தமிழில். . . அறிவியல். . .

உலகிலுள்ள மொழிகளைப் பற்றி மொழிநூல் அறிஞர்கள் கூறும்பொழுது,
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு எனக் குறிப்பிடுவர்.


ஆங்கிலமொழியை ‘அரசாங்க மொழி’ என்றும், பிரெஞ்ச் மொழியை
‘இசைமொழி’ என்றும், உருதுமொழியைக் ‘கவிதைமொழி’ என்றும் கூறுவது
வழக்கம். அதுபோல இந்தியமொழிகளில் வங்கமொழியைக் கவிதைமொழி
என்று கூறும்போது, பழைமைச் சிறப்பும் புதுமைப்பொலிவோடும் விளங்குகின்ற
தமிழ்மொழியை பக்திமொழி என்று குறிப்பிடுவர்.

அதனால்தான் ஜி.யு.போப் என்ற
மேல்நாட்டு அறிஞர் திருவாசகத்தை மொழிபெயர்த்து அதனுடைய
பக்திஉணர்வில் ஈடுபட்டுத் தன்னை ஒரு ‘தமிழ் மாணவன்’என்று அறிவிக்குமாறு
வேண்டினார்.


இரண்டாயிரம் ஆண்டுப் பழைமையுடைய தமிழ் இலக்கிய வரலாற்றில்
7ஆம் நூற்றாண்டு தொடங்கி 18ஆம் நூற்றாண்டுவரை நமக்குக் கிடைத்திருக்கிற
இலக்கியங்களில், தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் போன்ற
பக்தி இலக்கியங்களே மிகுதியும் இடம் பெறுகின்றன. இத்தகைய தமிழ்
மொழியில் அறிவியல் செய்திகள்
எனப் பார்க்கும்போது தனியாக
அறிவியலுக்கென ஒரு பகுதியைப் பற்றி அறிய முடியவில்லை.


ஆனால், சங்கஇலக்கியங்களில் வானநூல் அறிவைப் பெற்ற அறிஞர்கள்
இருந்திருக்கிறார்கள் என்பதைக் கணியன் பூங்குன்றன் போன்ற புலவர்களின்
பெயர்கள் மூலமாக அறிய முடிகிறது. வானில் திரிகின்ற கோள்கள் பற்றிய
செய்திகளை, சங்கஇலக்கியப் பாடல் வரிகள் மூலமாக நாம் அறிகிறோம்.
சனி என்னும் கோள் பற்றிய செய்தியை (சிலப்பதிகாரம்,புறநானூறு)
குறிப்பிடுகின்றன.


‘வலவன் ஏவா வான ஊர்தி’ எனும் பாடல் வரி, தற்காலத்தில் ஆளில்லாமல்
ஏவப்படுகின்ற ஏவுகணைக்கு இணையாகச் சொல்லப்படுகிறது.

சூரியக்குடும்பத்தில் ஒன்பது கோள்கள் (நவக்கிரகங்கள்) இருக்கின்றன
என்பதை 14ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த கலிலியோ,
தொலைநோக்குக் கருவியை (டெலஸ்கோப்)
கண்டுபிடித்த பிறகுதான் விஞ்ஞான
உலகம் அறிந்துகொண்டது. ஆனால் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
திருஞானசம்பந்தர் இறைவன் அருள் இருக்கிறபோது பிறகோள்களால் தீமை
ஏற்படாது என்பதை ‘கோளறு பதிகம்’ எனும் தேவாரப் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.


8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்’
என்றழைக்கப்படுகின்ற ஆண்டாள் தன்னுடைய பாடல்களில் பக்திச் சுவையோடு
‘காலம்’ பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகிறார். மழை எவ்வாறு பெய்கின்றது
என்கின்ற அறிவியல் பார்வையும் கொண்டவராக ஆண்டாள் விளங்குவதைக்
காண்கிறோம். ஆண்டாள் தமது திருப்பாவையில்;

‘வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று’

என்று விடியற்காலை நேரத்தைக் குறித்து ஒரு செய்தியைக்
குறிப்பிடுகிறார். இதில் வியாழன் கிரகம் பற்றிய குறிப்பும், வெள்ளி கிரகம் பற்றிய
குறிப்பும் நமக்குக் கிடைத்திருப்பது ஓர் அரிய செய்தி. இது மார்கழி மாதத்தில்
விடியற்காலைப் பொழுதில் நிகழும் என்பதையும் ஆண்டாள் குறிப்பிடுகிறார்.


ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய சீவக சிந்தாமணியில், சச்சந்தன்
என்னும் அரசனின் மனைவியாகிய விசயை விண்ணில் பறக்கும் மயிற்பொறி
ஊர்தியொன்றில்
பறந்து சென்று, எதிரிகளிடமிருந்து தப்பியதாக காப்பியத்தைப்
பாடிய திருத்தக்கத் தேவர் பதிவு செய்கிறார்.


கம்பராமாயணத்தில் சீதையைத் தூக்கிச்சென்ற இராவணன் ஏறிச்சென்ற
விமானம் தரையில் சற்றுதூரம் ஊர்ந்து சென்று விண்ணை நோக்கிப் பறந்ததாகக்
கம்பர் குறிப்பிடுகிறார். இராமனும், இலக்குவனும் அத்தேரின் சக்கரங்கள் பதிந்த
தடத்தைத்
தொடர்ந்து சென்று பார்த்தார்கள். பிறகு அத்தடம் மறையவே அது
விண்ணில் பறந்திருக்கலாம் என யூகித்தார்கள். இன்றைக்கும் கூட
ஆகாயவிமானங்கள் சற்றுதூரம் தரையில் ஓடிய பின்பே (Runway) விண்ணில்
பறக்கின்றன.


இவ்வாறு பல அரிய அறிவியல் செய்திகளைத் தமிழ் இலக்கியங்களில்
கூர்ந்து நோக்கினால் அறியமுடியும்.

தமிழும், அறிவியலும், ஆன்மீகமும்,தனித்தனித் துறைகளாக இருந்தபோதும், அவற்றை இணைத்துப் பார்க்கிறபோது புதிய சிந்தனைகள் தோன்ற வழியிருக்கிறது.


தமிழையும், அறிவியலையும் ஆழ்ந்து கற்போம்; நம் மொழியின் பெருமையை அறிவோம்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.