்கிறோம். அதைத் தனியேதான் படிக்கவேண்டும் என்றும் நினைக்கிறோம். அது மட்டுமில்லை, கணக்குப் படிக்கும் ஒருவருக்குத் தமிழ் தெரிய வேண்டியதில்லை. தமிழ்மொழி படிக்கும் ஒருவர் கணக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் பழங்காலத்தில் தமிழோடு சேர்ந்தே கணக்கும் இருந்திருக்கிறது. அதனால்தான் ஆசிரியரைக் ‘கணக்காயர்’ என்று சொல்வதுண்டு.
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
எனக்கூறும் தமிழ் இலக்கியப் பழம்பாடல்கள், கணக்கில் வருகின்ற எண்ணுக்கே (Numbers) முதலிடம் கொடுத்திருப்பதை எண்ணி வியக்கிறோம்.
‘எண்களே மனிதனுக்கு முதலில் அறிமுகமாகியிருக்க வேண்டும். பின்னரே எழுத்து, மொழி தொடர்ந்திருக்க வேண்டும்’ என்று கூறுவார் அறிவியலாளர், தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி. உதாரணமாக நமது கிராமங்களில் பால் கணக்குப் போடுகின்ற, மீன் விற்கின்ற, பழங்கள் விற்கின்ற பல பெண்களுக்கு எண்ணிக்கையில் கணக்குப் போடத் தெரியும். எழுத்தைப் படித்துக் கையெழுத்துப் போடத் தெரியாது.
காரி நாயனார் என்பவர் ‘கணக்கதிகாரம்’ என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். இத்தகைய பெயரே பலர் கேள்விப்பட்டு இருப்பார்களா எனத் தெரியவில்லை. ஆங்கிலேயர்கள் ஏறத்தாழ 300 ஆண்டு காலம் நம்மை ஆட்சி செய்ததால் நாம் புதுமையை ஏற்கிறோம் என்ற பெயரில் பல அரிய செய்திகளைக் கவனமின்மையால் இழந்துவிட்டோம். மறந்துவிட்டோம் அல்லது கவனமாகவே மறந்துவிட்டோம்.
ஆனால் நமது தமிழ் மக்கள் கணக்குப் பற்றிய கல்வியில் மிக உன்னதமான இடத்தில் இருந்திருக்கிறார்கள். 3000 ஆண்டுகளுக்கு முந்திய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ‘புள்ளி மயங்கியல்’ பகுதியில் எண்களுக்கான குறிப்புகள் இருக்கின்றன. அல், ஆம்பல், போன்ற சொற்கள் 1000, 10000 என்னும் எண்ணிக்கையைப் போலப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவைதவிர கீழ்வாய்ச் சிற்றிலக்கம், மேல்வாய்ச் சிற்றிலக்கம் என்று சில முறைகள் இருந்திருக்கின்றன. கீழ்வாய்ச் சிற்றிலக்கம் என்பது எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வருவது. 10, 9, 8… என ஒன்றுக்கும் அதற்குக் கீழுள்ள பின்னங்களின் எண்ணிக்கை வரை (¾, ½, 1/4,….) என வருவது. மேல்வாய்ச் சிற்றிலக்கம் என்பது கீழிருந்து மேலாக 1,2,3…. என எண்ணிக்கொண்டு செல்வது. எடுத்துக்காட்டாக 1- என்ற எண்ணை எடுத்துக்கொண்டால், இதை ¾ – முக்கால், ½ – அரை, ¼ – கால், 1/8 – அரைக்கால் பிறகு 1/16இ 1/64 என்பதை மாகாணி, முந்திரி என்று பெயர் கொடுத்துச் சொல்வது வழக்கம். தற்காலத்தில் இதை 1.5, 1.75, 1.25…. எனக் குறிப்பிடுவர். மேலே சொன்னவற்றில் ‘முந்திரி’ என்ற சொல் முந்திரிப்பருப்பு எனும் உணவுப்பொருளைக் குறிப்பதில்லை. அது ஒன்றுக்குக் குறைந்த மிகச் சிறிய எண்ணைக் குறிக்கும் சொல்லாகும்.
சமணமுனிவர்கள் எழுதிய நாலடியார் என்ற நூலில் ஒரு பாடலில், சாதாரண கல்வியறிவில்லாத கீழ் மக்களுக்குக் குறைவான செல்வம் வந்தாலும் அவர்கள் தேவலோகத்து இந்திரப் பதவி கிடைத்தாக எண்ணி ஆர்ப்பாட்டம் செய்வார்களாம். இக்கருத்தை,
‘முந்திரிமேல் காணி மிகுவதால் கீழ்தன்னை
இந்திரனாய் எண்ணி விடும்….’
இதில் வருகின்ற காணி என்ற சொல்லும் எண்ணிக்கை வகையைச் சார்ந்ததுதான். நிலப்பிரிவுகளை அளக்கும்போது செய், மா, காணி என்ற சொற்களைப் பயன்படுத்துவர்.
நம் பாரதிகூட, ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’ எனப் பராசக்தியிடம் வேண்டுவதைப் பார்க்கிறோம். முந்திரி என்ற சொல்லை நில அளவைக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
2 முந்திரி சேர்ந்தது – ஒரு அரைக்காணி
2 அரைக்காணி சேர்ந்தது – 1 காணி
4 காணி சேர்ந்தது – 1 மா
5 மா சேர்ந்தது – 1 கால்
4 கால் சேர்ந்தது – ஒன்று (1)
இந்த ‘1’ என்ற எண்ணிக்கைக்குள் இத்தனை செய்திகள் இருப்பதை நாம் நம் பழந்தமிழ் கணக்கியல் முறையில் காண்கிறோம். இதிலொரு ஆச்சரியம், இத்தனை இலக்கங்களையும் அக்காலத்திலிருந்தவர்கள் மனக்கணக்காய்ப் போட்டிருக்கிறார்கள் என்பதுதான்.
இன்றைக்கு மனப்பாடக் கல்வி தேவையில்லை, கால்குலேட்டர், கணினி வந்துவிட்டதால் மனப்பாடம் தேவையில்லை என்ற கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது. இருந்தாலும், வீட்டிலுள்ள வயதான பெரியவர்கள் வெகு விரைவாக முப்பத்தி அரைக்கா மூணயமுக்கா, முப்பத்தி கா ஏழரை என்று சொல்வதைப் பார்த்து வியப்படைகிறோம்.
அடுத்தது ஜீரோ, சைபர் இதைக் கண்டுபிடித்து உலகுக்குச் சொன்னவர்கள் இந்தியர்கள். குறிப்பாக ஆரியபட்டர் என்பவர்தான் இதனைக் கண்டுபிடித்தார் எனக் கூறுவதுண்டு. ஆனால் தமிழில், ஜீரோ (அ) சைபரை சூனியம், பாழிடம், சுழி என்ற சொற்களால் அழைத்திருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் எத்தனையோ கணக்கியல் முறைகள் இருந்தாலும், தமிழில் மொழியோடு இயைந்த கணக்கியல் முறைகளை நாம் மறுவாசிப்புச் செய்வதும் நல்லது. பழந்தமிழ் கணக்கியல் முறையில் உலகுக்கு அறிவிக்க ஆயிரம் செய்திகள் உண்டு.
பழந்தமிழ் கணக்கியல், தமிழர் தம் வாழ்வின் வழக்கியலில் வரவேண்டும்.