தமிழகத்தின் முதல் விடுதலைப்பெண் குரல்… வேலு நாச்சியார்

ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியபோது நமக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு நம்மை அவர்கள் வீழ்த்தினர். அதனால்தான் பிற்காலத்தில் மகாகவி பாரதியார்கூட,
‘ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி? – ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர், தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ’
என்று நம் நிலை குறித்துப் பாடியுள்ளார்.
இந்தியாவிலேயே விடுதலைக்கான முதல் வீரக்குரல் நெற்கட்டான் செவ்வலை ஆண்ட பூலித்தேவனுடைய குரல் என்றால், அதேபோல அதற்குப்பின் வந்த தென்னரசியாம் வீரமங்கை வேலுநாச்சியும் வீரக்குரல் எழுப்பினார். ஆங்கிலேயரை எதிர்த்து இழந்த தன்னுடைய சிவகங்கை பகுதியை மீட்டு அரசியானார்.
தன் கணவரான முத்து வடுகநாதரைக் காளையார்கோவிலில் சூழ்ச்சி செய்து ஆங்கிலேயர்கள் கொன்றதை அறிந்து, அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், இழந்த தன் நாட்டைமீட்க வேண்டும் என்ற கோபத்தோடும், தான் பெற்ற மகள் வெள்ளச்சி நாச்சியாரோடு காடு, மேடுகளிலும் கோட்டைக் கொத்தளங்களிலும் வாழ்ந்து, பின்னர் மைசூரை ஆண்ட ஹைதர் அலியைச் சந்தித்து அவரோடு உருதுமொழியிலேயே உரையாடி பெரும் படையோடு சிவகங்கையை நோக்கி வந்தார்.
போர்க்களத்தில் வாள் வீச்சில் வல்லமை பெற்றிருந்த வேலுநாச்சியார் அந்தப் போர்க்களத்தில் தேடியது தன் கணவரைக் கொன்ற அந்த ஆங்கிலேயத் தளபதி பான்ஸோரைத்தான். அவனைக் கண்டுபிடித்து அவனோடு நேருக்கு நேர் நின்று போரிட்டு அவன் கழுத்தில் தன் வாளை வைத்து அழுத்தி, ‘இந்த நாளுக்காகத்தானடா இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன், உன் மரணம் என் கையால் நிகழ வேண்டும்’ என்று வீரஆவேசமாக வேலுநாச்சியார் பேசியபோது, தமிழ்தெரியாத அந்த ஆங்கிலேயன் உயிர்போகும் நேரத்திலே, ‘என்ன கூறுகிறார்கள்?’ என்று தெரியாமல் விழிக்க, உடனே வேலுநாச்சியார், தன் கருத்தை ஆங்கிலத்தில் அவனுக்குச் சொல்லி, ‘என்னடா செய்யட்டும்? துக்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்த என் தாய்மொழி தமிழ்மொழிபோல் உலகில் வேறு மொழி இல்லையேடா’ என்று பலமொழிகளை அறிந்த வேலுநாச்சியார் கூறிவிட்டு, அவன் கழுத்தில் வாளைப் பாய்ச்சி, அவனைப் பழிவாங்கினார் என்பது வரலாறு. அத்தகைய வேலுநாச்சியார் பற்றி மேலும் சில செய்திகளைக் காண்போம்…
இராணி வேலுநாச்சியார் என்ற பெயரை கேட்டாலே அவரின் வீரமும், ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போர்களும்தான் நினைவுக்கு வரும். அதனால்தான் அவரை வீரமங்கை வேலுநாச்சியார் என்று அழைக்கிறோம். இந்தியாவின் முதல் பெண் விடுதலைப்போராட்ட வீராங்கனை அவரே ஆவார்.
வேலுநாச்சியார் 1730ஆம் ஆண்டு இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி – ‘சக்கந்தி’ முத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப் பிறந்தார். பெண்ணாக இவர் பிறந்தாலும் ஓர் ஆண்வாரிசாக வளர்க்கப்பட்டார். கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டிஎறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்துத் திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது மொழிகளையும் கற்றறிந்தார் வேலுநாச்சியார்.
சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதரை 16ஆவது வயதில் மணந்து பட்டத்து ராணியானார். வடுகநாதர், ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேயப் படையின் உதவியோடு நவாபின் படைகள் சிவகங்கை மீது போர் தொடுத்தன.
காளையார்கோவிலில் இருந்து மன்னர் வடுகநாதரை திடீரென்று தாக்கிக்கொன்று, காளையார்கோயில்கோட்டையைத் தங்கள் வசப்படுத்தினர். இவர்களிடமிருந்து தப்பித்த வேலுநாச்சியார் சின்னமருது, பெரியமருது துணையோடு தப்பிச்சென்று ஹைதர் அலியின் உதவியை நாடினார். வேலுநாச்சியாரின் வீரத்தையும்; விவேகத்தையும் மெச்சிய ஹைதர் அலி அவருக்கு உதவினார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாச்சிக் கோட்டை, அய்யம்பாளையம் என இடம் மாறி மாறி முகாமிட்டு ஆங்கிலேயரை அடித்து விரட்டத் தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார் வேலுநாச்சியார்.
ஆங்கிலேயப் படையை அழித்து, நவாபை வீழ்த்தி, சிவகங்கைச் சீமையில் தங்கள் அனுமன் கொடியை மீண்டும் பறக்கவிடுவது என்று சபதமேற்றார் வேலுநாச்சியார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருது சகோதரர்களை அழைத்துக்கொண்டு குறுநில மன்னர்களை ஒன்றுசேர்த்துப் போராடப் பல இடங்களுக்கும் சென்றார். 1780இல் ஹைதர் அலியின் படையைத் தலைமையேற்று நடத்திச் சென்றார். தன் படைகளை மூன்றாகப்பிரித்து மும்முனைத் தாக்குதல் நடத்தி வெற்றி வாகை சூடினார்.
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனையில் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். வேலுநாச்சியாரும் அவரது மகளிர் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்திக் கோட்டையைக் கைப்பற்றினர்.
சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தபோது வீரமங்கை வேலுநாச்சியாருக்கு 50வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி வேலுநாச்சியார்தான். ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு அனுமன்கொடி ஏற்றப்பட்டது. வேலுநாச்சியார் சிவகங்கை அரசியாகப் பதிவியேற்றார்.
வேலுநாச்சியாரின் ஆட்சியில் சிவகங்கை பல்வேறு வகையிலும் வளர்ச்சி அடைந்தது. படையெடுப்புகளால் சிதைந்த கோட்டைகளைச் சீரமைத்தார். விவசாயத்தை விரிவுபடுத்தி, ஆறுகளை அகலப்படுத்தினார். துணைக்கால்வாய்கள் தோண்டப்பட்டன, கோயில்களைச் செப்பனிட்டார்.
வேலுநாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.
ராணி வேலுநாச்சியார் நினைவு தபால் தலை இந்திய அரசால் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
ஆங்கிலேயக் கொடியை (யூனியன் ஜாக்) வீழ்த்திய அனுமன் கொடி. இந்தச் சாதனை வேலுநாச்சியார் ஒருவரால் மட்டுமே இந்திய வரலாற்றில் நிகழ்ந்தது. வேலுநாச்சியாரின் வீரத்தைப் போற்றுவோம்.